திரவுபதி முர்மு வெறும் ஓர் அம்பு - ஏவும் கரங்களும், வில்லும் யார்? கவனியுங்கள்!
பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அறிவித்திருப்பது அசல் ஏமாற்று வேலை - வேட்பாளர் ஓர் அம்பு, அதனை ஏவும் கரங்களும், வில்லும் யாருடைய கைகளில் என்பதுதான் சரியான பார்வை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அடுத்த மாதம் (ஜூலையில்) நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.)யின் சார்பில், பா.ஜ.க.வின், ஆர்.எஸ்.எஸின் வேட்பாளராக, ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியினரில் ஒருவரான திருமதி திரவுபதி முர்மு அவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஒரு அரசியல் யுத்தியே தவிர - பா.ஜ.க.வின் பல அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்றே தவிர - மிகப்பெரிய சமூக சிந்தனையோ, சமூகநீதிக்கான திடீர் விழிப்புணர்வோ - ஆதரவோ இதில் இல்லை என்பது சற்று விவரம் தெரிந்த எவருக்கும் புரியும்; புரியவேண்டும்.
உடனே இங்குள்ள சில காவிக் கட்சிப் பொறுப் பாளர்கள், சமூகநீதி பேசும் தி.மு.க. ஏன் இவரை விட்டுவிட்டு, வேறு ஒருவரை (யஷ்வந்த் சின்காவை) எதிர் அணியின் வேட்பாளராக்கி, ஆதரவு தரவேண்டு மென்று, ‘‘கூழாங்கற்களைத் தகர டப்பாவில் போட்டு ஓசையெழுப்புவதைப்போல'' கூக்குரலிட்டு, சமூகநீதி யின்மீது திடீர் மோகம் கொண்டு, ‘புது அவதாரம்' எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்!
முந்தைய 'தலித்' குடியரசுத் தலைவர் பூரி கோவிலிலும், ராஜஸ்தான் பிரம்மா கோவிலிலும் உள்ளே விடாமல் தடுக்கப்பட்டாரே, மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
முந்தைய குடியரசுத் தலைவர் ‘தலித்' சமூகத்தவர்; அவரை ஒடிசாவின் பிரபல கோவிலின் உள்ளே செல்ல அனுமதித்தார்களா? அவர் ஏன் படிக்கட்டில் அமர்ந்து ‘தரிசனம்' செய்தார்? ராஜஸ்தான் பிரம்மா கோவிலிலும் இந்த அவமதிப்புத் தொடர்ந்ததே! எடுக்கப்பட்ட நட வடிக்கை என்ன?
அதற்குமுன் அதே ஒடிசா கோவிலுக்குள் லார்டு மவுண்ட் பேட்டனை அனுமதித்தவர்கள், டாக்டர் அம்பேத்கர் அனுமதிக்க மறுக்கப்பட்டதன் தொடர்ச்சி மனோபாவம்தானே அது. (ஆதாரம்: மண்டல் கமிஷன் அறிக்கை - மதுதந்துவாடே சாட்சியம்).
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய மாண்புமிகு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்களா சமூகநீதி பேசுவது?
திடீர் சமூகநீதி ‘பக்தி'யாளர்களான காவிகளே, மண்டல் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி பரிந்துரை யான 27 சதவிகித வேலை வாய்ப்பை முதன்முறையாக ஒன்றிய அரசின் துறைகளில் அமல்படுத்தினார் அன்றைய பிரதமர் ‘சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் என்பதற்காகவே, 10 மாதம்கூட முடியாத அவரது ஆட்சியை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வெளியிலிருந்து கொடுத்த ஆதரவை விலக்கிக் கவிழ்க்கவில்லையா?
அது பழைய நிகழ்வு; பிரதமர் மோடி அரசு - 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் ஒதுக்குவது சம்பந்தமாக தி.மு.க.வும், தி.க.வும், இதர கூட்டணிக் கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, தீர்ப்புப் பெற்றும், செயலாக்க மறுத்து, பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆணைக்குப் பிறகே 27 சதவிகித இடங்களைப் பெற்றது, பா.ஜ.க. சமூகநீதி யின்மீது எவ்வளவு அக்கறையுள்ள கட்சி என்பது புரியுமே!
உச்சநீதிமன்றத்தில் 'தலித்'துகளை நீதிபதிகளாக நியமிக்கும் மனப்பான்மை கொள்கை இல்லாதது ஏன்?
‘தலித்' - பழங்குடி என்ற திடீர்ப் பாச மழை பொழியும் இந்த ஆட்சியில், உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில் கொள்கை முடிவு எடுத்து - தலித்துகளை உயர் பதவி களில் உச்சநீதிமன்றத்தில் அமர்த்தியுள்ளனரா? - அண் மையில்கூட பலருடைய சீனியாரிட்டி, பணி மூப்பைப் புறக்கணித்து, இரண்டு உயர்ஜாதி நீதிபதிகள் நியமனம் மட்டும் உடனடியாக ஒப்புக்கொள்ளப்பட்ட கோப்புகள் நகர்ந்தனவே - அதுபோல ஏதாவது நிகழ்ந்துள்ளனவா?
உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதிகள் இருந்தும், அவர்கள் பெயரை பரிந்துரைக்கவோ - ஒப்புக்கொள்ளச் செய்யவோ இல்லாமல், மேல்ஜாதி நீதிபதிகளைத்தானே நியமித்தனர்!
முக்கிய பதவிகளில் எத்தனை ‘‘தலித்''துகளை இந்த ஆட்சி நியமித்துள்ளது? ஆளுமையுள்ள இடங்களில் எத்தனை நியமனங்கள்?
'ரப்பர் ஸ்டாம்பாக' இல்லாத ஒருவர்
குடியரசுத் தலைவராக வரட்டும்!
‘‘குடியரசுத் தலைவர் பதவி வெறும் ‘ரப்பர் ஸ்டாம்ப்' பதிப்பது மாதிரியானப் பதவியாக இருக்கக் கூடாது; தலையாட்டி பொம்மைகளாக இருக்காமல், ஆழ்ந்து சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய பதவிப் பொறுப்பாக அது இருக்கவேண்டும்; நான் அப்படி ‘ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கமாட்டேன்'' என்று எதிர் கட்சிகள் வேட்பாளரும், கனிந்த நிர்வாக அனுபவமும் வாய்ந்த ஒருவர் கூறுவது இன்றைய அரசியலில் சூழலில் - ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிற நிலையில், இப்போது இதுபோன்றவர்கள் அந்த இடத்தில் இருந்தால்தான் பகிரங்க அரசமைப்புச் சட்ட மீறல்கள் தடுக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
பழங்குடியினரின் வாக்கு வங்கியை இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மட்டுமல்ல - இனி அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சில மாநிலங்களின் சட்டப்பேர வைத் தேர்தலில், அந்த மாநிலங்களில் - அதிக அளவு பழங்குடியினர் வாக்குகள் இருப்பதையும் குறி வைத்தே இப்படி ஒரு காய் நகர்த்தப்பட்டுள்ளது பா.ஜ.க.வால், ஆர்.எஸ்.எஸால் என்பது ஆழ்ந்து பரிசீலிக்கும் எவருக்கும் புரியும்!
பழங்குடி மக்களின் நில உரிமைகளைப் பறித்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் ஆட்சிதானே மோடி அரசு?
பழங்குடி மக்களின் நில உரிமைகளை, உடைமை களைப் பறித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தருபவர் களுக்கு அந்தப் பழங்குடி மக்கள்மீது திடீர் அக்கறை, திடீர் பாசம் பொத்துக்கொண்டு பீறிட்டு அடிக்கிறது போலும்!
இன்று நம் நாட்டு ஜனநாயகம் முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு அவதியுறும் நிலையில், பேச்சுரிமை, கருத்துரிமைப் பறிபோகும் கட்டங்களில், ‘புல்டோசர்' மெஜாரிட்டி மட்டுமல்ல, ‘புல்டோசர்களையே' வைத்து எதிர்ப்பாளர் வீடுகளை இடிக்கும் மனிதாபிமானமற்ற போக்கு, அசல் நிர்வாணத் தன்மையில் நடைபெறும் நிலையில், குடியரசுத் தலைவர் பதவி, ஜனநாயகப் பதுகாவலர் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியமே, ஒரு நாள் கூத்து - மாய்மால வித்தைகளைக் கண்டு ஏமாறலாமா?
திருமதி திரவுபதி முர்மு ஒரு அம்பு அவ்வளவுதான்
பழங்குடியின அம்மையார், இவர்களுக்கு இப்போது கிடைத்த ஒரு அரசியல் அம்பு. ஏவும் கரங்களும், வில்லும் யாருடைய கையில் என்பதே சரியான பார்வையாகும்.
‘எண்ணித் துணிக கருமம்!'
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.6.2022
No comments:
Post a Comment