சென்னை பெரியார் திடலில் செயல்படும் பல்வேறு அமைப்புகளில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையமும் ஒன்று! அவ்வமைப்பின் சார்பாகத் தமிழ்நாடு முழுக்க "மன்றல்" என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 2012.
ஜாதி மறுப்பு, மத மறுப்பு, விவாகரத்துப் பெற்றவர்கள், துணையை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அய்ந்து பிரிவுகளில் இது செயல்படுகிறது.
இதுவரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது!
வேண்டுவது மனிதம்! விலக்குவது ஜாதி!
திருமணத்திற்கு ஆண், பெண் இணை தேடுவது என்பது சிரமமான சூழலாக மாறி வருகிறது. "எங்கள் வீட்டில் ஆண் குழந்தை மட்டுமே இருக்கிறது. எனவே பெண் வீட்டார் வரிசை கட்டி நிற்பார்கள்," என்று ஒரு காலத்தில் சொல்லப்படு வதுண்டு. இன்று யாரும் வரிசையில் நிற்பதில்லை. இதுதான் சமூக மாற்றம்!
நல்ல படிப்பு, வெளிநாட்டு வேலை, பெரிய வருமானம் என்பவர்களுக்கும் இணையர் கிடைத்து விடுவதில்லை. அதையெல்லாம் கடந்த சமத்துவம், சுயமரியாதை, நல்ல பண்புகள் தேவைப்படுகின்றன.
"ஆயிரம் இருந்தாலும் சொந்த ஜாதியில் திருமணம் செய்வது தான் பாதுகாப்பு! ஏதாவது பிரச்சினை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்," என்கிற சிந்தனைகள் எல்லாம் சுக்கு நூறாகச் சிதறிவிட்டன.
சரியில்லாத ஒரு மனிதர் சொந்த ஜாதியாக இருந்தாலும் வேண்டாம்; நல்ல பையன் மாற்று ஜாதியாக இருந்தாலும் ஏற்கிறோம் என்கிற முடிவுக்கு வந்து பல காலங்கள் ஆகிற்று!
இப்படியான மனிதர்கள் தங்களுக்குள் இணை தேட திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களால் உருவாக்கப்பட்டது தான் பெரியார் சுயமரியா தைத் திருமண நிலையம். இதன் துணை அமைப்பு மன்றல்!
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மன்றல் நிகழ்ச்சி, கடந்த ஞாயிறு 29.05.2022 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
சுயமரியாதை வாழ்வே; சுகவாழ்வு!
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி பேசியபோது, "பெரியார் திடலுக்கு வந்திருக்கிற உங்களுக்கு வாழ்த்துகள்! ஒருமனதாயினர் தோழி! இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்! திருமணம் என்பது தனிப்பட்ட இருவர் மட்டுமல்ல; இரண்டு குடும்பங்கள் இணைவது! ஒருவரை ஒருவர் மதிக்கும் போது இருவரின் சுயமரியாதையும் பாதுகாக்கப்படுகிறது. அப்படி அன்போடும், பண்போடும் நடப்பதே சிறந்த சமூகத்திற்கான அடையாளமும் ஆகும்!
மணமகன் வீடு என்றால் ஏதோ உயர்வாகவும், பெண் வீடு என்றால் தாழ்வாகவும் கருதப்படுகிறது. ஒருவரை ஒருவர் சமமாகப் பார்க்க வேண்டும். அதைத்தான் வாழ்வியல் தத்துவமாகப் பெரியார் உருவாக்கிக் கொடுத்தார். நல்லதொரு வாழ்க்கைக்கு ஜாதி, சமயம், சாஸ்திரம், மூடநம்பிக்கைகள் தேவையில்லை!
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்கிற நிலை யெல்லாம் தமிழ்நாட்டில் இருந்தது. அதேநேரம் இவ்வகைத் திருமணத்திற்கு எதிர்ப்புகளும் இருந்தன. எதற்கு எதிர்ப்பு இருந்ததோ, அதுவே அதிகமாக நடந்தன தமிழ்நாட்டில்!
அப்படி சிறப்பு வாய்ந்த இந்தச் சுயமரியாதைத் திருமண நிலையம் இன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலோடு பெரும் சாதனை படைத்து வருகிறது எனத் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி பேசினார்.
