எது நெருக்கடி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

எது நெருக்கடி?

 - கி.தளபதிராஜ்

பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதர்களால் சுமக்கப்படும் பல்லக்கில் மடாதிபதிகள் பவனி வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வருகிறது. தருமை ஆதீனம், திருப்புகளூர் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியோர் இப்படி பட்டணப் பிரவேசம் செல்ல இருப்பதை அறிந்து மேற் படி ஆதீனகர்த்தர்களை நேரில் சந்தித்து பட்டணப் பிரவேசத்தை கை விடுமாறு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டு கோள் விடப்பட்டது.  தருமை ஆதீனகர்த் தரும், திருப்புகளூர் சந்நிதானமும் கழகத் தின் வேண்டுகோளை ஏற்று அந்த நேரத்தில் தங்கள் பட்டணப்பிரவேசத்தை கைவிட்டு மகிழுந்தில் சென்றனர். 

உலகெங்கும் சுயமரியாதைக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது சுயமரியாதைக்கு இழுக்கல்லவா? 70களில் தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட கை ரிக்‌ஷாக்கள் ஓடிக் கொண்டி ருந்தன. ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கலைஞர் அவர்கள் தன் ஆட்சியில் மனி தனை மனிதன் சுமக்கும் இந்த அவலம் தொடரக் கூடாது என்று சொல்லி அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கை ரிக்‌ஷாக் களை ஒழித்து சட்டம் இயற்றிய தோடு அதற்கு மாற்றாக பாதிக்கப்பட்டவர் களுக்கு சைக்கிள் ரிக்‌ஷாக்களை அளித்து மகிழ்ந்தார்! 

‘மகா பெரியவா’ என்று அவாளால் சொல்லப்பட்ட சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரர் 1968 வரை மனிதர்கள் தூக்கும் பல்லக்கில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார். சென்னையில் பெரியார் இதை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பவே, சங்கரரும் சனாதனத்தை கை விட்டு காரில் போக ஆரம்பித்தார்  என்பது தான் தமிழ கத்தின் வரலாறு. கலைஞரின் கை ரிக்க்ஷா ஒழிப்புக் கூட இதன் தொடர்ச்சிதான்.

தமிழ்நாட்டில் தருமை ஆதீனம், திரு வாவடுதுறை ஆதீனம், போன்ற மடங்க ளெல்லாம் தமிழ் வளர்த்த சைவ மடங்களாக போற்றப்பட்டவை. அப்படிப்பட்ட மடங்க ளுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டிருந்தார். பா.ஜ.க அர சின் ஊது குழலாக, இந்தி - சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சேவகராக விளங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை தமிழ் வளர்த்ததாக சொல்லப்படும் சைவ மடங்கள் அழைக்கலாமா? என கேள்வி எழுந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ‘நீட்’ உட்பட பல்வேறு மசோ தாக்களை குடியரசு தலைவரின் ஒப்புத லுக்கு அனுப்பாமல் தமிழக மக்களின் உணர் வுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநரின் வருகையைக் கண்டித்து பல்வேறு கட்சியினரும் சமூக நீதியில் அக் கறை கொண்ட இயக்கத்தினரும் இணைந்து அவருக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புகொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என்று தொடர்ந்து ஓலமிட்ட தின மலர் 24.4.2022  அன்று இது தொடர்பாக ‘நெருக்கடி கூடாது!’ என்ற தலைப்பில் ஒரு தலையங் கத்தையே எழுதியிருக்கிறது. ஆதீனங்களால் ஆண்டுதோறும் நடத்தப் படும் பட்ட ணப்பிரவேசம் நிகழ்ச்சி இந்த ஆட்சி வந்த பிறகு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாம்.

ஆதீனகர்த்தர்கள் பல்லக்கில் இருந்த படி மடம் அல்லது கோயிலின் மாட வீதி களில் வலம் வருவார்களாம். அப்போது கோயில் நிலங்களை அனுபவிப்பவர்கள் ஆதீனங்களுக்கு பூஜை செய்து அவர்கள் அனுபவிக்கும் நிலம், வீடு, கட்டடங் களுக்கான வரியை செலுத்துவதுதான் பட் டணப் பிரவேசமாம்.

ஆதீனங்களின் சொத்துகளை அனுப விப்போம். அதன் மரபுகளை மதிக்க மாட் டோம் என்பது நியாயமல்ல என்று எழுதி யிருக்கிறது.

கோயில் சொத்துகள் ஆதீன கர்த்தர்களின் பரம்பரை சொத்தா? பரம்பரை சொத்தே ஆனாலும் அதை அனுபவிப் பவர்கள் ஆதீனத்தை தலையில் சுமந்து பூஜை செய்து வரி கட்ட வேண்டும் என்று எழுதுவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம் அல்லவா? இனி பெரு முதலாளிகள் எல்லாம் தங்கள் வாடகை வசூலை வசூ லிக்க வரும்போது அந்தந்த கடைக்காரர்கள் அவர்களை தலையில் சுமந்து பூஜை செய்து வரியை கொடுக்க வேண்டும் என்று எழு தினாலும் எழுதுவார்கள். பார்ப்பனர்கள் யாரும் கோயில் சொத்துகளை அனுபவிப் பதில்லையா? அதில் எத்தனை பார்ப்பனர் கள் இப்படி ஆதீனங்கள் பட்டணப் பிரவே சம் செய்யும் போது பல்லக்கை தங்கள் தோளில் சுமக்கிறார்கள்? உதாரணத்திற்கு ஒருவரை காட்ட முடியுமா? அப்படி ஒரு நிலையிருந்தால் தினமலர் இதை எழுதுமா? பல்லக்கை தூக்குபவர்கள் சூத்திரர்கள் தானே என்கிற திமிர்தானே?

ஆத்திக நண்பர்கள் யாராவது இதை படித்து விட்டு சுயமரியாதை பீறிட்டு இனி வரும் காலங்களில் தாங்கள் சுமக்கும் பல்லக்கை நடு வழியில் போடாமல் இருக்க வேண்டும். ஆதீனங்கள் கவனமாக இருக் கட்டும். ஆதீனங்கள் வாழ்க!

No comments:

Post a Comment