இதுநாள்வரை தமிழ் நாட்டினில்
இருமொழிக் கொள்கை தானடா
இப்போதென்ன தேவையிங்கே
ஹிந்தியைத் திணிப்பது ஏனடா
எங்கள் தமிழ்மொழி எங்கள் தாய்மொழி
என்றும் எங்களுக்குத் தேனடா
ஹிந்தியைத் திணித்திடும் உங்கள் சூழ்ச்சிகள்
அனைத்தும் தமிழ்நாட்டில் வீணடா
திணிப்பை எதிர்த்திட எங்கள் தமிழ்ப்படை
எழுச்சியை நீஇப்போ காணடா
முப்பத்து ஏழில் முதல்வர் ராஜாஜி
முயன்றும் முடியவில்லை கேளடா
தந்தை பெரியார் தடி கொண்டதை
விரட்டிய விதத்தையும் சொல்லடா
அறுபத்தைந்தினில் மீண்டும் இது இங்கே
வாலை நுழைத்தது பாரடா
ஒட்ட நறுக்கி அதை ஓட விட்டகதை
உலகமே அறியுமே கூறடா
மீண்டும் முருங்கையில் ஏறநினைத்தால்
(தமிழர்) யாரென்று காட்டுவோம் வாங்கடா
ஹிந்தி மொழியில் என்ன இருக்குது
எங்களுக் கதைநீயும் கூறடா
மூன்று மாதங்களில் படித்து முடிக்கலாம்
வேறென்ன உள்ளது சொல்லடா
அறிஞர் அண்ணா சொன்ன இக்கூற்றினை
அனைவருக்கும் நீயும் சொல்லடா
ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பேன்
அண்ணாவின் அறைகூவல் கேளடா
இத்தனை தெரிந்துமா உன்னிடம் தயக்கம்
எது உன்னைத் தடுக்குது கூறடா,
ஆங்கிலத்துக்கு மாற்று ஹிந்தியா
அறிவிலார் கூற்றை நீ கேளடா
குயிலுக்கு இணையாமோ கோட்டானின் கூவுதல்
என்பதை நீ எண்ணிப் பாரடா
மாணிக்கக் கல்லையும் மண்ணையும் ஒன்றாக
மதிப்பது சரியோ நீ சொல்லடா
ஆங்கிலம் படித்ததால் எங்களின் அறிவு
வளர்ந்த உண்மையைக் கூறடா
ஆயிரக்கணக் கணக்கில் அயல்நாட்டில் வேலை
அதனால்தான் என்பதை சொல்லடா
ஹிந்தி படித்தால் எல்லார்க்கும் வேலை
கிடைக்குமா எனக்கதை சொல்லடா
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை
அளிப்பேன் என்றவர் யாரடா
ஏழாண்டு காலத்தில் எத்தனை பேருக்கு
வேலைகள் அளித்தனர் கூறடா
ஏழாண்டு காலமாய் ஏமாற்று வித்தையை
பார்த்தும் மவுனம் ஏன் கூறடா
எத்தனை காலந்தான் இதுபோன்ற புளுகினை
நம்பித் தொலைப்பது கூறடா
உடல் மண்ணுக்கு உயிர்தமிழுக்கென
உயிர்மாய்த்தோர் வரலாறு கூறடா
எரிதழலில் இன்னுயிர் நீத்தவர்
எத்தனைபேர் எண்ணிப் பாரடா
துப்பாக்கி குண்டுகள் துளைத்த போதும் தமிழ்
வாழ்க, ஹிந்தி வீழ்க என்றாரடா
மீண்டும் மொழிப்போர் நமை நோக்கி வருகுது
முறியடிப்போம் முழு மூச்சாய் வாங்கடா
எங்கள் பண்பாடு எமதுமொழி
என்றும் மேன்மைதான் என்பதை கூறடா
ஹிந்தித் திணிப்பை எதிர்த்து முழங்கிடும்
இளைஞர் பட்டாளம் பாரடா
எங்கள் மொழி எங்கள் இனம் காத்திட
எழுந்த கூட்டத்தைப் பாரடா
எட்டுத்திக்கும் எங்கள் தமிழ்ப்படை
புறப்பட்டு வருவதை காணடா
ஹிந்தி எழுத்தை அழித்திடப் புறப்பட்ட
எழுச்சிக் கூட்டத்தை பாரடா
ஆசிரியர் வழிநின்று அன்னைமொழி காப்போம்
அச்சம் நமக்கில்லை கூறடா!
- எஸ்.துரைக்கண்ணு
No comments:
Post a Comment