மேகதாது விவகாரம்: கருநாடக முதலமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

மேகதாது விவகாரம்: கருநாடக முதலமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை, ஜூன் 16 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம் மைக்குத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கை வருமாறு:

கருநாடக முதலமைச்சர், மேகதாது அணை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல. மேகதாது அணை பிரச்சினை, தமிழ்நாடு விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையாகும். இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ, தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர், இப்பிரச்சினை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல் ஆதாயத்திற்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இக் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும் கருநாடக முத லமைச்சர் தெரிவித்திருப் பதாக வந்த செய்தி விந் தையாக உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். கருநாடக அரசின் அதிகாரிகள் இது குறித்து கருநாடக முத லமைச்சருக்கு சரியான தகவல் அளிக்க வில்லை போலும். இக்கூட்டங் களில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது பற்றிய விவரங்கள், கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மதித்து நடக்க வேண்டும் 

காவிரி நடுவர் மன்றம் படுகை மாநில வாரியாக திட்டங்களை ஆராய்ந்து, திட்டவாரியாக ஒவ் வொரு திட்டத்திற்கும் எவ்வளவு நீர்த்தேவை என்பதை கணக்கிட்டு நீரை பங்கீடு செய்துள்ளது. சில திட்டங்களை நிராகரித்தும் உள்ளது. இதை உச்சநீதிமன்றம் தனது 16.2.2018 தேதியிட்ட ஆணையில் முழுமையாக உறுதி செய்துள்ளது. உண்மை இவ்வாறு இருக்க, இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில், அதுவும் கருநாடகாவிற்கு ஒதுக்கப் பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்திருப்பது, உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சி தத்துவத்தின் படியும், உச்சநீதிமன்ற ஆணையை மாநிலங்கள் மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்குப் புறம்பானது. 

தீர்வு அளிக்கும்வரை... 

மேலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி, எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. கருநாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்கெனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர் தேவைக்காக என்ற போர்வையில், அதுவும் 4.75 டி.எம்.சி தேவைக்காக, 67.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.  உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினை குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, கருநாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி மேற் கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆகை யால், இப்பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கருநாடக முதலமைச்சரை, தமிழ்நாடு அரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment