தமிழர் தலைவரின் பெரும் பரப்புரைப் பயணம்
முனைவர்
பேராசிரியர்
ந.க.மங்களமுருகேசன்
தமிழக வரலாற்றிலும் சரி, இந்திய வரலாற்றிலும் சரி, இப்படி ஒரு பரப்புரைப் பயணம், புரட்சிப்பயணம், போர் அறிவிப்புப் பயணம் எந்தத் தலைவர் பெருமக்களும் நடத்தியதில்லை.
தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆதித்தனார் தொடர் வண்டியில் பயணித்துப் பரப்புரைப் பயணம் மேற்கொண்ட அறுபதுகளில் நிகழ்ந்ததுண்டு.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நீதி கேட்டு நெடிய பயணம் கால்நடையாகக் - கால்கள் கன்றிப் போய் கொப்பளிக்க நடந்த வரலாறும் அறிவோம். ஆனால்... ஆனால்.... என்ன?
தந்தை பெரியாரையும் தமிழினத் தலைவர் கலைஞரையும் விஞ்சி விட்டார் தனயன், உடன்பிறப்பு தமிழர் தலைவர் பகுத்தறிவுப் போராளி.
படிக்கக் கேட்கப் படங்களைப் பார்க்க வியப்பாக இருக்கிறது ஒருபக்கம் என்றாலும் உண்மையாகச் சொல்லப் போனால் வேதனையாக இருக்கிறது - அவர் மேற்கொண்ட வேதனைப் பயணத்தை அறிகையில்,
அதே வேளையில் இங்கே ஆளவந்த மேனாள் காவல்துறை அலுவல் கரார் மற்றும் ஒன்றிய அரசு ஆளும் காவி அரசு ஆகியோர் மீது சினம் பூக்கிறது, சிந்தையில் இப்படி மானிட நேயமற்ற மானிடரும் ஆளவந்தனரே என எண்ணக்குவியல் நிறைகிறது.
இந்தப் பயணம் - இந்த 89 வயது மனிதரின் போர்ப்பரணி கூட்டி வரும் பயணம் - கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவோ, புதிய எழுத்தைச் சாதனை மகுடத்தில் பதிக்கவோ இல்லை. நிச்சயமாக இல்லை.
தந்தை பெரியார் தாம் வாழ்ந்த காலத்தில் சமூகநீதி இயக்கத்தைச் தோள்மீது சுமந்த போது, மூத்திரச் சட்டி சுமந்த போது, அவ்வப்போது உடல் உபாதைகள் உறுத்திய போது உம்.... உம்.... என்று, அம்மா.. அம்மா என்று வலி பொறுக்காமல் முனங்கிய வாறே, வேறு யாரும் முன் வராததாலே நான் சுமக்கிறேன் என்றுணர்ந்ததை நினைவுறுத்துகிறது இந்த உற்றார் தொடர் பயணம்.
21 நாள்கள் நாகர்கோயில் முதல் நம் தலைநகர் சென்னை வரை தொடர் பெரும் பரப்புரை பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் 21 வயதாகிய இளைஞரா, கட்டுமஸ்தான உடல் கொண்ட கட்டிளம் காளையரா. இவ்வாறு பயணம் மேற்கொண்டால் இந்தியாவின் தலைமை அமைச்சர், குடியரசுத் தலைவர் பதவி ஏதேனும் கிட்டப் போகிறதா இல்லையே.
அகவை 89, ஆசிரியர் அவர் உடலில் மருத்துவரின் கத்தி படாத இடமே இல்லை. இந்திய வரலாற்றில் ராணா பிரதாப் சிங் என்ற ரஜபுத்திர மாவீரரைப் பற்றி எழுதுகையில் கர்னல் டாப், Fragement of a Soldier என்று குறிப்பிடுவார்.
அது போல் கண், காது, கை, கால், இதயம், வயிறு என்று உடலின் உறுப்புகள் பலவற்றிற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டவர். ஒரு முறை அல்ல, நான்குமுறை திறந்தநிலை இதயச் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்.
ஒரு முறை அல்ல இரண்டு முறை கரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டவர். எனவே, வியப்பின் மறுபெயர் வீரமணி என்று விதந்து போர்த்தப்பட்டவர். வேறு எவராயினும் இப்படித் தொல்லை சுமந்து செல்ல விழையார்.
அவரின் துணிச்சலான இந்த முயற்சிகளுக்கு உண்மையிலேயே படபடப்போடு கவலையோடு அப்பாடா பயணம் முடித்து வெற்றிமணி ஒலித்துத் திரும்பினாரே என நிம்மதிப் பெருமூச்சு விடுபவர். - அவர் உடல் நிலையை நன்கு அறிந்தவர்களில் ஒருவரான வீரப் பெண்மணி மோகனா அம்மையார். என்கிற அவர்தம் வாழ்விணையர் ஒருவர் மட்டுமே எனலாம்.
உண்மையில் அவருடைய இப்பயணம் - சமூக நீதிகாக்க மேற்கொண்ட பயணம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் காலமெல்லாம் கல்விப் பயிரைத் தமிழகத்தில் செழிக்க வைத்த மண்ணில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாயில் மண்ணைத் திணிக்கும் மய்ய ஒன்றிய அரசின் முரட்டுப்பிடிவாதக் காளைக்கு மூக்கணாங் கயிறு போட மேற்கொண்ட விழிப்புணர்வு வித்தை ஆழமாக விதைத்திட மேற்கொண்ட பயணம்.
மூன்று முதன்மைச் சிக்கல்கள் தமிழ் மண்ணை மட்டுமல்ல - இந்திய மண்ணையே பாதித்திடும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வுப் பயணம் தமிழகம் போல - இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தையுமே விழிபிதுங்க வைத்திடும், எதிர்கால இந்திய நாட்டைப் பாதிக்கும்.
உண்மையாகச் சொன்னால் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் புரட்சிக் கொடி தீப்பந்தம் ஏந்த வேண்டிய சிக்கல்கள். சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதெனில் மூன்று சிக்கல்களுமே மாநிலங்களின் உரிமையைப் பாதிக்கும் மூட மனிதர்களின் சிக்கல்கள்.
ஆனால் பாவம் இந்த மாநிலங்கள் எதை எதை எண்ணி கவலைப்படுவார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் குறித்து கவலைப்படுவார்களா? மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரவில்லை எனக் கவலைப்படுவார்களா? அந்தக் கவலை, இந்தக் கவலைகளைச் சிந்திக்க விடாமல் இந்த அடிப்படையில் பிரச்சினைகளை அமுக்கி விடுகிறதேன்?
எல்லையிலே அயலவரால் ஏற்படுவது மட்டுமல்ல இந்நாட்டிற்கு ஆபத்து, இந்திய ஒன்றிய அரசின் கரம் அரசின் இந்துத்துவாக் கொள்கையால், இவையும் நீட் தேர்வு, புதிய தேசியக் கல்விக் கொள்கையும் மாநில உரிமைப் பறிப்பு என்றும், ஒன்றிய அரசின் கொள்கை ஆகியனவும் தான் என்ற தொலைநோக்குப் பார்வை இந்த மாமனிதர் நம் தமிழர் தலைவருக்கு இருந்ததாலே தன் உடல் நலனையும் பொருட்படுத்தாது பயணம் புறப்பட்டு விட்டார். பதவி சுகம் எதவுமே இல்லாத இயக்கத் தலைவர்.
இதில் ஓர் ஆறுதல் ஒரு மகிழ்ச்சி, ஒரு நிறைவு. ஆசிரியரின் கொள்கைப் பயணத்திற்குத் தமிழ்நாட்டில் தி.மு.க., அதன் தோழமைக் கட்சிகள் ஒதுங்கி விடாமல் துணை நிற்பதே.
