புலம்பெயர் வாக்காளர்களுக்கு தொலைதூர வாக்குப் பதிவு வசதி: ஆணையம் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

புலம்பெயர் வாக்காளர்களுக்கு தொலைதூர வாக்குப் பதிவு வசதி: ஆணையம் ஆலோசனை

புதுடில்லி, ஜூன் 9  புலம்பெயர் வாக்காளர்கள் நாடு முழுவதும் அதிகளவில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் அனைவராலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. இதுவும் வாக்குப்பதிவு சதவீதம் குறைய ஒரு காரணம். இவர்களுக்கு தொலைதூர வாக்குப்பதிவு வசதியை அறிமுகம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திட்டமிட்டது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் தொலைதூர மலைக் கிராமங்களான துமக் மற்றும் கல்கோத் ஆகிய பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை 18 கி.மீ தூரம் மலையேறி சென்று பார்வையிட்டார். இந்த கிராமங்களிலும் 20 முதல் 25 சதவீத வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியவில்லை. காரணம் இவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளியிடங்களில் உள்ளனர் என அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தனர்.

இதனால் சோதனை அடிப்படையில் தொலைதூர வாக்குப் பதிவுக்கான சாத்தியங்கள் குறித்து ஆராய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வேறு இடங்களில் உள்ள வாக்காளர்களால், தேர்தல் நாளில் சொந்த ஊர் வருவது சிரமமாக உள்ளது. அதனால் சோதனை அடிப்படையில் தொலைதூர வாக்குப்பதிவு வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. புலம்பெயர் வாக்காளர்களின் பிரச்சினைகளை ஆராய குழு ஒன்று அமைக்கப்படும். இது தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படும். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் சில நகர்ப்புற தொகுதிகளில் 50 சதவீதத்துக்கு குறைவாக வாக்குப்பதிவு இருந்தது. இங்கு 2 கி.மீ தூரத்துக்குள் வாக்குச்சாவடி அமைத்தும் அதிக வாக்குகள் பதிவாகவில்லை. இப்பிரச்னை குறித்தும் ஆராயப்படும். தொலைதூர வாக்குப்பதிவுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சென்னை அய்அய்டி-யுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்காக தொழில்நுட்ப ஆலோசனை குழு உருவாக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment