முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, இளைஞர்கள் அவரைப் பின்பற்றுவது குறித்து இளைஞர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டும் அறிக்கை வருமாறு.
முத்தமிழ், முக்கோணம், முக்கனி என்பவை போல திராவிடர் இயக்கத்திற்கு அதன் தொடக்க காலமான 1916-லும் சரி, அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், பல கட்ட பரிணாம வளர்ச்சியைப் பெற்ற திராவிடர் இயக்கத்தின் நீட்சியாகி, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக ஆன நிலையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முத்திரை பொறிக்கப்பட்டும், சமுதாயப் புரட்சி, அரசியலில் அதன் கொள்கை லட்சியங்களுக்கு செயல்வடிவம் தந்த நிலையிலும் சரி, மூவர் - முதன்மைக்குரியோர் மட்டுமல்ல - ‘தந்தை, அண்ணன், தம்பி’ என்ற கொள்கை உறவின்மீது உறுதியான கட்டுமானத்திற்கு உரியவர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று மூவரும் ஆவர்!
தமிழ்நாட்டின்
முதல் பேராசிரியர் பெரியார்!
‘‘தமிழ்நாட்டின்
முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவர்தம்
வகுப்புகள் பொதுமக்களிடையே மாலை நேரக் கல்லூரி
வகுப்புகளாகத் தொடங்கி, மூன்று மணிநேரம் நடைபெறும்‘’
என்றார் அறிஞர் அண்ணா.
அவர் நடத்திய ‘குடிஅரசு’ வார ஏடு, ‘விடுதலை’ நாளேடு, ‘புரட்சி’, ‘ரிவோல்ட்’, ‘பகுத்தறிவு’, ‘உண்மை’ ஏடுகள் அக்கல்லூரியின் வகுப்பறைப் பாடங்களை வழங்குபவை.
அந்தப் பேராசிரியரிடம் பெற்று, கற்று, மக்களிடையே அதனை பல புதிய உத்திகளுடன் - காலத்தின் தேவைக்கும், ரசனைக்கும் ஏற்ப, கொள்கைச் சூரணத்தை கலைத் தேனில் குழைத்துக் கொடுத்து, பரப்பி வெற்றி கண்டதோடு, ஆட்சி அமைப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணி என்று வரலாற்றில் பதிவு செய்தவர்கள் பெரியாரின் மூத்த பிள்ளை அண்ணாவும், செல்லப் பிள்ளை கலைஞரும் என்றால் அது மிகையல்ல!
அறிஞர்
டி.ஜே.எஸ். ஜார்ஜின்
படப்பிடிப்பு
இந்தப்
பார்வை, அனுபவம் வாய்ந்த மூத்த
பத்திரிகையாளரும், ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’
ஆங்கில நாளேட்டின் ஆசிரியராகவும் இருந்த சமூகவியல் அறிஞர்
டி.ஜே.எஸ்.ஜார்ஜ்
அவர்களின் கருத்துமாகும்!
அவர் எழுதுகிறார்:
‘‘நீதிக்கட்சி 1916 இல் உருவானதற்குப் பிறகு, உருவான திராவிட இயக்கம், இயல்பாக ஒரு இனவெறி இயக்கமாக மாறியிருக்க முடியும்; மாறாக, அது தமிழ் மொழி, பண்பாடு, சமூகநீதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தந்து ஒரு கலாச்சார இயக்கமாக வலுப்பெற்றது. அதற்கான காரணம் இதுதான் - திராவிடர் கழகத்துக்கு ரத்தத்தையும், சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள் - திரிமூர்த்திகளான பெரியார் - அண்ணா - கருணாநிதி ஆகியோர்.
பெரியார் அற்புதமான சிந்தனையாளர்; அவருடைய புதுமையான கருத்துருக்கள் அவரை உலக வரலாற்றின் அறிஞர்கள் வரிசையில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. வேறு காலகட்டத்தில் - வேறு சூழலில், அவர் உலக சீர்திருத்தவாதியாகவும் கொண்டாடப்பட்டிருப்பார். சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய காலமாக இருந்ததாலும், தமிழ்நாட்டின் பின்னணி காரணமாகவும் அவர் மாநிலத்திற்குள்ளேயே முடக்கப்பட்டார்.
அண்ணாவும், கருணாநிதியும் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள். சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு திராவிட இயக்கத்திற்கு உரம் ஏற்றியதற்கு அவர்களைத்தான் பாராட்டவேண்டும்.’’
- இது ஒரு உண்மையான, அற்புதமான, அறிவியல் ஆய்வுக் கருத்தாகும்!
அறிஞர் அண்ணா அவர்கள் முத்திரை பதித்து, புகழின் உச்சியில், மாற்றாரும் வேற்றாரும் போற்றும் கட்டத்தில், இயற்கையின் கோணல் புத்தியால் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். திராவிடர் இயக்க வரலாற்றில் வேதனையடங்காத ஒரு அத்தியாயம்!
அந்த இடத்திற்கு வர தந்தை பெரியாரால் அறிவுறுத்தப்பட்டு, ஆணையை ஏற்று முதலமைச்சர் பொறுப்பை - ‘பதவி'யாகக் கருதாமல், கடமையாற்றும் பொறுப்பாக ஏற்ற கலைஞரின் தொண்டும், உழைத்த பாங்கும் வரலாற்றின் செழுமையான செறிவுகள் ஆகும்!
கலைஞர் என்ற கடும் உழைப்பாளி - காரணம் அவர் அதைக் கற்றுக்கொண்ட பீடம் ஈரோட்டுக் குருகுல வாசம் என்பதன்மூலம்! ஓய்வறியா உழைப்பினை அவர் இறுதிவரை (உடல்நலம் குன்றிய காலம் தவிர) இந்த சமுதாயத்திற்கு ஈந்த ஒப்பற்ற கொடையாளர்!
அவர் ஒரு பல்கலைக் கழகம்! பேச்சு, எழுத்து, விவாதம், ஏடு நடத்துதல், சட்டமன்றத்தின் சரித்திரப் பணி, கலைத் துறையில் எவரும் எட்டிப் பிடிக்க முடியாத ஏற்றமிகு சாதனைகள், இவை எல்லாவற்றையும் தாண்டிய ஆட்சியின் ஆளுமை முத்திரையால் - கொள்கை லட்சியங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தார்.
காலத்தை
வென்ற பாடங்களை எழுதியவர்
அரசியல்
மிரட்டல்களையும், பழிவாங்கல் களையும் துணிவுடன் எதிர்கொண்டு
பழிவாங்கியவர்களையே தன் பக்கம் ஈர்த்து,
பகை மறந்து, அருள் சுரந்து,
ஆளுமையால் வென்ற தனித்ததோர் அரசியல்
ராஜதந்திரம் கலந்தது; காலத்திற்கேற்ற கச்சிதமான அணுகுமுறை! காலத்தை வென்ற அரசியல்
பாடங்களை எழுதி புதிய வரலாறு
படைத்த தனித்துவம்.
இவை வருங்காலப் பல்கலைக் கழக தத்துவப் பட்டங்களுக்கான பல ஆய்வுகளுக்குப் (Ph.D’s and Post Doctorate thesis) - புதையல்களான ‘கீழடி’களாகும்!
எந்த நிலையிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை கலைஞரிடம்
அவரது நகைச்சுவை உணர்வில்கூட கொள்கை மின்னலிட்டுப் பாயத் தவறியதில்லை.
மிகப்பெரிய அறுவைச் சிகிச்சை முதுகில்! மருத்துவனையில் மயக்கம் தெளிவடையும் நிலை - மருத்துவர்கள், செவிலியருக்குச் சொல்லிவிட்டு செல்கிறார்கள், ‘‘நாக்கு வறட்சிக்காக அவர் தண்ணீர் கேட்டால், சில சொட்டுகள் மட்டும் அவரது நாக்கில் விடுங்கள் - ஏனெனில்,வாந்தி வந்துவிடக் கூடாது - அதிக தண்ணீர் அருந்துவதன்மூலம்‘’ என்ற அறிவுரை.
தாகம் எடுத்த கலைஞர் என்ற ‘நோயாளி’ (Patient), செவிலியரான இளம் பெண்ணிடம், நாக்கு வறட்சியைப் போக்க, தண்ணீர் கேட்க, அவரோ ஓரிரு சொட்டுகளே தருகிறார்.
உடனே அவரைப் பார்த்து கலைஞர் கேட்கிறார், ‘‘ஏம்மா, உன் பெயர் என்ன காவிரியா? கேட்ட தண்ணீரைக் கொடுக்க மறுக்கிறாயே’’ என்றார்.
அந்த செவிலியருக்கு இது புரியாமல், வெகுளியாகப் பதில் சொல்கிறார்.
எப்படி மருத்துவமனையில் - வலியில்கூட - மயக்கத்திலும் தயக்கமில்லா கொள்கை நகைச்சுவை.
இப்படி பலப்பல உண்டு.
எதையும் காலதாமதம் செய்யாமல் துடிப்புடன் துரித முடிவெடுப்பதில் முத்திரை பதித்த முதலமைச்சர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
படிப்பு
அதிகம் இல்லை - பண்புநலன் மிக்குண்டு
‘உங்கள்
முடிவுகள் அவசரமானவைகளாக உள்ளனவே’ என்று ஒரு செய்தியாளர்
கேட்கிறார் முதலமைச்சர் கலைஞரிடம்.
உடனே, துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியே வருவது போன்று, பதில் வெடிக்கிறது.
ஆங்கில செய்தியாளர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி - hasty decisions என்று.
கலைஞர், ‘‘‘My decisions are not hasty decisions, but quick decisions’’என்று பளிச்சென்று பதில் கூறி மடக்குகிறார்.
என்னே நேர்த்தித் திறன்! ‘‘அதிகம் படிக்காத கலைஞரின்’’ பண்புமிக்க பதில் பார்த்தீர்களா?
‘‘உங்களை ஒரு வரியில் சுய விமர்சனப்படுத்திக் கொள்ள என்ன சொல்வீர்கள்?’’ என்ற செய்தியாளர் கேள்விக்கு,
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்ற பதில்! நறுக்குத் தெறித்த கொள்கைப் பிரகடனம்.
கலைஞரைப் பின்பற்ற விரும்பும் இளைய தலைமுறைக்கும் இது ஒரு கலங்கரை வெளிச்சம் அல்லவா!
‘’ஆட்சி
முக்கியமல்ல - தந்தை பெரியாருக்கு அரசு
மரியாதைதான் முக்கியம்!’’
1973 இல்
தந்தை பெரியாரின் உடலை அடக்கம் செய்யும்பொழுது,
தமிழ்நாடு அரசு மரியாதை கொடுக்க
அவர் முடிவெடுத்தார் - முதலமைச்சராக இருந்த நிலையில்.
‘‘இதனால் ஆட்சிக்கு ஆபத்து வரலாம்‘’ என்றவுடன், ‘‘அதற்காக நான் ஆட்சியை இழந்தா லும், வருத்தப்படமாட்டேன் - மகிழ்ச்சியடைவேன்’’ என்று துணிவுடன் சொல்லி, வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை (Precedents) ஏற்படுத்திய அரசியல் துணிச்சல்காரர்!
‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதைதான் தனது அரசால் தர முடிந்தது; அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமல் புதைக்க வேண்டி வந்துவிட்டதே!’ என்று ஆதங்கப்பட்டு, அடுத்துப் பதவிக்கு வந்தபோது அம்முள்ளை அகற்றிட அவர் புதியதோர் சட்டம்மூலம் வழி கண்டார். அவர் வழி ஆட்சி நடத்தும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - ‘‘திராவிட மாடல் ஆட்சியின்’’மூலம் திக்கெட்டும் புகழுடன் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதனை முழுமையாக சாதித்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, முள்ளை எடுத்தெறிந்து, முத்திரை பொறித்தார்!
தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதலமைச்சர் நமது மு.க.ஸ்டாலின்
கலைஞரின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாளில், நாம் அவரது வாழ்க்கை, கொள்கை வாழ்க்கை, கலைத்துறைகூட அவரது கொள்கைக்குப் புத்தாக்கம் பெறவே தவிர, வெறும் வருமானத்திற்கு வகை தேடிடும் வாழ்க்கை அல்ல; தன்மானம், இனமானம் இவையே அவருக்கு வெகுமானம் என்பதை கலைத்துறையினரும், அரசியலுக்கு வர விரும்பும் இளைய தலைமுறையும் திராவிடர் இயக்கப் பாசறையில் பயின்று ‘‘பாஸ்’’ செய்து வந்து, தங்களின் பங்களிப்பைச் செலுத்த - பல தலைமுறைக்கும் திராவிடத்தை ‘‘ஆயிரங்காலத்துப் பயிராகப் பாதுகாக்க’’ உறுதி ஏற்றுப் பயிலுங்கள்!
வாழ்க கலைஞர்!!
வெல்க திராவிடம்!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்,
சென்னை- 3.6.2022
No comments:
Post a Comment