திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 8, 9, 11 ஆகிய நாட் களில் முறையே மன்னார்குடி, நெய்வேலி, சேலம் கருப்பூரில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
8ஆம் தேதி மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலையருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன? தருமபுரத்தில் உள்ள பண்டார சன்னதி பல்லக்கில் பவனி வரும் அறிவிப்பினைத் தொடர்ந்து - திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பட்ட எதிர்ப்பினைத் தொடர்ந்து - மயிலாடுதுறை கோட்டாட்சியர் பல்லக்கு ஊர்வலத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தார்.
இந்த நிலையில் பி.ஜே.பி. - சங்பரிவார்கள் பின்னணியில் பல்லக்கு ஊர்வலம் நடந்தே தீரும் என்ற தோரணையில் பிரச்சினைகளை ஆரம்பித்துள்ளனர். ஆளுநரும் அண் மையில் தருமபுர மடத்துக்குச் சென்று வந்துள்ளார்.
இப்பொழுது பிரச்சினை மத சம்பந்தப்பட்டது என்பது உண்மையல்ல. தி.மு.க.வுக்கு எதிராக பி.ஜே.பி., சங்பரிவார் நடத்தும் அரசியல் தான் இதில் பதுங்கியுள்ளது.
இதே பி.ஜே.பி.யோ அதன் வட்டாரமோ, தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு தேவை என்று குரல் கொடுத்ததுண்டா? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுண்டா?
'சைவமும், தமிழும் தழைத்தோங்குக' என்று கூறும் தருமபுரம் ஆதினத்துக்கு உட்பட்ட கோயில்களில் தமிழ் வழிபாட்டு உரிமை உண்டா?
ஆரிய சமஸ்கிருதப் பண்பாட்டுத் திணிப்புக்கு அடிமைப் பட்ட இந்த மடங்கள், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பல்லக்குச் சவாரி என்னும் மனித உரிமைக்கு எதிரான மனிதவதைக் குற்றமான ஒரு செயலில் ஈடுபட்டால் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
இந்த நிலையில் மன்னார்குடி ஜீயர் என்ற பார்ப்பனர், தருமபுரம் ஆதினத்தில் நடைபெறும் பல்லக்குச் சவாரியைத் தடுத்தால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாட்டில் நடக்க முடியாது என்று அடாவடித்தனமாக ஒரு ரவுடி போல வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளாரே! அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? தொடர்ந்து இது போன்ற வன்முறைப் பேச்சுகளைக் கொட்டிக் கொண்டு தான் உள்ளார். ஏன் நடவடிக்கை இல்லை. காவி கட்டினால் எதையும் பேசலாமா? எப்படியும் நடந்து கொள்ளலாமா?
இதன் அடிப்படையில் தான் திராவிடர் கழகம் வரும் 8ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. மனித உரிமை விரும்பிகள் இதில் பங்கெடுப்பார்களாக! இதில் கட்சியைப் பார்க்க வேண்டாம்!
இரண்டாவதாக வரும் 9ஆம் தேதி நெய்வேலி, தந்தை பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். நிலக்கரி நிறுவனம் நெய்வேலியில் இருந்தாலும் அங்கே அதிகாரிகள், பொறியாளர்கள், பணியாளர்கள் எல்லாம் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம்.
அண்மையில் 300 பொறியாளர்கள் தேர்வு செய்யப் பட்டதில் ஒரே ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றால் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல் லுவது!
இதுவரை நடைமுறையில் இல்லாத 'கேட்' என்ற நுழைவுத் தேர்வைத் திணித்ததன் விளைவு தான் இது. இது குறித்து நமது முதல் அமைச்சரும், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நிலக்கரி நிறுவனத்துக்குத் தங்கள் நிலங்களை வழங்கிய வர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பணியமர்த்தம் செய்வதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இருந்த முறை இதன் மூலம் தடுக்கப்படுகிறது. இது அசல் நம்பிக்கைத் துரோகம் இல்லையா?
என்.எல்.சி.யின் இந்த அநீதியான போக்கைக் கண்டித்துதான் திராவிடர் கழகத்தில் சார்பில் மே 9 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மூன்றாவதாக 11ஆம் தேதி சேலம் கருப்பூர் பெரியார் பல்கலைக் கழகத்தில் சமூகநீதிக்கு எதிரான நியமனங்களைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
பணி நியமனங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர குறிப்பிட்ட எந்த ஜாதியின் ஆதிக்கத்திற்கும் இடம் இருக்கக் கூடாது.
பெரியார் பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் ஊடுருவலும், துள்ளிக் குதிக்கிறது. ஒரு பி.ஜே.பி. பிரமுகர் துணைவேந்தர் இல்லாத நேரத்தில், துணைவேந்தரின் அறையைத் திறக்கச் செய்து, துணை வேந்தரின் நாற்காலியில் அமர்கிறார் என்றால் அதன் பொருள் என்ன?
எல்லா நியமனங்களிலும் முறையாக இடஒதுக்கீடு பின் பற்றப்பட வேண்டும்; குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தால், நிர்வாகம் எந்தத் திசையில் பயணிக்கும்?
இந்த நிலையைக் கண்டித்துதான் வரும் மே 11 அன்று சேலம் கருப்பூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
எங்கெங்கெல்லாம் சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும், மனித உரிமைக்கும் ஊனம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் திராவிடர் கழகம் திண்டோள் தூக்கிப் போராடும்!
போராடுவோம் - வெற்றி பெறுவோம் - வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!
No comments:
Post a Comment