இளைஞர்களே ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்வீர்!
கருநாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையுடைய பி.ஜே.பி. ஆட்சி செய்வதால், பாடத் திட்டங்களில் திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளன. தந்தை பெரியார், நாராயண குரு, அம்பேத்கர் , பசவண்ணா போன்ற சமூகப் புரட்சியாளர்களின் கருத்துகள் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இளை ஞர்களே, ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்வீர், விட்டில் பூச்சியாகாதீர்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கருநாடக மாநிலத்தில் பச்சையான வகையில் ஆர்.எஸ்.எஸ். - காவி ராஜ்ஜியம் - அரசமைப்புச் சட்ட அடிப்படை லட்சியங்களான சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகக் குடியரசு லட்சியங் களைப் புறந்தள்ளிய ஆர்.எஸ்.எஸ். கொள்கை களை அப்பட்டமாக செயல்படுத்தும் ஆட்சி அங்கே நடைபெறுகிறது.
கருநாடகத்தில் பாடத் திட்டங்களில் திரிபுவாதம்
புதிதாக பதவியேற்ற முதலமைச்சர் அவர்கள், அரசியல் பதவிப் போட்டியைத் தக்க வைக்க, ஆர்.எஸ்.எஸ். ஆதரவே பிரதானம் என்பதாலோ என்னவோ ‘இராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசி யாக' தனது ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கே உள்ள பாடத் திட்டங்களில் இருந்த தந்தை பெரியார்பற்றிய பாடத்தையும், நாராயண குரு, பகவத்சிங் போன்ற சமூகப் புரட்சியாளர்கள்பற்றிய பாடத்தையும் நீக்கிய தோடு, கருநாடகத்தில் லிங்காயத்து சமயத்தை நிறுவிய பசவண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் பாடத் திட்டங்களில் மிக முக்கியமான அவர் களின் தனித்துவ சரித்திர சாதனையான - ஜாதி ஒழிப்பினை அடையாளப்படுத்துவதை அப்படியே மாற்றி, ஒரு திரிபுவாதத்தினைச் செய்துள்ளனர்.
இதை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரான எஸ்.சி., எஸ்.டி., மக்களும், லிங்காயத்துகளும் கண்டனக் குரல் எழுப்பி, தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
ஜாதியைக் காப்பாற்றுவதுதான்
ஆர்.எஸ்.எஸின் கொள்கை
கருநாடக பாட நூல் குழுவின் தலைவர் ஒக்கிலிக்கா பிரிவைச் சேர்ந்தவர் ஆதலால் அவர் கூறிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
தேவையற்ற ஜாதி மோதல்களுக்கும், கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டங்களுக்கும் இந்தப் பாட நூல் திரிபுவாதம் வழிவகுப்பது நியாயந்தானா? என்பது அறிவார்ந்த பொது வானவர்களின் கேள்வி.
இதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை ஜாதியை ஒழிக்காமல் பாதுகாக்கவேண்டும் என்பதாலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
எப்படியெனில், ஆர்.எஸ்.எஸ். தத்துவகர்த் தாவான (Ideolog) கோல்வால்கர் எழுதிய ‘ஞானகங்கை' (Bunch of Thoughts) என்ற நூலில் ஜாதியை ஒழிப்பதுபற்றி பேசவே கூடாது என்று கண்டித்துள்ளனர். (வேறு பகுதியில் இதைப் பெட்டிச் செய்தியாக தந்துள்ளோம், காண்க).
பசவண்ணா, அம்பேத்கர்
கருத்துகள் சிதைப்பு
‘‘பசவண்ணா ஜாதியைக் கண்டித்ததல்லாமல் அவர் முதுகில் அணிந்திருந்த பூணூலை ஒரு நிகழ்ச்சி நடத்தி அதை நீக்கி எறிந்துவிட்டார்.
மனிதநேய அடிப்படையில் அமைந்த அவரது தத்துவங்களை வீர சைவத் தத்துவமாகப் போதித்தார். வைதீக சடங்கு, சனாதன சம்பிர தாயங்களை நீக்கினார் பசவண்ணா'' என்ற வரிகள் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டன. வீர சைவ மதத்தினைச் சீர்திருத்தம் செய்தார் என்று மாற்றித் திரித்து எழுதப்பட்டுள்ளது.
அதுபோலவே, ‘‘டாக்டர் அம்பேத்கர் ஜாதி முறையைக் கண்டு, ஹிந்து தர்மத்தை ஏற்காமல் பெரிதும் வருந்தியே அவர் புத்த மதத்திற்கு மாறினார்'' என்ற வாசகங்களையும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் வாக்கியங்களை மாற்றி, ‘‘அவரது முதுமைக்காலத்தில் ஹிந்து தர்மத்திலிருந்து வெளியேறி, இந்திய பாரம்பரியத்தில் உள்ள புத்த மதத்திற்கு மாறினார்'' என்று திரித்து எழுதியதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
இளைஞர்களே, சிந்தியுங்கள்!
இளைஞர்களே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கு சென்றுள்ள ஒடுக்கப்பட்ட இளைஞர்களே, ஜாதி ஒழிப்பில் நம்பிக்கை உள்ள சிந்தனையாளர்களே, ஒடுக்கப்பட்டோரே, சமூகநீதியை விரும்புபவர் களே, இதன் பிறகும் காவிக் கட்சியில் நீடிக்க லாமா? சேரலமா?
இதற்குப் பிறகும் ஜாதியைக் காப்பாற்றி, பஞ்சமர்களாக, கீழ்ஜாதி இழிவோடு இருக்கவே செய்வோம் என்பது போன்று இருந்தால், அதைவிட ‘‘பந்தயம் கட்டிக் கெட்டுப் போகும் மூடத்தனம்'' வேறு உண்டா? யோசித்துப் பாருங்கள்!
உயர்ஜாதி ஆதிக்க நுகத்தடியை எவ்வளவு காலத்திற்கு நீங்கள் சுமந்து சுண்ணாம்பாகப் போகிறீர்கள்?
சிந்திக்க மாட்டீர்களா?
விளக்கு நோக்கிச் சென்ற விட்டில்களே, விழித்துக் கொள்ளமாட்டீர்களா? என்பது நமது உரிமைமிகு கேள்வியாகும்.
எந்த நிலையிலும் உங்களுக்கும் சேர்த்து உழைக்கும் எளியவர்களின் கேள்வி - நியாய மான கேள்வி இது!
யோசியுங்கள், புரிந்துகொள்ளுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.6.2022
No comments:
Post a Comment