தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளை தடுக்கப்படுமா? சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையக் குழு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளை தடுக்கப்படுமா? சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையக் குழு ஆய்வு

கடலூர்,மே 30- சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்து அறநிலையத் துறை ஒருங்கிணைப்பு குழுவினர் ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ( கனகசபையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோயில் பொதுதீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ( கனகசபையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆணையரின் தாக்கீது

இந்த நிலையில் கடலூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் ஜோதி என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களுக்கு ஒரு தாக்கீதை அனுப்பியுள்ளார்.

அதில், "சபாநாயகர் கோயில் (நடராஜர் கோயில்) நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959, சட்டப் பிரிவு 23 மற்றும் 33இன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் கோயில், குழு உறுப்பினர்களால் வரும் (ஜூன்) 7-ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள், 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங் களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஆய்வு செய்யப்படும் காணிக்கை பதிவேடுகள்

கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், அதற்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய், அந்த சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின் படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப் பதிவேடு, மரப் பதி வேடு, திட்டப் பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடு களையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை மதிப்பீட்டறிக்கை, கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம், கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகியவற் றையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். குழு வின் ஆய்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment