வரி ஏய்ப்பு: தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

வரி ஏய்ப்பு: தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 29  வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசு வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வணிக வரித் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது: 

2022- - 2023ஆம் நிதியாண்டில் வணிகவரித் துறை மானியக் கோரிக்கையின் போது, வரி ஏய்ப்பு குறித்து வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும், வரி ஏய்ப்பினை சிறப்பாக கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவ லர்களுக்கு வெகுமதி வழங்க நடப்பாண்டில் 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். 

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் வணிக வரித்துறை ஆணையர் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அதன் மூலம் வரி வசூல் செய்யும் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வெகுமதியாக தரப்படும். அதேபோன்ற இடைக்கால வெகுமதியாக 5% அல்லது ரூ.10 ஆயிரத்துக்கும் வழங்கப்படும். 

ரூ.4 லட்சம்  மேல் தருவதாக இருப்பின் வணிக வரிகள் ஆணையரின் பரிந்துரையின் பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒரு தனிநபர் அல்லது தகவல் அளிப்பவர்களின் குழுவிற்கு வெகுமதி அளிக்கப்படலாம். அதே நேரத்தில் அரசு அலுவலராக இருப்பின், அதாவது ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள் ரூ.1,00,000க்கு மிகாமல் அனுமதிக்கப்படும். 

வெகுமதியாக ரூ.4,00,000 வரை ஒரு தனிப்பட்ட அதிகாரி அல்லது குழுவிற்கு, பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன்,வணிக வரித்துறை ஆணையரின் சிபாரிசின் பேரில் அனுமதிக்கப்படலாம். ஒரு அதிகாரி ரூ 10 லட்சம் வரை வெகுமதி பெற தகுதியுடையவர்.

இதற்கான வெகுமதிகளைத் தருவதற்கு சென்னை-1, சென்னை-2,  திருச்சி,மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் போன்ற அலுவலகங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும். தகவல் தருபவர்களுக்கு ரூ.62 லட்சம், அதிகாரிகளுக்கு ரூ.1.04 கோடி மொத்தம் ரூ.1.66 கோடி வழங்க வேண்டும். 

வணிக வரி ஆணையரின் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்த அரசு, அதை ஏற்றுக்கொண்டு ரூ.1.66 கோடியை  2022-2023ஆம் நிதியாண்டிற்கான தகவல் வழங்கு பவர்கள் மற்றும் வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு வெகுமதிகளை வழங்க ஆணையிடப்படுகிறது. 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

No comments:

Post a Comment