வழக்கம் போல் அடிமைகளான அ.தி.மு.க.வினர் கண்டு கொள்ளாமல் அடிமைப் பல்லக்குத் தூக்கிகளாக இருக்கின்றனர்.
இந்தப் பயணத்தில் 21 நாட்களில் 40 நகர்களில் வீரமணி ஓசை ஒலித்தது.
3.4.2022 அன்றும் 25.4.2022 அன்றும் இரண்டு நாட்கள் மட்டுமே ஒரே ஒரு ஊரில் பரப்புரை. மற்ற நாட்களில் எல்லா நாள்களும் இரண்டு ஊர்களில் பரப்புரை. மாலை 6 மணிக்கு ஒரு நகரம் என்றால் அதே இரவில் 7 மணிக்கு மற்றொரு ஊரில். எப்படித்தான் திட்டமிட்டாரோ, எவ்வாறு சிந்தனையைச் செலுத்தி திட்டமிட்டாரோ என்று வியக்க வைக்கிறது.
இந்த பயணத்துக்கு இடையே 14.4.2022 அன்று சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டுச் சிறப்பிக்க வருகை புரிந்ததையும் குறிப்பிட வேண்டும்.
பரப்புரைப் பயண வெற்றிக்கு வெற்றிமணி ஒலிக்கச் செய்வதற்குப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ் அவர்களும், இரா.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் பெ.சுப்பிரமணியன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத்தலைவர் ப.சுப்பிரமணியன் அவர்களும் ஆற்றிய அரும்பணி அளவிட இயலாத அற்புதப் பணி என்பதையும், பதிவு செய்தாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள இயக்கத் தோழர்களும், தி.மு.க. அதன் கூட்டணிக்கட்சியினரும் ஆற்றிய அரிய பெரிய பணியும் சொல்லாமல் விளங்கும்.
கூட்டம் நடைபெறுவது ஏதோ ஒரு நகரில் ஆனால் உலகம் முழுவதும் வாழும் மனிதர்கள் உடனுக்குடன் கேட்டு மகிழ வகை செய்த சிறப்பும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ஒரு சிறப்பைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை. 40 ஊர்களிலும் தமிழர் தலைவரின் உரை வீச்சு தனித்தனிக் கோணத்தில் அமைந்திருந்தது ஒரு வியப்பு. பெரு வியப்பு.
ஏப்ரல் திங்கள் இரண்டாம் நாள் வெளிவந்த துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வெளியிட்ட தலைப்புச் செய்தியும், அறிவிப்புமே ஆற்றுப் பெருக்கை மட்டுமல்லாமல் சுண்டி இழுக்க மட்டுமல்லாமல் ஆர்வ ஊற்றை உருவாக்கியது.
புறப்படுகிறது பிரச்சாரப்படை பூமாலை வேண்டாம்! |
கூடுங்கள்! கூடுங்கள்!! பெருந்திரளாய்!!!
குஜராத் முதலமைச்சராக இருந்த போது நீட்டையும், ஜிஎஸ்டி, ஆதார் அட்டையையும் எதிர்த்து நெடுமுழக்கமிட்ட அதே நரேந்திர மோடி பிரதமரான பிறகு "ஒப்புத்தாளம்" வாசிக்கிறார்.
திராவிட இயக்கம் எடுத்த முடிவுகள் எல்லாம் வெற்றி பெற்றதற்குக்குக் காரணம் அது. மக்களிடம் செல்வது தான் - பிரச்சாரத்தின் வாயிலாகத்தான் என்ற திராவிடர் கழகப் போர்களின் வெற்றி இரகசியத்தைச் சொல்லி இப்பொழுதும் அதே அணுகுமுறையைக் கையில் எடுத்துக் கொண்டுதான் தமிழர் தலைவர் பகுத்தறிவுப் போராளி மானமிகு. கி.வீரமணி புறப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு எதிர்ப்பு, கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும் பயணக்கூட்டத்தொடக்க விழா 3.4.2022 அன்று நாகர்கோவிலில் தொடங்கிய தொடக்கமே களை கட்டியதால் இனிவரும் பரப்புரையும் வெற்றிக்கொடி பறக்கச் செய்யும் என்பதாய் அமைந்தது.