வாய்ப்புகளும்; வசதிகளும்!
தமிழ்நாட்டில் இருந்து எண்ணற்றோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் திடலில் நுழைந்ததும் அவர்களுக்கு வழிகாட்டவும், வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தன்னார்வலர் கள் அடையாள அட்டையுடன் காத்திருந்தனர். ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணிமுறிவு பெற்றவர்கள், துணையை இழந்த வர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய அய்ந்து பிரிவுகளுக்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு விண்ணப்பமும் சிறப்புக் கவனம் எடுத்துப் பார்க்கப்பட்டது. இதில் சட்ட உதவி மய்ய அரங்கமும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. மணமுறிவு மற்றும் துணையை இழந்தவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள், சான்றிதழ் சரிபார்ப்புகளும் அங்கு நிகழ்ந்தன. காரணம் நிகழ்வில் பங்கேற்பவர்களின் தகவல்கள் உண்மைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்கிற சமூக அக்கறையே!
அறிஞர் அண்ணா வாழ்க!
மன்றல் நிகழ்வின் இடையே ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தருமபுரியைச் சார்ந்த இராமன் - அருள்மொழி இணையரின் மகள் இளையகுமாரி, வடிவேல் - பழனியம் மாள் இணையரின் மகன் ஹரிபந்த் இருவரின் இணையற்பு விழாவை நடத்தி வைத்து, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது, ஆண் பெண் இணைந்து வாழ்வது இயற்கையானது! இதில் மூன்றாவது மனிதருக்கு இடமில்லை!
இன்றைக்குச் சுயமரியாதைத் திருமணங்கள் எளிதாகி விட்டது. அதேநேரம் அருப்புக்கோட்டை அருகில் சுக்கில நத்தத்தில் பெரியார் முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்த ஆண்டு 1928. அன்றைய காலத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது. அப்படியானால் அந்தத் திருமணமும் செல்லாது, கணவன் மனைவி உறவும் கிடையாது, அவர்களுக்குப் பிறக்கும் குழந் தைகளும் சட்டப்படி செல்லாதவர்கள். இப்படி சுயமரியா தைத் திருமணம் செய்து கொண்டவர்களை 40 ஆண்டு களாகச் சட்டம் ஏற்கவில்லை.
"சட்டம் ஏற்காவிட்டால் என்ன? எங்கள் தலைவர் பெரியார் சொல்கிறார், நாங்கள் செய்வோம்," என எண்ணற்ற வர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். பிறந்த நாளில் அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனதும் 1967 ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் எனச் சட்டம் இயற்றினார். இதற்கு முன்னர் 40 ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை சுயமரியாதைத் திருமணங்களும் இதனால் செல்லுபடி ஆகின.
இன்றைக்குப் பெரியாருக்குப் பின் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பாகவும், செழுமையா கவும் செயற்பட்டு வருவதால், மன்றல் போன்ற சாதனைகளை எங்களால் காண முடிகிறது எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
சுய அறிமுகம்! சுயமரியாதை!!
இணை தேடி நிகழ்வில் பதிவு செய்தவர்கள் மொத்தம் 462. இதில் ஜாதி மறுப்பு 169, ஜாதி, மத மறுப்பு 215, மாற்றுத் திறனாளிகள் 6, மணமுறிவு 53, துணை இழந்தோர் 19. நிகழ்வில் பங்கேற்ற மொத்த ஆண்கள் 297, மொத்தப் பெண்கள் 165.
இவர்கள் ஒவ்வொருவரும் மேடையில் ஏறி தங்களின் பெயர், படிப்பு, வயது, பணி, வருமானம் குறித்தத் தகவல் களையும், தங்களுக்கு எப்படியான துணை வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார். தங்களை அறிமுகம் செய்து கொண்ட போதே, இவர்களிடம் வெளிப்பட்ட சுய மரியாதை உணர்வு அசாத்தியமானது!
