சென்னை, ஜூன் 30 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து 10 ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தெரிவு செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தலா ரூ.50 ஆயிரம் அல்லது புத்தகம் வெளியிட ஆகும் செலவு, இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் படைப்புகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரு முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே மறுமுறை விண்ணப்பித்தல் வேண்டும்.
இந்த நிதியுதவியை வருகிற 2022-2023 ஆம் நிதியாண்டில் இருந்து ரூ.50 ஆயிரத்தில் இருந்து
ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment