இனிய காலைப் பொழுதில் கடை வீதிகளில், பேருந்து - ரயில் நிலையங் களில் எண்ணற்ற நாளேடுகள் கண்கவர் வண்ணங்களில் அழகழகாய் அணிவகுத்து நிற்பதை ஆவலுடன் நோக்கினேன். அவற்றில் எதை வாங் குவது எதை விடுப்பது என்று யோசித்த நிலையில், அங்கு இருந்த நாளேடுகளில் மிகக் குறைந்த விலையில் விடுதலை நாளேடு இருப்பதைக் கண்ணுற்றேன். உடனே அதனை வாங்கி வாசிக்க முற்பட்டபோது என்னை அறியாமல் எனக்குள் ஓர் ஆர்வமும் - ஆனந்தமும் மேலோங்கியது. உடம்பில் புதிய இரத் தம் பாய்ச்சியது போன்ற ஓர் உணர் வைப் பெற்றேன். ஆம், விடுதலை நாளேட்டில் ஒவ்வொரு பக்கமும் பகுத் தறிவுக் கருத்துக்களால் அறிவுக்களஞ்சியமாய் ஒளிர்ந்து மிளிர்கின்றன. இத்தனை நாளாக இந்நாளேட்டை படிக்காமல் தவறவிட்டோமே என்ற ஏக்கம் என்னை வெகுவாக வாட்டியது.
அவ்வகையில் அண்மையில் (21.05.2022) விடுதலை நாளிதழை வாங்கி வாசித்தேன். அந்நாளிதழுடன் விடுதலை ஞாயிறு மலர் இணைப்பும் சேர்த்து மிக மலிவான விலையில் வெறும் அய்ந்து ரூபாய்க்கு கிடைத் ததை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பதைப் போன்று,
விடுதலை நாளேட்டை வாசிக்க வாசிக்க எனக்குள் பகுத்தறிவுக் கருத் துகளும், முற்போக்குச் சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்தன. எடுத்துக்காட்டாக;
1. கருநாடக மாநிலத்தின் பாட நூல் களில் தந்தை பெரியார், நாராயண குரு, பகத்சிங் உள்ளிட்ட சமூகப் புரட்சியா ளர்கள், சீர்திருத்தவாதிகள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை சமூகநல ஆர்வலர்கள், பகுத் தறிவாளர்கள், கல்வியாளர்கள், இளை ஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
2. திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாக; உயர்நீதி மன்றங்கள் - உச்சநீதிமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று சமூகநீதி கண்ணோட்டத்துடனும், முற்போக்குச் சிந்தனையுடனும் வார்த் தெடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிந்த சமூகநீதிச் சிந்தனையாளர்களும், முற் போக்காளர்களும் கையொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்து கின்றனர்.
3. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களான இரயில்வே, அஞ்சல் துறை, வங்கிகள், வாழ்நாள் காப்பீடு மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களுக்கான உரிமை தட்டிப் பறிக் கப்பட்டுள்ளது சமூக அநீதி என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் மே - 24 ஆம் தேதி ஆர்ப் பாட்டம் ஏன்? எனும் தலைப்பில் தீட்டப்பட்ட தலையங்கம் இளைஞர் களையும் - மாணவர்களையும் வெகு வாக ஈர்த்தன.
4. விடுதலை ஞாயிறு மலர் (21.05.2022) பகுதியில் ஒவ்வொரு பக் கங்களும் கற்கண்டாய் இனித்தது. ஆம், ' துக்ளக் பார்வையில் அம்பேத்கர் - ஏன் அம்பேத்கர் புத்தமதத்தைத் தேர்ந்தெடுத்தார்?' என்பதற்கு ஏராள மான சான்றுகளை அரிய பல தகவல்களை கட்டுரை வடிவில் வாரி வழங்கியது மாணவர்களுக்கு பய னுள்ள வகையில் அமைந்தது. அத்தக வல்களை மாணவர்கள் வரலாற்று ஆவணமாகக் கருதி பாதுகாத்து வைத் துள்ளனர் என்பது சிறப்பிலும் சிறப்பு.
5. முதல் அமைச்சரின் திராவிட மாடல் கனவை நினைவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எனும் நீண்ட கட்டுரை, திராவிட மாடலால் தமிழினம் உயர்ந்து உலகுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்வதற்குத் தேவையான வழிகாட்டு நெறி முறை களை தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்துரைத்த பாங்கு மெய்சிலிர்க்க வைத்தது.
6. நம் பிள்ளைகளின் உயர் கல் விக்காக நாம் திட்டமிடுகிறோமா? கட்டுரை பெற்றோர்களுக்கும் மாண வர்களுக்கும் நல்வழிகாட்டும் கலங் கரை விளக்காக இருந்தது. இதனால் நாட்டின் வருங்காலச் சிற்பிகளான மாணவச் செல்வங்கள் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுள்ளனர்.
7. நவீன யுகம் அய்ரோப்பாவில் மலர்ந்தபோது உங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்ற புதுமையான விளம்பரங்களை பெட் டிச் செய்தியாக வெளியிட்டதோடு, இன்றைய அறிவியல் உலகில் பக்கத் தில் உள்ள பாகிஸ்தான் கூட சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டு விண் வெளி ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவில்? எனும் அறிவார்ந்த வினா மக்களின் சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்தது.
8. உத்தரப்பிரதேசத்தில் குப்பையில் கிடந்த எல்.இ.டி. விளக்கை சிவலிங்கம் என வழிபட்ட மூடத்தனம், காவி நிறத்தில் இருந்த கக்கூசை கோவில் என்று கும்பிட்டுச் சென்ற மக்கள், மேற்கு அமெரிக்காவில் குப்பையில் போடப்பட்ட சாலைப் பிரிவு அடை யாளக் கல்லை சிவலிங்கம் எனக்கருதி கும்பிட்டுச் சென்ற மக்களின் அறியா மையை - மூடத்தனத்தை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது. இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் தொடங்கி பொருளாதாரத்தில் வளர்ந்த நாடான அமெரிக்க வரை பரவியுள்ள மூடநம்பிகையின் முடை நாற்றத்தை விடுதலை நாளேடு எளிய நடையில் அழகு தமிழில் பாமர மக் களிடையே தோலுரித்துக் காட்டியதின் மூலம் அவர்கள் போதிய விழிப் புணர்வையும், புதிய எழுச்சியையும் பெற்றுள்ளனர் எனும் இனிய செய்தி தேனாய் இனிக்கிறது.
9. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக; பெரியாரும்-அண்ணாவும் சந்தித்த முதல் மேடை (20.05.1934) திருப்பூ ருக்குக் கிடைத்த தனிப்பெருமை! எனும் தலைப்பில் காணக்கிடைக்காத நிழற்படமும், அதன் வரலாற்று நிகழ் வுகளை சிறப்பாக எடுத்து இயம்பிய பாங்கும் வாசித்தவர்களை இன்பத்தில் ஆழ்த்தியது. இதனை இளைஞர்களும் மாணவர்களும் பொன்னைப் போன்று கருதி போற்றிப் பாதுகாத்து வருவது வரவேற்கவேண்டிய விடயமாகும்.
10. இறுதியாக கேள்வி-பதில் பகுதியில் ஆசிரியர் அவர்களின் செறி வான, நிறைவான பதில்கள் இளை ஞர்கள் மற்றும் மாணவர்களின் அறி வுக்கும், சிந்தனைக்கும் விருந்து படைத்தது.
இவ்வாறு வருமானத்தைப் பின் னுக்குத் தள்ளி இனமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சமூகநீதி, சமத்துவம் - சகோதரத்துவம், சுயமரி யாதை, பகுத்தறிவு மற்றும் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம், கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தாங்கி நாளும் வெளி வருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட்டில் வெளிவருகின்ற பகுத்தறிவுக் கருத்துக் களை, முற்போக்குச் சிந்தனைகளை இளைஞர்களும் மாணவர்களும் ஒன்றி ணைந்து பாமர மக்கள் மத்தியில் எடுத்துக் கூறியதின் பயனாய், அவர் களிடையே மண்டிக் கிடந்த அறியாமை எனும் இருள் அகன்று பகுத்தறிவு வெளிச்சம் பரவியுள்ளது பாராட்டுக் குரியதாகும். இதன் வாயிலாக அம் மக்கள் மூடநம்பிக்கை எனும் முடை நாற்றத்தில் இருந்து முற்றாக விடுபட்டு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க முற்பட்டுள்ளனர் என்பது விடுதலை நாளேட்டின் அயராத உழைப்புக்கு, உண்மைக்கு, நேர்மைக்குக் கிடைத்த உன்னத வெற்றியாகும்.
எனவே, வருமானத்தைக் காட்டி லும் இனமானம் பெரிது என்ற உயரிய நோக்கில் 88 -ஆண்டுகளாக விடுதலை நாளேடு தங்கு தடையின்றி வெளி வருவதும், அதன் ஆசிரியராக
கி. வீரமணி அவர்கள் பொறுப்பேற்று 60 - ஆண்டுகள் ஆக இருப்பதும் வர லாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் உலகச் சாதனையாகும். இத்தகைய தேனினும் இனிய செய்தியை நாளும் நினைத்து உலகத் தமிழர்கள் அனைவரும் பெரு மிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகின் றனர். ஆகவே, இனமானம் காத்து சமூகநீதியை வென்றெடுக்க நாளும் விடிவெள்ளியாய்ப் பீறிட்டு வெளி வருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட்டை பாரெங்கும் பரப்பிட, தமிழர் தலைவர் ஆசிரியர் பகுத்தறிவுப் போராளி
கி. வீரமணி அவர்கள் தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியேற் போம்.
வாழ்க பெரியார்! வெல்க விடுதலை!
- எஸ். பத்ரா, வந்தவாசி.
No comments:
Post a Comment