ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்

சென்னை,ஜூன் 8- சென்னையை அடுத்த மாமல்ல புரத்தில், காங்கிரஸ் கட்சியின் கொள்கை பிரகடனப் பயிற்சி முகாம் கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. முகாமின் நிறைவு நாளான நேற்று (7.6.2022) நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார். 

கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:- 

இந்த பயிற்சி முகாமில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு என்ன வென்றால் ஒன்றிய மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வருகிற 28ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி மாவட்டம் தோறும் 75 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறுகளை எடுத்துக் கூறுவதுடன் காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம்.

பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தமிழ்நாட்டில் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை சிதைக்க பார்க்கிறார்கள்.  தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்று மக்கள் முடிவு செய்தனர். நமது கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் அ.தி.மு.க.வினர் முதலமைச்சராக இருக்க மாட்டார்கள். மோடிதான் முதலமைச்சராக இருப்பார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. 

அதன்படி நமது வெற்றி விகிதம் 72 சதவீதம் ஆகும். இது மதசார்பற்ற கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால், பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் வெற்றி பெற்று கொண்டு அவர்கள் வளர்ந்து விட்டதாக கூறுவது ஒரு தோற்றம். மக்களை ஒன்றுபடுத்தும் கடமை பா.ஜ.க.வினரின் மக்களை ஜாதி, மதத்தால் பிளவு படுத்து கிறார்கள். எனவே மக்களை ஒன்றுபடுத்தும் கடமை நமக்கு இருக் கிறது. பா.ஜ.க.வினர் தவறான மத உணர்வை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கு எதிராக காங்கிரசார் கடுமையாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். எனவே பா.ஜ.க.வை கண்டித்து நடத்தும் மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment