ஆசிரியர் அவர்களே, உங்கள் தலைமையில் - உங்களைப் பின்தொடருவோம்! 1938 - 1948 - 1965 இல் தமிழ்நாட்டிலிருந்து இந்தி புறமுதுகிட்டு ஓடியதே - அதே நிலைமையை உருவாக்க உறுதியெடுப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

ஆசிரியர் அவர்களே, உங்கள் தலைமையில் - உங்களைப் பின்தொடருவோம்! 1938 - 1948 - 1965 இல் தமிழ்நாட்டிலிருந்து இந்தி புறமுதுகிட்டு ஓடியதே - அதே நிலைமையை உருவாக்க உறுதியெடுப்போம்!

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சூளுரை

சென்னை, ஜூன் 11  தார்ச் சட்டியை எடுத்துக்கொண்டு, நான் இந்தியை அழிப்பேன் என்று புறப்பட்டுவிட்டார் ஆசிரியர் அண்ணன் வீரமணி அவர்கள்;  நாங்கள் உங்களைப் பின்தொடருவோம். இங்கே இருக்கக்கூடிய இளைஞர்களும் சரி, இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் சரி, நாங்கள் உங்களுடைய தலைமையில், உங்களைப் பின்தொடருவோம். 1938, 1948, 1965 இல் இந்தி புறமுதுகிட்டு ஓடியதே அதே நிலைமையை இங்கே உருவாக்க உறுதியெடுத்துக் கொள்வோம் என்றார்  மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள். 

இந்தி எதிர்ப்பு மாநாடு

கடந்த 4.6.2022  அன்று மாலை    சென்னை சைதாப் பேட்டை தேரடி வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிட இயக்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கக்கூடிய ஒப்பற்ற தலைவர்

ஆதிக்க இந்தியை எதிர்த்து நீதிக்குப் போராடி மாண்டோர் நினைவுக்கு எமது மரியாதை என்றும் உரியது என்னும் அளவில் - நடராசன், தாளமுத்துவுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற தன்மான இயக்கமான திராவிடர் கழகம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்குகிற - அய்யா அவர்களுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா அவர் களுக்குப் பிறகு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு, :ஆருயிர் இளவல் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட திராவிட இயக்கத் திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கக்கூடிய திராவிடர் கழகத்தினுடைய ஒப்பற்ற தலைவர் ஆருயிர் அண்ணன் ஆசிரியர் வீரமணி அவர்களே,

இந்த அழைப்பிதழிலே பெயரிடப்பட்டு இருக்கக் கூடிய இயக்கங்களின் தலைவர்களே,

கருஞ்சட்டை வீரர்களே,

வீடுகளில் இருந்து இவ்வுரையைக் கேட்டுக் கொண் டிருக்கக்கூடிய தாய்மார்களே,

பத்திரிகையாளர்களே, ஊடகவியலாளர்களே வணக்கம்!

நேரமோ மிகவும் சுருக்கம். அதற்குள் என்னுடைய கருத்துகளை நான் பதிவு செய்தாகவேண்டும்.

1924 இல் திருவண்ணாமலை 

காங்கிரஸ் மாநாட்டில்....

1924 இல் திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியி னுடைய தலைவராக, அந்த மாநாட்டிற்குத் தலைமை யேற்ற தந்தை பெரியார் அவர்கள், நமக்கு வரப் போகிற ஆபத்து இந்தி என்கின்ற கொடுந்தீதான் என்று குறிப்பிட்டார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, கான்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அனைவரும் இந்தி படிக்க வேண்டும்; இந்தி பேசவேண்டும் என்று காந்தியார் பேசியபொழுது, அந்த மேடையிலேயே மறுத்துப் பேசி, அப்படி இந்தியை வற்புறுத்தக் கூடாது; நீங்கள் திணிக்கக் கூடாது, அது நடக்காது என்று எதிர்குரல் கொடுத்தவர் நம்முடைய அய்யா பெரியார் அவர்கள்.

கரந்தை தமிழ்ச்சங்கம் 

வீறுகொண்டு எழுந்தது

1937 ஜூலை 25 ஆம் தேதி, அன்றைய தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், மாணவர்கள் எல்லாம் இந்தி படிக்கவேண்டும் என்று சொன்னார்.

17 ஆம் நாள், உமாமகேசுவரனார் நடத்திய கரந்தை தமிழ்ச்சங்கம் வீறுகொண்டு எழுந்தது.

நாவலர் சோமசுந்தர பாரதியாருடைய தலைமையில், இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. கா.சு.பிள்ளை வரவேற்புரை ஆற்றினார்.

அதிலிருந்து நான்காவது நாள், திருவையாற்றிலே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டார்கள்; இந்தியை எதிர்த்துத் திரண்டார்கள்.

அதிலிருந்து ஆறாவது நாள், திருநெல்வேலியில் அண்ணா அவர்கள் பேசிய பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு தமிழருக்கே என்று அய்யா அறிவாசான் பெரியார் அவர்கள் பிரகடனம்

அதற்கடுத்து, 1937, டிசம்பர் 14 ஆம் நாள், காவிரி ஆற்றங்கரையில் தமிழர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான், தமிழ்நாடு தமிழருக்கே என்று அய்யா அறிவாசான் பெரியார் அவர்கள் பிரகடனம் செய்தார் கள். அந்தப் பிரகடனத்தினுடைய இறுதியாக மூச்சு அடங்குவதற்கு முன்பு அவர் உரையாற்றிய இடமும் தியாகராயர் நகர்தான் (19.12.1973).

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்தியை எதிர்த்துப் போராட்டக் களங்கள் வளர்ந்துகொண்டிருந்த அந்த வேளையில், வரிசையாகக் கூட்டங்கள்; அப் பொழுது திருச்சி உறையூரிலிருந்து அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் நடை பயணம் வந்தார்கள். 41 நாள்கள் - ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, அறிவாசான் பெரியார் அவர்களும், மறைமலை யடிகளும் வழியனுப்பி வைக்க, இங்கே சென்னை கடற்கரையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் வீதியிலே வில், புலி, கயல் கொடியேந்தி வந்தார் கலைஞர்

ஆக இந்தக் காலகட்டத்தில்தான் அரைக்கால் சட்டை போட்ட மாணவனாக, சின்னஞ்சிறுவனாக,

ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்!

நீ தேடி வந்த கோழையுள்ள நாடு 

இதுவல்லவே!

என்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் திருவாரூர் வீதியிலே வில், புலி, கயல் கொடியேந்தி வந்தார்கள்.

ஆக, ஒரு பெரிய நீண்ட வரலாறு இதற்கு இருக்கின்றது. 

இந்தப் போராட்டக் களங்களுக்கு மத்தியில்தான், 1963 இல், ஆட்சி மொழி மசோதா இந்திய நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அது 1965, ஜனவரி 25 இல் இந்தி ஆட்சி மொழியாக முடிசூடிக் கொள்ளும் என்று அறிவித்தது.

உடனே அக்டோபர் 13 ஆம் தேதி, அதே ஆண்டில், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தை அறிவித்து, அதற்குத் தலைவராக டாக்டர் கலைஞர் அவர்களை அறிவித்தது.

இதற்கிடைப்பட்ட காலகட்டத்தில், 1938 இல் இந் தியை எதிர்த்து அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் காரணமாக அவர் கைதாவதற்கு முதல்நாள், நடராசன் கைது செய்யப்பட்டார்.

நடராசன் கைது செய்யப்பட்டு சிறை சென்று, 1938, ஜனவரி 15 ஆம் தேதி அவர் மறைந்துபோனார்.

அவருடைய உடலை சுமந்துகொண்டு போய் மூலக்கொத்தளம் சுடுகாட்டிலே வைத்தார்கள்.

தமிழ்மொழியைக் காப்பதற்கும், இந்தியை எதிர்ப்பதற்கும் நீங்கள் உறுதி கொள்வீர்களா?

அப்போது அண்ணா அவர்கள் சொன்னார்கள், ‘‘அதோ நடராசன் படுத்திருக்கிறார்; மூச்சு நின்று விட் டது; இதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது; நாசியிலே சுவாசம் இல்லை. ஆனால், கேசம் சிலிர்த்து நிற்கிறது. இங்கே வந்திருக்கக்கூடிய ஒவ்வொருவரும் நடரா சனைப் பின்பற்றி தமிழ்மொழியைக் காப்பதற்கும், இந்தியை எதிர்ப்பதற்கும் நீங்கள் உறுதி கொள்வீர்களா?'' என்று கேட்டார்.

அதிலிருந்து சில நாள்களில் மார்ச் 12 ஆம் தேதி, தாளமுத்து மறைந்து போனார்.

ஆக, நடராசனும், தாளமுத்துவும் தங்கள் உயிர்களை இந்தியை எதிர்த்துப் பறிகொடுத்தார்கள்.

இங்கே எரிகின்ற நெருப்பு கனன்று கொண்டே இருக்கும். ஒளி தீயாகப் புறப்படும்

இரங்கலுரை ஆற்றுகின்றபொழுது அண்ணா அவர் கள் பேசினார்கள்,

‘‘இங்கே எரிகின்ற நெருப்பு இன்னும் சிறிது நேரத்திலே அணைந்துவிடும்; ஆனால், அந்த நெருப்பு நிரந்தரமாக அணையாது. அது கனன்று கொண்டே இருக்கும். ஒளி தீயாகப் புறப்படும்'' என்றார்.

அப்படி கூறியதினுடைய விளைவுதான், 1964 இல் மதுரைக்கு போராட்டக்காரர்களை வழியனுப் பச் சென்று டிசம்பர் 26 ஆம் தேதியன்று, டாக்டர் கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில், அந்தப் போராட்டக் களத்தினுடைய முக்கியமான காலகட்டத்தில், கலைஞர் அவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். 

தந்தை பெரியாருக்கு 

மூன்றாண்டு கால சிறைத் தண்டனை

தாளமுத்து, நடராசன் மறைந்த அந்த சோதனையான சூழ்நிலையில், பெரியார் அவர்கள் டிசம்பர் 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டபொழுது, நீதிபதியிடத்தில், அதிகபட்ச தண்டனை எவ்வளவு கொடுக்க முடியுமோ, அவ்வளவு கொடுங்கள். மிகக் குறைந்த வசதிகளுடைய வாய்ப்பை எனக்கு சிறையிலே தாருங்கள் என்று சொன்னவுடன்,

மூன்றாண்டு கால சிறைத் தண்டனை என்று நீதிபதி அறிவித்தார்.

எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மூன்று வருடம், மூன்று வருடம், மூன்று வருடம் என்று சொல்லிக் கொண்டு, அந்த மஞ்சள் நிற சால்வையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, சிங்கம் போன்று வந்தார்.

பெல்லாரி சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். உடல்நலம் குன்றியதன் காரணமாக, மே 22 ஆம் தேதியன்று, தந்தை பெரியார் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தமிழ்நாட்டின் எதிர்ப்பு காரணமாக 

பின்வாங்கி ஓடியது இந்தி

இந்தச் சூழ்நிலையில், போராட்டக் களம் அதிகமான அந்த வேளையில், 1938 இல் காங்கிரஸ் கொண்டு வந்த இந்தி பின்வாங்கியது. 1948 இல் மீண்டும் கொண்டு வந்தார்கள்; மீண்டும் எதிர்த்துப் போராட்டம்; மீண்டும் பின்வாங்கி ஓடியது.

பண்டித ஜவகர்லால் நேரு கொடுத்த வாக்குறுதி, அவருடைய மறைவோடு அதுவும் மறைந்து போனது.

‘‘1965, ஜனவரி 26 இந்தி இந்த நாட்டினுடைய ஆட்சி மொழியாக முடிசூடிக் கொள்ளும் என்று அறிவித்திருந்தார்களே, அது துக்க நாள் - அது குடியரசு நாளல்ல. நமது குடிகெடுக்கும் நாள்'' என்று அண்ணா அவர்கள் கூறினார்கள்.

வீட்டிற்கு வீடு கருப்புக் கொடியேற்றுங்கள் என்றார் - தமிழ்நாட்டில் அத்தனை வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றினார்கள்.

லட்சிய நடிகர்  எஸ்.எஸ்.ராஜேந்திரன், கைத்துப் பாக்கியோடு வந்து கொடியேற்றினார்.

ஒன்றரை லட்சம் மாணவர்கள் திரண்டார்கள்!

1965 இல் நடைபெற்ற அந்தப் போராட்டக் களத்தில் மாணவர்கள் லட்சக்கணக்கிலே கலந்துகொண்டார்கள். நானும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையிலே சொல்லுகிறேன், ஒன்றரை லட்சம் மாணவர்கள் திரண்டார்கள்.

கல்லூரி, பள்ளி மாணவர்கள், மாணவிகள் எல்லோ ரும் திரண்டு, கோட்டையை நோக்கிச் சென்றார்கள்; தாக்கப்பட்டார்கள். தடியடியில் கபாலங்கள் உடைந்தன.

1965, ஜனவரி 27 இல், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அணிதிரண்டு வந்தார்கள்; இந்தி ஒழிக; தமிழ் வாழ்க! என்று.

அவர்களுடைய நெஞ்சைப் பார்த்துச் சுட்டான்; தொண்டைக் குழியைத் துளைத்துக் கொண்டு போனது துப்பாக்கிக் குண்டு.

இராஜேந்திரன் அந்த இடத்திலேயே கீழே விழுந்து, ரத்த வெள்ளத்திலே மிதந்தான்.

மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்

இந்தச் செய்தி காட்டுத் தீயென நாடெங்கும் பரவியது. மாணவர்கள் அஞ்சல் நிலையங்களைக் கைப்பற்றி னார்கள்; ரயில்  நிலையங்களைக் கைப்பற்றினார்கள். மாணவர்கள் நடத்திய போராட்டம் கண்டு, வடபுலத்திலே இருக்கக்கூடிய இராணுவம், இந்திய எல்லைகளைக் காக்கவேண்டிய இராணுவம், தமிழ்நாட்டிற்குள்ளே வந்தது.

ஆரணியிலே, பொள்ளாச்சியிலே, திருப்பூரிலே, திருச்செங்கோட்டிலே துப்பாக்கிச் சூடு. மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்; தமிழ்நாட்டு வாலிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் மொத்தம் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கணக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, பெரிய பள்ளத்தைத் தோண்டி, அதில் பிணங்களைப் போட்டு தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தினுடைய விளைவுதான், 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்திற்கு வந்தது.

சட்டப்பேரவையில் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள், இனி இந்திக்கு இங்கே இடமில்லை. இங்கே தமிழும், ஆங்கிலமும்தான் என்று சட்டம் கொண்டு வந்தார்.

இதை அவர் உயிர் போவதற்குமுன்பு, கடைசியாகப் பேசிய கூட்டத்திலே சொன்னார்,

மாற்ற முடியாத மூன்று சட்டங்கள்

நான் கொண்டு வந்த சட்டங்களிலே மாற்ற முடியாத மூன்று சட்டங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு என்ற பெயரை யாராலும் மாற்ற முடியாது.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் - தமிழும், ஆங்கிலமும்தான் என்ற சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

அண்ணா அவர்கள் மறைந்தார்கள். தொடர்ந்து இந்தித் திணிப்பிலே ஈடுபட்டு வந்த அந்த முயற்சிகளுக்கு எதிராக, டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்தது.

இப்பொழுது ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி, இந்தியை எல்லா இடங்களிலும் திணித்துவிட்டது. வடகிழக்கு மாகாணங்களில் ஆங்கிலம்தான் ஆட்சி மொழி. ஆனால், 24 ஆயிரம் இந்தி ஆசிரியர்களை அங்கே நியமித்திருக்கிறார்கள்.

வெறும் 24 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ரூபாயா?

சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ரூபாய் செலவழிக் கிறார்கள் என்றால், மொத்தமே இந்தியாவிலேயே 24 ஆயிரம் பேர்தான் சமஸ்கிருத மொழி அறிந்தவர்கள்.

ஆகவே, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இப்படித் திணிக்கிறார்களே, இத்தனை உயிர்கள் பறிபோயிற்றே, இத்தனை பேர் ரத்தம் சிந்தினார்களே, இத்தனை பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்களே!

இந்தியை எதிர்த்து தீ வைத்துக்கொண்டு மாண்டவர்கள்

கீழப்பழுவூர் சின்னச்சாமி, அண்ணா பேசியதை நினைவிலே வைத்திருந்து, இந்த நெருப்பு அணையாது - நடராசன் உடலில் பற்றிய நெருப்பு அணையாது என்று சொன்னதை நினைவில் வைத்திருந்து, 1964, ஜனவரி 24 ஆம் தேதி நள்ளிரவில், மனைவி தூங்கிக் கொண்டி ருந்தபொழுது, மகள் திராவிடச்செல்வியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, சித்தார்த்தன் அரண்மனையை விட்டு வெளியேறியதைப் போல வந்து, திருச்சி ரயில் நிலையத்திற்கு எதிரே - தனது உடல்மீது பெட்ரோலை ஊற்றி, நெருப்பு வைத்துக்கொண்டு, அந்த நெருப்பிலே கருகி மடிந்தான்.

கீழப்பழுவூர் சின்னச்சாமியைப் பின்தொடர்ந்து, கோடம்பாக்கம் சிவலிங்கம்,  விருகம்பாக்கம் அரங்க நாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சாரங்கபாணி தங்கள் உடலில் தீ வைத்துக்கொண்டு மாண்டார்கள்.

அமுதம் அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - மொழிக்காகத் தங்கள் உயிரைத் தந்தார்கள்.

தமிழ்நாட்டிலே இந்தியைத் திணித்துவிடலாம் என்று அமித்ஷாக்கள் நினைத்தால், 

அது ஒருபோதும் நடக்காது

ஆகவே, இதற்கு ஒரு தியாக வரலாறு இருக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதற்கு இவ்வளவு பேர் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டோ அல்லது தமிழ்நாட்டிலே இந்தியைத் திணித்துவிடலாம் என்று அமித்ஷாக்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.

அஞ்சல் துறையில், வானொலி துறையில் இந்தியா வினுடைய அத்துணைத் துறைகளிலும் இந்தியைக் கொண்டு வந்துத் திணிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சாதாரண ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுதுகூட, இந்தி தெரிந்திருக்கவேண்டும் என்று அங்கே தமிழும், ஆங்கிலமும் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 844 பேர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் 400 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தார்ச் சட்டியை எடுத்துக்கொண்டு, 

நான் இந்தியை அழிப்பேன் என்று புறப்பட்டார்

எனவே, இவ்வளவு ஆபத்துகள் சூழ்ந்திருக்கும் நேரத்தில், அண்ணன் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், இப்பொழுதுதான் போராட்டத்திற்கு நேரம் வந்திருக்கிறது - பெரியாரும், அண்ணாவும் சொன்னது அவருக்கு நினைவிலே இருப்பதினால்தான், தார்ச் சட்டியை எடுத்துக்கொண்டு, நான் இந்தியை அழிப்பேன் என்று புறப்பட்டுவிட்டார்.

நாங்கள் உங்களைப் பின்தொடருவோம்

நாங்கள் உங்களைப் பின்தொடருவோம். இங்கே இருக்கக்கூடிய இளைஞர்களும் சரி, இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களும் சரி, நாங்கள் உங்களு டைய தலைமையில், உங்களைப் பின்தொடருவோம்.

முத்தமிழ் அறிஞருடைய மகன் தளபதியினுடைய ஆட்சிக் காலத்தில், இந்தியை இங்கே நுழையவிடாமல், மீண்டும் விரட்டியடித்தார்கள் - 1938 இல் விரட்டியடித்த தைப்போல, 1948 இலே விரட்டியடித்ததைப்போல, 1965 இலே புறமுதுகிட்டு ஓடியதே இந்தி, அதே நிலைமையை நாம் உருவாக்குவோம். உறுதியெடுத்துக் கொள்வோம்!

தமிழ் வாழ்க! இந்தி அழிக! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment