சென்னை, ஜூன் 9 தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 7.6.2022 அன்று உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பு அருகாமை பள்ளி விதிகளின் அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் தற்போதுள்ள நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வரும் கல்வியாண்டில், பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்குரிய விண்ணப்பங்களை சரிபார்த்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும், கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்த பெறப்பட்ட கருத்துருக்களை மீண்டும் ஆய்வு செய்து 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் தகுதியான பள்ளிகளை தரம் உயர்த்த தேவையான பள்ளிகளின் பட்டியலை அனுப்பவேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பள்ளிகளின் பெயர் அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டு 164 பள்ளிகளின் தரம் உயர்த்த தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment