அண்ணாவின் பெயரால் கட்சி வைத்திருப்போரே - அண்ணா, 'தீபாவளி' வாழ்த்துக் கூறியதுண்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

அண்ணாவின் பெயரால் கட்சி வைத்திருப்போரே - அண்ணா, 'தீபாவளி' வாழ்த்துக் கூறியதுண்டா?

அண்ணாவின் பெயரால் அண்ணா தி.மு.க. என்று கட்சி வைத்துள்ளனர்; ஆனால், அண்ணா வின் கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவது குறித்து   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு.

நேற்று (4.5.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடை பெற்ற விவாதங்களின்போது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் நத்தம் விசுவநாதன் அவர்களும், அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர் களும் முதலமைச்சரை நோக்கி சில அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்று ‘‘தீபாவளி பண்டிகை''க்கு வாழ்த்துச் சொல்வதில்லையே முதலமைச்சர் என்று கேட்டுள்ளனர். இதுபோல அவர்களில் சிலர் கேட்பதும் உண்டு.

ஏன் சொல்லவில்லை?

அவர்களை நோக்கி நாமும் ஒரு கேள்வியை முன் வைக்க விரும்புகிறோம்.

உங்கள் கட்சியின் பெயர் என்ன?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்த அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதோ - அதற்கு முன்போ ‘‘தீபாவளி பண்டிகை''க்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறாரா?

ஏன் சொல்லவில்லை?

காரணம் வெளிப்படை.

திராவிடர்களை, ‘அசுரர்கள், அரக்கர்கள்' என்று கூறி, கொன்று அழித்த கதை மட்டுமல்ல; ‘‘இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான். அதனை மீட்க மகாவிஷ்ணு பன்றி அவ தாரம் எடுத்து,  கடலுக்குள் சென்று பூமியை மீட்டார்; பிறகு பூமாதேவிக்கும் - பன்றி அவதார மகா விஷ்ணுவிற்கும் பிறந்த குழந்தை நரகாசுரன். அவனை கிருஷ்ணாவதாரம் கொன்றார். அந்த நாள்தான் தீபாவளி'' என்று சற்றும் அறிவுக்குப் பொருந்தாத, பகுத்தறிவிற்கும், மனிதாபிமானத்திற்கும் விரோதமான கதைக்கு உண்மையான ‘திராவிட மாடல் ஆட்சி' முதலமைச்சர் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா?

பா.ஜ.க.வின் குரலாக....

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். தனது மதம் ‘திராவிட மதம்' என்று பதிவு செய்தது மறந்துவிட்டதா?

இப்படியா பா.ஜ.க.வின் குரலாக நீங்கள் மாறுவீர்கள் - வெட்கமாக இல்லையா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.5.2022


No comments:

Post a Comment