சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நீர் 1.479 டிஎம்சி தமிழ்நாடு வந்தது நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நீர் 1.479 டிஎம்சி தமிழ்நாடு வந்தது நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜூன் 8 சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாடு எல்லைக்கு 1.479 டிஎம்சி வந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல்   4 வரை டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழ்நாடுத்துக்கு திறந்து விடுகிறது.

அந்த வகையில், 2021-22 நீராண்டில், ஜூன் 14ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை 4.479 டிஎம்சி கிருஷ்ணா நீரை சென்னைக் குடிநீர் தேவைக்குத் திறக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையின் கோடை கால நீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என ஆந்திர அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, சென்னை குடிநீருக்காக கடந்த மாதம் 5ஆம் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை, கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு திறந்துவிட்டது.

இதன்படி, தொடக்கத்தில் விநாடிக்கு 500 கனஅடி என திறக்கப்பட்ட நீரின் அளவு கடந்த மாதம் 6ஆம் தேதி காலை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கண்டலேறு அணையிலிருந்து 152 கி.மீ.தொலைவில் உள்ள தமிழ்நாடு எல்லையான, ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி காலை நீர் வந்தடைந்தது. அங்கிருந்து, 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு அன்று இரவே வந்தடைந்தது.

அவ்வாறு கண்டலேறு அணையிலிருந்து, சென்னை குடி நீருக்காக வரும் கிருஷ்ணா நீர், கடந்த மாதம் 8ஆம் தேதி காலை முதல், நேற்று காலை வரையான ஒரு மாதத்தில், தமிழ்நாடு எல்லைக்கு 1.479 டிஎம்சி வந்துள்ளது.

இதனால், 3.231 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 1.033 டிஎம்சியாக உள்ளது. இதில்,செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 788 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment