"வடமொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம்" திருமண விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

"வடமொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம்" திருமண விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முழக்கம்

சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சவுக்கை எடுத்துக் கொண்டு புறப்படுவீர் என்று முழக்க மிட்டார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

சென்னை சாந்தோம் எம்.ஆர்.சி. சென்டர் வள்ளியம்மை திருமண மண்டபத்தில் இன்று (13.6.2016) காலை நடைபெற்ற ஆலடி அருணா அவர்களின் இல்லத் திருமணத்திற்குத் தலைமையேற்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய இனமானவுரை வருமாறு:

மணவிழா என்பது ஆலடி அருணா வீட்டிலே நடந்தாலும் சரி,  வேறு யார் வீட்டில்நடந்தாலும் சரி,  அது சுயமரியாதைத் திருமண மாக,  பகுத்தறிவு திருமண மாக, தன்மானத் திருமணமாக நடை பெற்றாலும்   அங்கே நான் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அங்கே சென்று விடுவது என்னுடைய வழக்கம்.  அப்படித் தான், அதைஎல்லாவற்றிற்கும் மேலாக   தம்பி ஆலடி அருணா வீட்டிலே நடை பெறுகின்ற திருமண விழா,  என்  வீட்டில் நடைபெறுகின்ற திருமண விழா  (கை தட்டல்)  என்றநினைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.  

இந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றுக் கொண்டு மணமக் களை வாழ்த் தும் போது,ஆலடி அருணா அவர்களுடைய பேரன், பேத்திக்கு நடைபெறுகின்ற மணவிழா அல்ல, என்னுடைய பேரன், பேத்திக்கு நடைபெறுகின்ற  மணவிழா (பலத்த கைதட்டல்) என்ற உணர்ச்சி யோடு தான் இந்த மணவிழாவிலே கலந்து கொண்டிருக்கிறேன்.     

திருமண விழாக்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை நான்  இன்றைக்குச்சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, இன்னும் ஒரு படி மேலே சென்று,  இதை முழுமையான சீர்திருத்தத் திருமணமாக, முழுமை யான பகுத்தறிவு திருமணமாக  நடத்த வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்  கொண்டிருக்கும் போது, இந்தியாவிலே எங்கோ ஒருமூலையில்  நம்முடைய மொழியை, நம்முடைய மொழிக் கொள்கையை  வாட்டி வதைக்கின்ற அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றன.      

வடமொழிக்கு ஆதிக்கமா?

மீண்டும் தமிழ்நாட்டில்,  இந்தியாவில்  சமஸ்கிருதம்  தலை தூக்குமா? வடமொழி  நம்மீது  படையெடுக்குமா என்ற அந்தக்  கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில், இங்கே நாம்  குழுமி யிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது.  

வடமொழிக்கு  ஆதிக்கம்,  சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என் றெல்லாம் பேசப்படுகின்ற காலம்  ஏற்பட்டுள்ளது.  தூய  தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழிதான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண் டும் என்று  வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ் கிருதத்தை பாட  மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல் கின்ற  பைத்தியக்காரர்களும்  நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

வடமொழி எப்படி எல்லாம் ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சிக் காரர்களின் ஆதரவோடு, ஆசி யோடு  நுழைவதற்கு இடம்,  நேரம் பார்த்துக் கொண்டிருக் கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவேதான் நான் கூறுகிறேன்.

சோம சுந்தர பாரதியார்  சொல்வார்  -  சமஸ்கிருதம்  என்றுகூடச் சொல்ல மாட்டார் - சஞ்சிகிரதம் என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி  வட மொழி.   அந்தவடமொழிக்கு தமிழ் நாட் டில் ஆதிக்கமா என்ற கேள்வி பிறப்பதற்கு முன்பு, வட மொழியைத் திணிக்க விரும்பு கின்ற மக்கள்  தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப  விரும்புகின்ற இந்த அநியா யத்தை  இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இல்லா விட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு பெரும் கிளர்ச்சி (பலத்த கைதட்டல்) எப்படி கட்டாயஇந்தியை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவாயிற்றோ, அதைப் போல வட மொழி  சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி தமிழ்நாட்டில் உருவாவதற்கு   யாரும் காரணமாகி விடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

சவுக்கை எடுத்துக் கொண்டு புறப்படுக!

ஏனென்றால் தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த  மூவேந்தர்  காலந்தொட்டுஇருந்து அதனுடைய  மூப்பு, அதனுடைய  மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு,  அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை,  அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித் துக் கட்டி விட்டு,  நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம்,  வட மொழிக்குத் தான் இடம் தருவோம்  என்று சொல்வார் களானால்,  கையில்  தமிழன் ஒவ்வொருவரும்  சவுக்கை எடுத்துக் கொண்டு (பலத்த கைதட்டல்)  வடமொழி ஆதிக் கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும்.  அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால், எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார்.  அப்படிப்பட்ட வீரர், அப்படிப்பட்ட கொள்கைவாதி,  அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர்,அந்த ஆலடி அருணாவின் இல்ல விழா வில் தான் நாம் இங்கே  கூடியிருக்கிறோம்.

பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில்  உருவாக வேண்டும்.  அப்படி உருவாகின்றஆலடி அருணாக்கள்   வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள்.  அதற்குநாம் துணை போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,  இந்த மண விழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி  ஆதிக்கத்திற்கு இடம் தர  மாட் டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு  தமிழ்நாட்டில் மாத்திரமல்ல;  எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட  விரட்டுவோம்  என்ற அந்த உறுதியை இந்த மணவிழாவிலே நாம் ஏற்றுக் கொண்டால் தான்,  ஆலடி அருணா வீட்டுத் திருமணத்திலே கலந்து  கொண்டதற்கு அடையாளம்  - அந்த அடையா ளத்தை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு, மணமக்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி  விடை பெறுகிறேன்.

- ‘விடுதலை’, 13.6.2016


No comments:

Post a Comment