இந்திய நாடு உடைந்து சிதறிப் போகச் செய்யும் அளவில் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

இந்திய நாடு உடைந்து சிதறிப் போகச் செய்யும் அளவில் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகள்

(இந்திய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு மாநிலமும் தாங்களாக விரும்பி முன்வந்து ஒன்றிணைந்து உள்ளன என்ற இந்தியா பற்றிய கருத்தினை சிறிதும் புரிந்து கொள்ளாத ஓர் அரசியல் கோட்பாடு முன்னிலை பெற்று வருகிறது)புலப்பிரை பாலகிருஷ்ணன்

நேற்றையத் தொடர்ச்சி 

ரத்தக் கறை படியாத பழங்குடியினர்

மத அடையாளங்களை அழிப்பதுபற்றி பேசும்போது, ஆரியர்களும் அத்தகைய அழிப்பு வேலைகளை செய்யாமல் இருக்கவில்லை என்பதற்கான ஆதாரம் உள்ளது. மேற்கு இந்தியாவில் இருக்கும் ஹரப்பாவில் உள்ள தொல் பொருள் நாகரிகத்தைப்பற்றி மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்மூலம் கல்லில் வடிக்கப்பட்ட ஆணுறுப்பு வடிவக் கடவுளின் (சிவலிங்கம்) உருவம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இந்த சிவ வழிபாட்டைக் கண்டிக்கும் பாடல்கள் வேதகால இந்து மத 'புனித' இலக்கியங்களில் காணப்படுகின்றன. எனவே இந்தியாவை வெற்றி கொண்ட மக்கள் பூர்வகுடிமக்களின் மத வழிபாட்டு சின்னங்களை வட இந்தியாவில் அழித்தது என்பது முகலாய ஆட்சியின்போது மட்டுமே நடைபெறவில்லை; அவ்வாறு நமது வரலாற்றுக் காலத்துக்கு முன்பும்கூட நடைபெற்று உள்ளது. இவ்வாறு கூறுவதன் நோக்கம் ஏதோ ஒரு ஒழுக்க நெறி சமன்பாட்டை ஆரியர் மற்றும் முஸ்லீம்கள் இடையே ஏற்படுத்தும் முயற்சி அல்ல.

இதனைக் கூறுவதன் காரணமே பாதுகாப்பற்ற மக்களின் மீதான வன்முறை தாக்குதல் கோழைத்தனமானது என்பதுதான். ஆனாலும் தங்களின் முன்னோருக்கு இழைக்கப்பட்ட கடந்த கால அநீதிகளுக்காகப் பழி தீர்த்துக் கொள்வது என்பது பற்றிய விவாதத்தின் கண்ணோட்டத்தில் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் ஆரியர்களும்கூட இதன் மூலம் கொண்டு வரப்படுகின்றனர். தங்கள் கைகளில் ரத்தக் கறை படியாதவர்களாக இருக்கக் கூடிய மக்கள் நம் நாட்டு பழங்குடி மக்கள்மட்டும்தான்.

இந்தி மொழி திணிப்பு என்ற  மற்றொரு செயல் திட்டம்

மதசிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தும் ஒரு செயல் திட்டத்துடன் இந்து தேசியத்தின் இரண்டாவது செயல் திட்டம் நாட்டின் ஆதிக்க மொழியாக இந்தியை நிலை நாட்டுவது என்பதே ஆகும். ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற விருப்பத்தையும், உறுதியையும் மட்டுமே பிரதிபலிக்கும் இந்த திட்டம் அநீதிக்கு பழி வாங்குவது  என்ற முறையில் நியாயப்படுத்த இயலாதது ஆகும். 1960ஆம் ஆண்டில் மிகுந்த அறிவு முதிர்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்ட முடிவு மற்றும் ஒப்பந்தத்திற்குப் பிறகும் இந்த பிரச்சினை நாட்டில் மிக மிக முக்கியமானதாக ஆக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய மாநிலங்கள் விரும்பும்வரை அரசின் கடிதப் போக்குவரத்துகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் என்று 1960இல் ஒப்புக் கொள்ளப்பட்டது.

2014ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசினால் இந்தி மொழிக்கு ஒரு புதிய வேகம்,  உந்துதல் அளிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாட்டின் இந்தி பேசப்படாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிப்பது எனும் முயற்சி எதிர்பாராத விதத்தில் பெருங்கேட்டினை விளைவிப்பதும், நிகழ் காலத்தை கடந்த காலமாக ஆக்குவதுமாகும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பேசிய பிரதமர் மோடி இந்தியைப் பற்றி எதுவும் பேசாத நிலையில், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ இந்தி மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பான தனித் தகுதியைப் பற்றி தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பேசத் தவறுவதே இல்லை. அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் அனைவரும் ஆங்கில மொழியினை மிக நன்றாக அறிந்திருக்கும் நிலையில், மிகுந்த கால விரயத்துடனும், பெரும் பொருட்செலவிலும் இந்தி மொழியைப் பரப்புவது தேவையற்றது. ஆனால் மொழி வெறி இந்த பிரச்சினையைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறது. வட இந்தியாவின் சமதர்மக் கோட்பாட்டாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும்கூட இந்த மொழி வெறிக்கு விதி விலக்காக இருப்பவர்கள் அல்ல. கேரள மாநில முதலமைச்சருக்கு 1990ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இந்தி மொழியில் கடிதம் எழுதியிருப்பதை இதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்தி மொழி இந்தியா முழுவதும் பரவி நீடிக்க வேண்டும் என்ற உணர்வு இந்தியாவில் பரவலாக இருப்பது வருந்தத்தக்கதே ஆகும். அண்மையில் இந்தி திரைப்பட நடிகர்கள் தெரிவித்த கருத்துகள் இதனைக் காட்டுகின்றன. வேடம் போட்டு நடிக்கும் இவர்கள் ஹாலிவுட் தகுதியை அடைய விரும்புபவர்கள். ஆனால் அமெரிக்க பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மார்லன் பிராண்டோவைப் போன்ற பரந்த இதயம் கொண்டவர்கள் அல்ல.

வடஇந்திய பணியாளர்களின் கலங்கரை விளக்கம்

சோர்வு இன்றி இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் 1960ஆம் ஆண்டுகளின் இடைக் காலத்தில் வெற்றி பெறும் அளவுக்கு வந்துவிட்டன. ஆனால் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற வன்முறைக் கலவரங்களும், தற்கொலைகளும் அதைத் தடுத்து நிறுத்தி விட்டன. இந்தி வெறியர்களுக்கு இன்று நேரம் ஆதரவானதாகவோ பொருத்தமானதாகவோ இல்லை. சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் என்ற அளவில் தென்னிந்திய மாநிலங்கள் இந்தி பேசும் மாநிலங்களை விட பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. வாழ்வதாரம் தேடி வரும் வட இந்திய பணிபாளர்களுக்கு வாழ்வு அளிக்கும் கலங்கரை விளக்காக தென்னிந்திய மாநிலங்கள் விளங்குகின்றன. ஒரு சாதாரணமான தென்னிந்தியரும்கூட இந்தி மொழியை நாட்டின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களின் மொழியாகப் பார்க்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் முஸ்லீம்கள் மிரட்டப்படுவதும், பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இழிவுபடுத் தப்படுவதும் அரசியல்வாதிகள் பிரபுக்கள் போல நடந்து கொள்வதும் அன்றாட நிகழ்வுகளாகவே ஆகிவிட்டன.

அப்படி இருக்கும்போது, உயர் சிறப்பு நிலைக்கு தகுதியே அற்ற ஒரு பிராந்தியத்தின் மொழியினால் தாங்கள் ஆளப்படுவதை தென்னிந்தியர்கள் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? பழைமையான இந்தியாவுக்கு அண்மையில் குடிபெயர்ந்ததுதான் இந்தி மொழி என்று நினைவூட்ட வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி என்பதன் அடிப் படையில் இந்தியை தேசிய மொழி என்று கருதுவதை கை அசைவில் புறந்தள்ளி அவர்கள் நிராகரிக்கின்றனர்.

மாறுபட்ட மக்கள்

நமது அரசமைப்புச் சட்டப்படி இந்தியா மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும். மிகுந்த வேறுபாடுகளுடன் ஒன்றாகக் கட்டுண்டிருந்த மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்று நம் நாட்டை நமது அரசமைப்புச் சட்ட பிதாமகர்கள் உருவாக்கினர். தங்களது வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட மக்களின் ஒரு கூட்டாட்சி நாடாகவும் இருப்பது இந்தியா. அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சுமூகமாக வாழ்வதற்கு பரந்த மனங்கள் தேவையே அன்றி விரித்த தோள்கள் தேவை இல்லை.  இந்திய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு  மாநிலமும் தாங்களாக விரும்பி முன்வந்து ஒன்றிணைந்த நாடு என்ற இந்தியாவைப் பற்றிய கருத்தினை சிறிதளவும் புரிந்து கொள்ளாத ஓர் அரசியல் கோட்பாடு முன்னிலை பெற்று வருவதை இன்று நாம் காண்கின்றோம். மனிதர்களின் இதயங்களையும், மனங்களையும் வென்று எடுக்க இயலாத அந்தக் கோட்பாட்டாளர்களால் கடைப்பிடிக்கப்படும் பிரிவினை அரசியல், மிகுந்த கவனத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட இந்திய ஒன்றியம் என்னும் நம் நாட்டை பேரழிவுக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்ததாகும். மிகவும் தீர்மானமாகவும், உறுதியாகவும் செயல்பட இயன்ற செயல்திறன் மிக்க குடி மக்களால் மட்டுமே அதன் விளைவுகளைத் தவிர்த்து தடுத்து நிறுத்த முடியும்.

நன்றி: 'தி இந்து' 26.5.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment