செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவீதம் நீர் சேமிப்பு குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவீதம் நீர் சேமிப்பு குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை,ஜூன்10-சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,018 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 76 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 439 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 120 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 115 மில்லியன் கன அடி மட்டும் இருப்பு உள்ளது. இதில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 460 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்தம் 22 அடி நீர் உள்ளது. 

மாநகரின் குடிநீர் தேவைக்காக 180 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தினசரி 23 மில்லியன் கன அடி உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் இதே அளவு நீர் வந்தால் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது. தற்போது 85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியை பொறுத்தவரையில் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு மேல் நீர் சேமிக்கப் படுவதில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி (7.9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் 6 ஆயிரத்து 959 மில்லியன் கன அடி (6.9 டி.எம்.சி.) நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment