பாணன்
"பேட்டி பசாவ், பேட்டி படாவ்"
அதாவது இம்முழக்கத்தின் பொருள் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தை களைப் படிக்கவையுங்கள் என்பதாகும்
மோடியைப் பொறுத்தவரை அவர் துவக் கத்தில் இருந்தே சிறப்பான விளம்பரக் குழுக்களைத் தன்னுடன் வைத்திருந்து வருகிறார். அவர் தேர்தல் காலத்தில் கூட மக்களை நம்புவதில்லை. விளம்பரக் குழுக்களின் விளம்பரங்களையே அதிகம் நம்புவார். அவரைப் பொறுத்தவரை விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டு வாக்களிக்கும் ஒரு நுகர்வோர்தான் மக்கள் என்று ஆணித்தரமாக நம்புபவர். துவக்கத்தில் இருந்தே அவரது ஒவ்வொரு நகர்வும் அந்த விளம்பரக் குழுக்களின் அறிவுரையின்படி தான் நடக்கிறது.
அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆண் - பெண் விகிதம் 1000\800-என்ற அபாய நிலைக்குச் சென்றுவிட்டது, இதற்கு காரணம் இந்த மாநிலங்களில் பெண் பிள்ளைகள் என்றாலே சொத்தைப் பிரிக்கும் பகை வர்களாகத்தான் இன்றும் பார்க்கிறார்கள்.
அரசியல் விளம்பரம்
இதையே தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்தி பெண்களின் வாக்குகளைப் பெற விளம்பர விற்பன்னர்கள் கொடுத்த வாசகம் தான் மேலே கூறிய "பேட்டி பசாவ், பேட்டி படாவ்". இதற்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது, மத்திய மேற்கு மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் மாநிலத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக பாஜக உறுப்பினர்கள் வென்றனர்.
தள்ளுபடி விலைக்குப் பொருட்கள் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்பவர்கள் முதலுக்கும் கீழே நட்டத்தில் வணிகம் நடத்த அவர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை, அதே தான் இங்கும் "பேட்டி பசாவ் - பேட்டி படாவ்" ஓர் அரசியல் விளம்பரமே என்பதற்கு அமித்ஷாவே சாட்சியாக உள்ளார்.
தேர்தல் வாக்குறுதியாக தந்த ஆண்டுக்கு
2 கோடிப் பேருக்கு வேலை எங்கே? பதினைந்து லட்சம் ரூபாய் எங்கே? கருப்புப்பணம் எங்கே? என்று
2014-ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து 2017-ஆம் ஆண்டில் அமித்ஷாவிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்டபோது "அவை எல்லாம் ஜும்லா" (அதாவது வாக்குகளைப் பெறக் கூறும் ஏமாற்று வேலை) என்று கூறினார்.
எதையுமே வெளிப்படையாகப் பேசும் போக்குவரத்துதுறை ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி கூறும்போது "ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பொய் வாக்குறுதிகளைக் கூறவேண்டும் இது ஒரு ஸ்டாடஜிக்" பசியோடு இருக்கும் மக்களிடம் பிஸ்கட் படத்தைக் காட்டி இது உங்களுக்காகத் தான், எங்களுக்கு வாக்களியுங்கள் பிஸ்கட் தருகிறோம் என்றால் பசித்தவர்கள் என்ன செய்வார்கள்" என்று கூறிய அவர் "வாக்குகளைப் பெற பொய்களைக் கூற வேண்டி உள்ளது, இது எல்லாம் முடியக் கூடியனவா என்று மக்கள் தான் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.
ஆனால், "பேட்டி பசாவ் - பேட்டி படாவ்" என்பது இந்திய மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்கள் குறித்த திட்டம். மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வரும் வாய்ப்பாகக்கூட இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நடப்பது என்ன,வட இந்தியா முழுவதும் பெண்கள் கொல்லப் படுகின்றனர் சிறுமிகள் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரியில் ஜம்முவில் உள்ள கத்துவா மாவட்டத்தில் பழங்குடியின 8 வயது இஸ்லாமிய சிறுமியை ஒரு வாரத்திற்கும் மேலாக கோவிலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தபிறகு முதுகில் கல்லைத் தூக்கிப் போட்டு முதுகெலும்பை உடைக்கின்றனர்.
கொலையாளிகளுக்கு ஆதரவு
அதன் பிறகு குதிரைச்சாணத்தைக் கரைத்து மூக்கிலும், வாயிலும் ஊற்றி கொலை செய்கின்றனர். கொலை செய்தவர்கள் சமூக விரோதிகள் கிடையாது, அந்தக்கோவிலின்57வயதுஅர்ச்சகர், அவரது மகன் - கடைநிலை காவல் அதிகாரி, ஹிந்துஜாகிரிதிசமிதி என்ற ஹிந்துத்துவ அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் இந்தப் படுபாதக செயலைச் செய்கின்றனர், கைதானவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள்.
இவர்கள் விசாரணையின் போது பெண் அதிகாரியிடம் "நாங்களும் பார்ப்பனர்கள், நீயும் பார்ப்பனத்தி. பார்ப்பனர்களின் எந்தச் செயலும் மனித குல நன்மைக்குத் தான் என்று வேதத்தில் எழுதப்பட்டு உள்ளது. படித்திருப்பாய், மேலும் பார்ப்பனர்கள் செய்த தவறுக்கு தண்டனைகள் கிடையாது, ஆகவே எங்கள் மீது வழக்குப் பதிய வேண்டாம். நாங்கள் விரைவில் டில்லியிலிருந்து சிபாரிசுகளைப் பெற்று உனக்கு பதவி உயர்வு பெற்றுக் கொடுப்போம்" என்கிறார்கள். இதை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விசாரணை அதிகாரி ஸ்வேதாம்பரி சர்மாஅப்படியே கூறினார்.
கொலையாளிகளுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன் றத்தில் தேசியக் கொடி ஏந்தி வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு உத்தரப்பிரதேசம் உன்னாவ், ஹத்ரஸ், இட்டா, மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன், பாக்பன், சாகர், கண்டேல்வால் போன்ற மாவட்டங்களில் சிறுமிகள், பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப் படுகின்றனர். இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சிபிரமுகர்கள்,சிக்குகிறார்கள்.
உன்னாவ் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த குல் தீப் சிங் செங்கார்,தனதுதாய்க்கு உடல் நிலை சரியில்லை, உதவி செய்யுங்கள் என்று உதவி கேட்டுச் சென்ற 16 வயது சிறுமியை குல்தீப்சிங், அவரது சகோதரர்கள், வேலைக்காரர்கள் எனப் பலர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து ஓராண்டாக காவல்துறையிடனரிம் புகார் அளித்தும் பலன் இல்லை, இதனை அடுத்து அவர் மாவட்ட தலைமைக்காவல் ஆணையரிடம் புகாரளிக்கிறார். புகார் அளித்ததால் அவரது தந்தையை காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்கின்றனர். அந்தப்பெண்ணை தீவைத்து கொல்லப் பார்த்தனர். அதன் பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு அந்தச்சிறுமியின் புகார் மனு ஏற்கப்பட்டு குல்தீப்சிங் செங்கார் கைதுசெய்யப்பட்டார். ஆனால் பாஜக அவரது நெருங்கிய உறவினருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து அவரை சட்டமன்றத்திற்கு அனுப்புகிறது.
சாமியார் ஆதித்யநாத் ஆட்சியின் இரண்டாம் பாகம் மிகவும் கொடூரமாக உள்ளது, அங்கு சிறுபான்மையினர் மற்றும் தாழ்த் தப்பட்டமக்கள் கடுமையாக கொடூ ரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற சிறுமி கடத்தி பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டார். புகார் அளிக்கச் சென்ற போது காவல்நிலைய உயரதிகாரிகளது பாலியல் வன் கொடுமைக்கும் அந்தச் சிறுமி ஆளானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மால் நகரத்தின் ஒரு மருத்துவமனைக்கு வெளியே செவிலியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார்.
காவல்துறைக்கும் பங்கு
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு சந்திரோலி மாவட்டத்தில் காவல்துறையினர் வீடுபுகுந்து கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவியை அடித்துக் கொலை செய்துள்ளனர். அவரது சகோதரியை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக மருத் துவமனையில் சிகிச்சையிலிருக்கும் கொலை செய்யப்பட்டவரின் சகோதரி கூறும்போது, "நாங்கள் தூங்கிகொண்டு இருக்கும் போது கதவு தட்டப்பட்டுள்ளது. அதை நாங்கள் திறக்க மறுத்த போது 40 காவலர்கள் கதவை உடைத்துகொண்டு வீட்டினுள் நுழைந்தனர். எனது தந்தையைப் பற்றிக் கேட்டனர். நாங்கள் எங்களுக்குத் தெரியாது என்று கூறினோம் எனக்கு முன்பாகவே எனது சகோதரியை சில காவலர்கள் உள் அறைக்குள் இழுத்துச்சென்றனர். பெண் காவலர்கள் வெளியே நின்றுகொண்டு என்னை அடித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் வெளியே வந்தனர். உள்ளே எனது சகோதரியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருந்தனர்.
இது குறித்து கேட்டபோது இரண்டு அதிகாரிகள் என்னை அறைந்தனர். திருடனின் பிள்ளைகள் நீங்கள். வீட்டை இடித்து உங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துவிடுவோம். உங்கள் அப்பனை விரைவில் சரணடையச் சொல் இல்லை என்றால் உன் அக்காபோல் உன்னையும் தொங்க விட்டு விடுவோம்" என்று கூறிவிட்டுச் சென்றனர்" என்றார்.
இது தொடர்பாக சந்திரோலி மாவட்ட காவல் ஆணையர் "இறந்துபோன பெண்ணின் உடலில் சில கீறல்கள் உள்ளது. உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது, சில காவலர்கள் அவர்கள் வீட்டிற்கு விசாரணைக்காகச் சென்றுள்ளனர். ஆனால் யாரும் அவர்களை அடிக்கவோ அல்லது துன்புறுத்தவோ இல்லை. இருப்பினும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார். மறுநாள் தேர்வு எழுத இருந்த கல்லூரி மாணவி காவலர்களால் இரவு நேரத்தில் கொல்லப்படுகிறார். முதல்நாள் வேலைக்குச்சென்ற செவிலியர் கொலைசெய்யப்பட்டு வீதியில் தொங்கவிடப்படுகிறார். இதுதான் மோடியின் "பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள்" "பெண் குழந்தைகளைப் படிக்க வையுங்கள்" என்று 2017 ஆம் ஆண்டு துவங்கிய திட்டத்தின் பலனா? என்று கேள்விகேட்கத்தோன்றுகிறது.
இவ்வளவு கொடுமைகள் நடந்தும் அந்த வடமாநிலங்களில் உள்ள மகளிர் ஆணையம் மவுனம் சாதித்துவருவதன் மூலம் ஒன்றிய பாஜக ஆட்சியின் கரங்கள் சுதந்திரமான அனைத்து ஆணையங்களின் குரல் வளைகளையும் நெரித்து வைத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதியும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment