சென்னை, ஜூன் 10 சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் நம்ம சென்னை செயலியில் விரைவில் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை தீர்வு காண, 1913 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நம்ம சென்னை அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாயிலாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை ஒளிப்படம், வீடியோ காட்சிப் பதிவு எடுத்து அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதனால், நம்ம சென்னை செயலி பயன்பாடு அனைத்து தரப்பினரிடம் வரவேற்பை பெற்றது. தற்போது 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை 1.08 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், சொத்துவரி விபரங்கள் அறிதல், சொத்துவரி செலுத்துதல், தொழில் விபரம் அறிதல், வர்த்தக உரிமம் விபரம் அறிதல் போன்ற சேவைகள் "நம்ம சென்னை" செயலில் உள்ளன.
மேலும், கூடுதல் வசதியாக தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் புதுப்பித்தல், பிறப்புச் சான்றிதழில் குழந்தைகள் பெயர் சேர்த்தல், நிகழ்நிலையில் கட்டட திட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல் போன்ற வசதிகள் விரைவில் இந்தச் செயலியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
No comments:
Post a Comment