வெறுப்பு! வெறுப்பு!! வெறுப்பு அரசியல்தானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

வெறுப்பு! வெறுப்பு!! வெறுப்பு அரசியல்தானா?

108 மூத்த அதிகாரிகள்,ஓய்வுபெற்ற நீதிபதிகள் பிரதமர் மோடியின்மீது தாக்கிக் கடிதம்

புதுடில்லி,மே 2- மூத்த உயரதி காரிகள், ஓய்வு பெற்ற நீதிஅரசர்கள் என 108 பேர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நாட்டின் அரசமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள் ளதுபோல் உள்ளது. அண்மைக் காலமாக, பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் வெறுப் புகள் நிறைந்த ஒரு வெறித்தனத்தைக் காண்கிறோம். இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும், இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் மவுனம் காப்பது காது கேளாதது போல் உள்ளது எனவும், அவர்கள், மிகவும் காட்ட மாகவும், கடுமையாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

அக்கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 

"இந்தியாவில் நாம் இதற்கு முன்பு இல்லாத அச்சுறுத்தலை எதிர் கொள் கிறோம். இதன்மூலம் அரசமைப்பு மட்டுமின்றி இந்தியாவின் தனித்துவமான சமுதாயமும் ஆபத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் மிகப்பெரிய நாக ரிகத்தின்படி அமைக்கப்பட்ட அரச மைப்பு கிழிக்கப்பட வாய்ப்புள்ளது. 

மவுனம் கலைந்து  தீர்வு காண்க! 

உங்கள் அமைதி நாட்டின் சமூக அச்சுறுத்தலை இன்னும் அதிகப்படுத்தி விடும். இதனால் மவுனம் கலைந்து தீர்வு காண வேண்டும். உங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில்தான் மிகவும் ஆர்வத்துடன் வெறுப்பு அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். நாங்கள் ஒருபோதும் இத்த கைய கருத்துகளை வெளியிட விரும் புவது இல்லை. ஆனால் அரசமைப்பு நிறுவனங்களை அழிக்கும் நோக்கிலான இடைவிடாத வேகம் எங்கள் கோபத் தையும், வேதனையையும் வெளிக்காட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளது. 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வன்முறை!

கடந்த சில ஆண்டுகளாக அசாம், டில்லி, குஜராத், அரியானா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சிறு பான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ் லிம்கள்மீதான வெறுப்பு வன்முறைகள் அதிகரித்துள்ளன. பா.ஜ.க. ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், டில்லியிலும் (டில்லியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை) இப்பிரச் சினைகள் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளன. 

சிறுபான்மையினர் உரிமைகள் பறிப்பு!

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப் பும், தீங்கு செய்யும் மனப்பான்மையும் மாநிலங்களில் உள்ள கட்டமைப்புகள், நிறுவனங்கள், நிர்வாக செயல்முறைகளில் ஆழமாக பதிந்துள்ளது வருத்தமளிக் கிறது. பா.ஜ.க. ஆட்சி என்பது சட்ட நிர்வாகம், அமைதி மற்றும் நல்லி ணக்கத்தை பேணுவதற்கான கருவியாக இருப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை நிரந்தர அச்சத்தில் வைத் திருக்கும் வழி முறையாக மாறியுள்ளது. இது கவலையளிக்கிறது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளை வெறுப்பின் இலக்குகளாக மாற்றி அவர்களின் அடிப்படை உரிமைகளை தெரிந்தே பறிக்கும் ஒரு நாடாக நாம் மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அச்சம் ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. இதனால்தான் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் உருவமாக புல்டோசர் அரசியல்முறை மாறியிருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. சரியான செயல்முறை, சட்டத்தின் ஆட்சி எனும் கருத்துக்கள் தகர்க்கப்பட்டதால் தான் டில்லி ஜஹாங்கிர்புரியில் உச்சநீதி மன்ற உத்தரவை மீறியும் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் மவுனத்தை கலைத்து வெறுப்பு அரசியலுக்கு தீர்வு காண உங்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும்'' எனவும், 

மத்திய பிரதேசம், டில்லி ஜஹாங் கிர்புரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியதாக முஸ்லிம்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இஸ்லாமி யர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூ கங்கள் மட்டுமல்ல நாட்டில் அரசமைப்பு சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டது போல் உள்ளது. இந்த சமூக அச்சு றுத்தலுக்கு எதிரான உங்களது மவுனம் காது கேளாதது போல உள்ளது. 

வெறுப்பு அரசியலின் புதிய பரிமாணம்!

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த வெறுப்பு அரசியல் புதிய பரிமாணத்தை பெற்றிருக்கிறது. அரசமைப்பின் தனித் துவம் சிதைக்கப்படாமல் காக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இக்கடிதத்தில் மேனாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ.) சிவசங்கர் மேனன், மேனாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், மேனாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, டில்லி மேனாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் உள்பட 108 பேர் கையெழுத்திட்டு அக்கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளனர்.


No comments:

Post a Comment