சென்னை, ஜூன் 3 சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடியில், நிறம்மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நேற்று (2.6.2022) அர்ப்பணித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், உட் கட்டமைப்புகளை மேம்படுத்த `சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.409.19 கோடி மதிப்பில், 183 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாரம்பரியக் கட்டடமான சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் ரூ.1.81 கோடி மதிப்பில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. அடிப்படை வண்ணங்களைச் சேர்த்து, அவற்றின் மூலம் பல வண்ணங்களை உருவாக்கி, தினந்தோறும் ஒளிரூட்டும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்களுக்கு அர்ப்பணித்து, தான் மாநகராட்சி மேயராக இருந்தபோது மேற்கொண்ட பணிகளை நினைவுகூர்ந்தார்.
மேலும், கடந்த ஓராண்டில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட, வளர்ச்சித் திட்டப் பணிகள் அடங்கியசாதனை மலரையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment