திருச்சி, ஜூன் 1 டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பும் முன் நேற்று (31.5.2022) திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், வேளாண் பெருமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு வழங்கக்கூடிய திட்டம் செயல் படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் உழ வர்கள் பயன் பெறுவார்கள் என்று
தெரிவித்தார். அவர் கூறியதாவது:
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இதே திருச்சியில் ஒரு மாநில மாநாடு போல் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு ஏழு உறுதிமொழி களை அறிவித்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
1 வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!
2 மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
3 குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
4 அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
5 எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
6 உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
7 அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு!
இந்த ஏழு பிரகடனத்தை நான் அந்தக் கூட்டத்தில் அறிவித்தேன். கடந்த ஒரு வருட காலத்தில் நம்முடைய தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கக்கூடிய திட்டங்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலை யில் இருக்கிறது. அந்த வகையில் ‘மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி’ என்ற வாக்குறுதி அது எப்படி நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை பார்ப்பதற்காக தான் இரண்டு நாட்களாக டெல்டா பகுதியில் ஒரு மின்னல் வேக சுற்றுப் பயணத்தை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். கடந்த ஆண்டே மகசூல் பெருகிவிட்டது. அதில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
* காவிரி டெல்டா பாசனம் மாவட்டங்களாக இருக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
* கடந்த ஆண்டு, இந்த மாவட்டங்களை கடைமடை வரைக்கும் தண்ணீர் தங்குதடையின்றி செல்லக் கூடிய வகையில் ரூ.65 கோடியில் 4061 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து நீர்வழித் தடங்களையும் தூர்வாரக் கூடிய வகையில் 647 பணிகளை செயல் படுத்தினோம். ஜூன் 12ஆம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டது. ரூ.61 கோடியே 9 இலட்சத்திற்கு குறுவை தொகுப்புத் திட்டமும் செயல்படுத்தப் பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு குறுவையில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரும், சம்பாவில் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கரும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி பயிர் சாகுபடி மற்றும் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது. இதே சாதனையை, இந்த ஆண்டும் தொடர்ந்து ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பே, டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 4,964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வார் வதற்கான 683 பணிகளை விரைவாக முடிக்க நான் உத்தரவிட்டிருந்தேன்.
அந்தப் பணி இன்றுடன் முழுமையடைந்து நீர்வழிப்பாதைகள் தூர்வாரக்கூடிய பணி களை மிகச் சிறப்பாக முடித்திருக்கிறோம். 1580 கிலோ மீட்டர் நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட இருக்கிறது. மொத்தம் 4,418 கிலோமீட்டர் தூரத்திற்கு முடிக்கப்பட்டிருக் கிறது.
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படக் கூடிய நாள் ஜூன் 12ஆம் தேதி, எல்லோ ருக்கும் தெரியும். ஆனால் மே 24ஆம் தேதியே நீர் திறந்து விடப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். சுதந்திர இந்தியாவில், மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இது தான் முதல் முறை. இந்த வரலாற்றுச் சாதனையானது இந்த ஆண்டிற்கு தான் நிகழ்ந்திருக்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் என சாகுபடி பரப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன் றைய தேதியில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 352 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. வேளாண் பெருமக்களின் நலன் கருதி, இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு வழங்கக்கூடிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவார்கள்.
வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தோடு, 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு 47 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் முழு மானிய விலையில் வழங்கப்படும். வேளாண்மை விரிவாக்க மய்யங்கள் மூலம் 2,400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் 4 கோடியே 20 லட்சம் ரூபாயில் வழங்கப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாக, கடந்த ஆண்டு சாதனையானது இந்த ஆண்டும் தொடரப் போகிறது. அதைவிடக் கூடுதல் பயனை அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
முன்கூட்டியே திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை முறையாகப் பயன்படுத்தியும், தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தும் பல்வேறு உழவர் நலத்திட்டங்களையும் பயன் படுத்தியும், நெல் உற்பத்தியில் புதியதொரு சாதனையை இந்த ஆண்டும் டெல்டா உழவர்கள் படைக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment