கருநாடகா கல்வி அமைச்சரின் விளக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

கருநாடகா கல்வி அமைச்சரின் விளக்கம்!

பிஜேபி ஆளும் கருநாடக மாநிலத்தில் நாராயண குரு, தந்தை பெரியார், பகவத் சிங் ஆகியோரைப் பற்றிய பாடங்கள் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதானது - பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கீழ்க்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

"சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சமூக சீர்திருத்த வாதிகள் நாராயண குரு, பெரியார் ஈ.வெ.ரா. அல்லது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பற்றி எந்த ஒரு பாடமும் நீக்கப்படவில்லை. பாடப்புத்தகத்தில் சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. சந்திரசேகர ஆசாத், ராஜ்குரு, சுக்தேவ் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சில பாடங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெரியார் பற்றிய பாடம் நீக்கப்படவில்லை. மாறாக அதில் இடம் பெற்றிருந்த ஹிந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் திப்பு சுல்தானுக்கு துதிபாடிய வாக்கியங்களை நீக்கியுள்ளோம். அந்த வரலாற்றின் மறுபக்கம் பற்றிய தகவல்களையும் சேர்த்துள்ளோம். நாராயண குரு பற்றிய பாடம் பத்தாம் வகுப்புக்குப் பதில் வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

யாருக்கும் எந்த துதியும் பாடாமல் வரலாற்றை உண்மை யானதாக மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கவுள்ளோம். இதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அது பற்றி விவாதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

அதேபோல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கேஷவ் பலிராம் ஹெட்கேவரின் பேச்சை பாடப் புத்தகத்தில் சேர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். ஹெட்கேவர் மிகப்பெரிய தேசிய வாதி ஆவர். காங்கிரஸில் இருந்து கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கிலாஃபத் இயக்கம் தோல்வி யடைந்த பின்னர் தேசத்தின் மாண்பினை தூக்கி நிறுத்த 1925இல் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கண்டறிந்தார்.

இதற்கு முன்னால் இருந்த பாடநூல் கழக தலைவர் பரகூர் ராமச்சந்திரப்பா பல்வேறு பாடங்களை நீக்கியிருக்கிறார். குறிப்பாக கு.வேம்புவின் கவிதைகள், காந்தி, அம்பேத்கர் பாடங்களில் சில பிரிவுகளை நீக்கி இருக்கிறார். அப்போ தெல்லாம் எந்த சர்ச்சையும் எழவில்லை. ஆனால் இப்போது சிலர் - அறிவுஜீவிகள் என அழைத்துக் கொள்ளும் சிலர் பாடப்புத்தகத்தில் ஜாதி, மதம் எனப் பிரச்சினைகளை எழுப்பி அரசியல் செய்கின்றனர் " என்றார்.

- 'இந்து தமிழ் திசை' (இணையம்), 24.5.2022

இதன் மூலம் கருநாடக மாநில கல்வி அமைச்சர் என்ன கூற வருகிறார்? தந்தை பெரியார் ஹிந்து மதத்தைப் புண்படுத்தினாரா? ஹிந்து மதம் நாட்டின் பெரும்பான்மையான மக்களைப் புண்படுத்தி இருக்கிறதா? 

பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பித்தல் கூடாது - தீண்டாமை மனித சமத்துவத்துக்கு எதிரானது என்று கூறுவது குற்றமா?

இவற்றைப் பற்றியெல்லாம் சுட்டிக்காட்டி, சமுதாயத்தி லிருந்து அகற்றுவதுதானே சமூக சீர்திருத்தம்?

சமூக சீர்திருத்தவாதிகள் என்ற பகுதியில் இடம் பெற்ற தலைவர்களின் சமூக சீர்திருத்த கருத்துகளை அகற்றுவது முரண்பாடும் முட்டாள்தனமும் அல்லவா! 

ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹெட்கேவர் பேச்சைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கும் பேச்சுக்கே இட மில்லையாம்.

ஹெட்கேவர் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார்? காந்தியாரின் ஒத்துழையாமையும், அகிம்சைவாதமும் மக்களை கோழையாக்கியது என்றார்.

நாடெங்கும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போராட்டம் நடப்பதுபற்றியும் குறை கூறுகிறார். அந்தப் போராட்டம் ஏன் கிளம்பியது என்பது பற்றி ஹெட்கேவர் விளக்கம் கூறியதுண்டா?

இஸ்லாமியர்களைக் குறிப்பிடும் இடங்களில் ஹெட்கேவர் பயன்படுத்தும் சொல்லாடல் "யவன விஷ நாகங்கள்" என்பதாகும்.

இத்தகைய மனித வெறுப்புப் பேர்வழி பற்றிப் பாடத் திட்டத்தில் வைத்தே தீருவார்களாம்.

ஆர்.எஸ்.எஸின் தந்தையாரான ஹெட்கேவர் போட்டகுட்டியான பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் சீர்திருத்தவாதிகளின் கருத்துகள் நீக்கப்படத்தானே செய்யும்? சீர்திருத்தவாதிகள் கொல்லப்படத்தானே செய்வார்கள்?

ஹெட்கேவர் போன்ற மனிதகுல விரோதிகளின் பாடங்கள் தானே இடம் பெறும்.

தந்தை பெரியார், நாராயண குரு, பகத்சிங் போன்றவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று எழுச்சியும் கிளர்ச்சியும் பெறச் செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வு!

No comments:

Post a Comment