இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் பெற்று இரு நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நல்தருணம் இது!
ஒன்றிய அரசு முன்னின்று செய்ய தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம்!
ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு பெரும் கொடுமைகள் செய்திருந்தும், அவற்றை எல்லாம் மறந்து, அந்நாடு பொருளாதாரத்தில் நலிவுற்றுத் தத்தளிக்கும் இந்தக் காலகட்டத்தில், மனிதாபி மானத்தோடு உதவி செய்து வருகிறோம். இந்த நிலையில், இரு நாடுகளின் உறவைக் கெடுத்து வரும் கச்சத்தீவுப் பிரச்சினையில் தலையிட்டு, கச்சத்தீவை மீட்டிட ஒன்றிய அரசு முன்னின்று முயற்சிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது சரியாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசி ரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு.
இன்னும் நான்கு நாள்களில் முதலாண்டை நிறைவு செய்யப் போகிறது, ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' அவர்களின் தலைமையிலான சாதனை படைத்த ‘திராவிட மாடல்' ஆட்சியியான ஒப்பற்ற ஆட்சி.
பாராட்டத்தக்க ஓராண்டு தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்!
இந்த ஓராண்டிற்குள் அவர் பதவியேற்றது முதல் இன்றுவரை எண்ணற்ற சோதனைகள் - சவால்கள்! கரோனா கொடுந்தொற்று, அதன் மூன்று படையெடுப் பினை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்ற அவரும், அவரது ஆணையைச் செயலாக்க தேனீக்களாகப் பறந்து செயல்படும் அமைச்சர்களும், அதிகாரிகளும் அரும்பாடுபட்டு ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கருவூலம் காலி, கடனுக்கு மேல் கடன் வாங்கி ஆட்சியை நடத்தவேண்டிய பொருளாதார நெருக்கடி - நிர்பந்தம் ஒருபுறம்.
என்றாலும், அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட பதவியேற்ற வினாடிமுதல் தம் ஓய்வில்லா உழைப்பின்மூலம் உறுதியோடும், தக்க அறிஞர்கள் ஆலோசனையோடும் வெற்றிகரமாக செயலாக்கி மகளிரும், தொழிலாளரும், அனைத்துத் தரப்பு மக்களும் மகிழும் வண்ணம் அவர்களுக்கு உதவிகள்; மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், கல்லூரி, பாலிடெக்னிக்கில் படிக்கும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை என நலத் திட்டங்கள்!
மனிதநேயமிக்க ஆட்சி!
சமூகநீதிக்கான களத்தில் நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமானாலும் அதற்காக முதலமைச்சரும், அவரது ஆட்சியும் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு, தனி மசோதக்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றி, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆட்சியாக ‘திராவிட மாடல்' ஆட்சி இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை, மீனவ சகோதரர்களின் வாழ்வுரிமை, தொழி லுரிமைப் பிரச்சினை முதல் பல்வேறு பிரச்சினைகளுக் கெல்லாம் இந்த அரசு கருணை உள்ளத்தோடு தனது உரிமைக் குரலை எழுப்புவதும், உதவிக்கரம் நீட்டு வதிலும் உயர்தனிச் சாதனை நிகழ்த்தி, மனிதநேய ஆட்சி இது என்பதைக் காட்டுவதில் உயர்ந்து நிற்கிறது!
இலங்கை மக்களின் அவதியும் - நமது முதலமைச்சரின் கருணை பொழிவும்!
இலங்கையில் அந்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சிமூலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, வசதி வாய்ப்புகளை இழந்து, தெருவில் நின்று போராடி ஆட்சியாளர்களுக்கு எதிராக முழக்கமிடும் காட்சி அவலம் நாளும் நடைபெறுகிறது.
இவர்கள் நம் பக்கத்து நாடு, தொப்புட்கொடி உறவுகள், அதைத் தாண்டிய மனிதநேய அடிப்படையில் - ‘‘எம் இனம் அழிய நினைத்தவர்கள்'' என்ற நினைப் பைக்கூட மறந்து, துறந்து அனைவருக்கும் கட்சி, ஜாதி, மத, இன பேதம் மறந்து, 80 கோடி ரூபாய் மதிப்பில் உதவி - 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கும் மருந்து மற்ற பொருள்கள் என்று தருவதற்குத் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசின் அனுமதி கேட்கப்பட்டது.
நமது முதலமைச்சர், பிரதமரிடம் நேரில் வற்புறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி, காலத்தாற் செய்த அந்த உதவி அம்மக்களின் துயர் துடைக்க ஆவன செய்து கருணை மழை பொழியக் காரண மாயிற்று.
பகைவர்களுக்கும் உதவும் மனிதப் பண்பு
அதுபோலவே, ஒன்றிய அரசும்கூட கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவிட தேவைப்படும் பெருந்தொகை களையும் கொடுத்து உதவியுள்ள நிலையில், நாம் குறை ஏதும் கூறுவது தவிர்த்து, ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வதே மனிதாபிமானம்' என்று கருதி, ஒன்றிய அரசு உதவுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க வில்லை. முள்ளிவாய்க்கால் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் மனதில் பதிந்த ஆறாப் புண்ணாக இருக்கும் நிலையில்கூட, பகைவர்களாயினும்கூட அவர்கள் அல் லல்படும்போது அவர்கட்கு உதவுவதே மனித மாண்பு என்று இந்தியாவின் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உதவிடுகின்றன!
கச்சத்தீவினை மீண்டும் பெற முயலலாம்!
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம், குறிப்பாக இராமேஸ்வரம் மற்றும் கடற்பகுதி மீனவ சகோதரர்களின் வாழ்வுரிமை, மீன் பிடி உரிமையைக் காத்து, அவர் களையும் வறுமையிலிருந்து காப்பாற்றி, நிம்மதியான வாழ்வைத் தருவது ஒன்றிய, மாநில அரசுகளின் இன்றியமையாத கடமை அல்லவா?
எனவே, இந்த நேரத்தில் சட்ட விரோதமாக முன்பு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவினை மீண்டும் பெற - மீட்டெடுக்க ஒன்றிய அரசு பெரிதும் இப்போது முயன்றால், இருதரப்பும் - இலங்கைக்கும் - இந்தியாவிற்கும் இருவழி ஒற்றுமை, வாழ்வுரிமை, கசப்புணர்வு நீங்கி இங்குள்ள மீனவ சகோதரர்கள் திருவிழா நடத்துவதிலிருந்து மீன்பிடி உரிமைவரை எல்லாவற்றிலும் ஒரு சகோதர மனோபாவத்துடன் நடக்க வாய்ப்பும் ஏற்படும்.
உதவி செய்ததற்காக கைம்மாறு (Quid Pro Quo) கேட்கவில்லை - நீண்ட கால நிலுவைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவும், இரு நாடுகள், இரு தரப்பு மக்கள் மத்தியில் நல்லெண்ணமும், சமூகமாகத் தீர்வுகள் காண வழிவகையும் ஏற்படக் கூடும்!
நல்லுறவுக்கு நல்வழி!
கச்சத்தீவு தமிழ்நாட்டிலிருந்து, இந்தியாவிலிருந்து சென்ற வரலாறும், ஆதாரமும் ஏராளம் உண்டு. ஆகவே, அதை ஒன்றிய அரசு முன்னின்று செய்ய தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சிறப்புத் தீர்மானத்தை முன்பு நிறைவேற்றியிருந்தபோதிலும்கூட, புதிய சூழ்நிலையில் வற்புறுத்தி, நியாயம் கேட்டால், நல்லுறவு வலுப்பட்டு, நல்ல புரிதல் ஏற்பட ஒரு நல்ல அறிகுறி சமிக்கையாக இருக்கும் -ஒன்றிய - மாநில அரசுகளுக்கும் பெருமை சேர்க்கும்!
சென்னை
3.5.2022
No comments:
Post a Comment