1) ஜாதி மறுப்பு, மத மறுப்பு போல தாலி மறுப்பு என்ப தையும் மன்றல் விளம்பரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார் ஒரு பெண் தோழர். தாலி ஏன் தேவையில்லை என்பதைப் புரிந்துக் கொண்டவர் எனக்கு இணையாக வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
2) இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் விபத்தொன்றில் மறைந்துவிட்டார். நான்கு வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறார். நான் தனியார் நிறுவனத்தில் ரூபாய் 20 ஆயிரம் ஊதியம் ஈட்டுகிறேன். மனைவியை இழந்த அல்லது பிரிந்த ஒரு வாழ்க்கைத் துணை எனக்கு வேண்டும் என்றார் ஒரு இளம்வயது பெண். தமது 4 வயது மகனுடன் அவர் அந்நிகழ்வில் பங்கேற்றார்.
3) நான் வழக்குரைஞர் படிப்பு முடித்துள்ளேன். முற் போக்குச் சிந்தனையில் ஈடுபாட்டுடன் இருக்கிறேன். எனக்கு வழக்குரைஞர் மணமகன் தேவை எனத் தம் அம்மாவை அழைத்துக் கொண்டு துணை தேடினார் அந்தப் பெண் வழக்கறிஞர்.
4) எனக்கு முதல் திருமணம். மணமுறிவுப் பெற்ற அல்லது துணையை இழந்தவர்களை இணையாகத் தேடுகி றேன் என்றார் ஒரு இளைஞர்.
5) நான் நல்ல இலாபகரமான தொழில் செய்கிறேன். எனக்கு வரும் இணையரையும் அந்த நிறுவனத்தில் பணி யில் அமர்த்தி, இலாபத்தில் பங்கு கொடுத்து, கூட்டாளியாக மாற்றிக் கொள்வேன் என்றார் வேறொரு இளைஞர்.
6) நான் ஒரு பெரியாரிஸ்ட். பெண்ணுக்கு என்னைவிட வயது கூடுதலாக இருக்க வேண்டும் என்றார்
7) பையனின் விவரங்கள் அனைத்தையும் கூறிவிட்டு, எப்படியான பெண் வேண்டும் எனக் கூறினார் ஒருவர். இறுதியில் எனது நண்பர் தான் மணமகன். அவர் கோயம் புத்தூரில் இருக்கிறார். விடுமுறை கிடைக்கவில்லை என நண்பருக்குத் துணைத் தேடினார் அவர்.
8) எனக்கு 50 வயதாகிறது. மிஞ்சூரில் ஆசிரியராக இருக்கிறேன். நான் மணமுறிவுப் பெற்றவள். எனக்கு ஒரு துணை வேண்டும் என்றார் அந்தப் பெண்மணி. பொது மேடையில் துணிச்சலாகக் கூறுகிறேன் என்று நினைக் காதீர்கள். இப்படியான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட பெண்களுக்கு வாய்ப்பில்லை என்று வேதனைப்பட்டார்.
9) சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டார் ராஜிவி.
"நான் விழுப்புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறேன். உங்களிடம் என்னை அறிமுகம் செய்வதையே மகிழ்ச்சியாக எண்ணுகி றேன். மனதிற்கு இணக்கமான சூழலை உணர்கிறேன். மாற் றுத் திறனாளி என்பது உடலுக்குத்தானே தவிர, மனதுக்கு அல்ல என்பதை நன்கு அறிந்தவர்கள் நீங்கள். என்னைப் போன்றே எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என் கனவு, என் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றார் ராஜீவி.
சிரித்த முகத்துடன், 100 விளக்குகள் வெளிச்சம் முகத்தில் பட்டாற் போல அப்படி ஒரு உற்சாகம்! அப்படி ஒரு தன்னம்பிக்கை! அரங்கமே அந்த நம்பிக்கை மனுசிக்கு ஆரவாரம் செய்து பெருமைப்படுத்தியது!
வெற்றியோ, தோல்வியோ மனிதரை வீழ விடாமல் பிடித்துக் கொள்வார் பெரியார். திராவிடர் கழகம் செய்யும் ஒவ்வொரு பணியும் மனிதநேயப் பணிகளுக்கு எடுத்துக் காட்டானவை! எல்லோரும் பயன் பெறட்டும்! மகிழ்வித்து மகிழ்வோம்!
நன்றி!
No comments:
Post a Comment