தமிழர் தலைவர் தம் உரையின் தொடக்கத்தில் நாகர்கோவில் காவிக்குரியது என்று சிலர் பேசிக் ªகி£ண்டிருக்கிறார்கள். அது வெறும் கானல் நீர் தான். பொய் மான் தான் எனக் காட்டியிருப்பதைக் எடுத்துக் காட்டினார்.
நாகர்கோயில் தான் திராவிட இயக்கத்தின் நாகரீக தொட்டில். முதன் முதலில் இங்குதான் வாசிப்பு சாலை தொடங்கப்பட்டது. அதற்குப் பெயர் சுயமரியாதை வாசிப்புச் சாலை என்று புதிய செய்திப் பூங்கொத்தை அறிய தந்தார். நாகர்கோயிலில் அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை கேட்கத் திரண்டிருந்தனர். பயண வழி நெடுகிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஒவவொரு இடத்திலும் முதன்மை நிகழ்வை மட்டும் குறிப்பிட்டுக் கூறவேண்டியதை எடுத்து வைப்போம். நாகர்கோயிலை அடுத்து தென்காசி, நெல்லையில் 4.4.2022 அன்று பரப்புரை பயணம் நடைபெற்றது.
தென்காசியில் அவருக்குமுன் உரை நிகழ்த்திய அனைவருமே தம் வயதைக் குறிப்பிட்டுப் பேசியதைச் சுட்டிக்காட்டி "தந்தை பெரியாரைப் போல முடியும் வரை பிரச்சாரம் செய்வேன்" என்று பேசி உரையை நிறைவு செய்தவர், அடுத்து நெல்லையில் சுயமரியாதை இயக்க முதல் கூட்டம் நடைபெற்றது. நெல்லையில் தம் உரையில் அனிதாவை நினைவூட்டினார். நெல்லையில் சிற்பூந்தூர சந்திப்பில் நடைபெற்றது.
மூன்றாம் நாள் பரப்புரை 5.4.2022 அன்று தூத்துக்குடி - சிவகாசியில் நடைபெற்றது. தூத்துக்குடியில் முதல் கூட்டத்தில் மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் சமூக நீதி என்னும், உயரிய சமத்துவக் கோட்பாட்டுச் சொல்லே இல்லை, எனத் தமிழர் தலைவர் ஒன்றிய அரசின் முகமூடியைக் கிழித்தார்.
அடுத்து தூத்துக்குடியில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம், ..... சிவகாசியில் பரப்புரை சிறப்புரை முடிந்ததும் மதுரை நோக்கி பயணித்தார் தமிழர் தலைவர், நாகர்கோயிலைப் போல் சிவகாசியில் நகர மேயர் வரவேற்றார்.
6.4.2022 அன்று தேனியில் பரப்புரை நிகழ்த்தியவர், நீட் தேர்வின் அவஸ்தையை விளக்கியவர் "சரி அவர்கள் சொன்னபடியே நீட் தேர்வின் நோக்கமாகச் சொல்வது நிறைவேறி இருக்கிறதா எனக் கேள்வி கேட்டு வரிசையாக ஒவ்வொன்றுக்கும் பதிலளித்து நோக்கம் நிறைவேறவில்லை என்பதைக் கடந்து ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் மலிந்து விட்டதைக் கவலையோடும் கவனத்தோடும் உதாரணங்களுடன் மெய்ப்பித்தார்.
தேனியில் கூட்டம் முடித்து இரண்டு மணி நேரம் பயணித்து மதுரை வந்து அடைந்தார். மதுரை சித்திரைத் திருவிழாக் கோலம் பூண்டிருந்ததோடு, தமிழர் தலைவர் வருகைக்கும் விழாக் கண்டது. இங்கே தமிழ்நாடு காங்கிரசுக் குழுத் தலைவர் கே.எஸ்.அழகிரியும் பங்கேற்றார்.
இராமநாதபுரத்தில் 7.4.2022 அன்று இராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்றது. விழாவில் மானாமதுரையில் வரவேற்பு நடைபெற்றது. கூட்டத்தை முடித்துக் கொண்டு மேடையிலேயே செய்தியாளர்களைச் சந்தித்து விட்டுக் காரைக்குடியில் பரப்புரைப் பெரும்பயணப் பொதுக்கூட்டத்தில் "எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது ஏன் இந்த மூன்று பிரச்சினைகளை மட்டும் மய்யப்படுத்தித் தீவிரப் பரப்புரை செய்வது ஏன்?" என்ற கேள்வியை மக்கள் சார்பாக அவரே கேட்டு இந்த விடையையும் இவ்வாறு உரியப் பிரச்சினையின் தீவிரத்தைப் பளிச்செனப் புரிய வைத்தார். தெள்ளென தெளிய வைத்தார்.
"ஒரு விபத்து ஏற்பட்டால் காயம் ஏற்படுவது எல்லார்க்கும் தெரியும். அதற்குப் பரிகாரம் செய்யப் பலரும் வருவார்கள். ஆனால் புற்றுநோய் வந்தால் அது முற்றிய பிறகுதான் தெரியும். நீட்டும், புதிய தேசியக் கல்விக் கொள்கையும் புற்றுநோயை விட ஆபத்தானவை. அதனாலேதான் இந்த மூன்றையும் நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்" என்ற பதில்தான் ஆசிரியர் அளித்தது.
தொடர்ந்தவர் "கல்வி தான் நமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு காரணம். அந்தக் கல்விக் கண்ணைக் குத்துவார்கள். அதற்குத் தான் உங்களை நேரில் சந்தித்துப் பேசி சிந்திக்க வைக்க வந்திருக்கிறோம்" எனவும் விளக்கினார்.
காரைக்குடியில் கூட்டம் முடிந்து இரவிலேயே திருச்சியில் தங்கிடப் பயணமானார். திருச்சியில் தங்கிய பின் 8.4.2022 வெள்ளியன்று புதுக்கோட்டை, தஞ்சாவூரை முடித்துக் கொண்டு சிறப்பான வரவேற்றைப் பெற்ற பின் அரியதோர் உரை நிகழ்த்தியவரின் அடுத்த பயணம் திருவாரூர், நாகையாகும்.
திராவிட இயக்க வரலாற்றில் குறிப்பாக திராவிடர் கழக வரலாற்றில் தஞ்சைக்கு மட்டும் தனி இடம் - தமிழர் தலைவர் எத்தனை முறை சென்றாலும் அத்தனை முறையும் தனிச்சிறப்பு வரவேற்புதான். எடைக்கு எடை கொடுத்துத் திராவிடர் கழகத் தலைவர்களை எடை போட்ட மண்.
21 நாள் பயணத்தில் ஒவ்வொரு நகரமும், நாகர்கோயிலில் இருந்து தஞ்சை வரை ஒவ்வொன்றிலும் ஒரு வகைச் சிறப்பு இருந்து. விழிப்புணர்வு பயணம் வெற்றிப் பயணம் தான். ஆனால் தஞ்சையில் ஒரு மாநாடு நடக்கப் போவது போன்ற தோற்றம்.
8.4.2022 அன்று மாலை 6 மணியளவில் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர் முழுவதும் திரும்பும் திசையெல்லாம் இப்பிரச்சாரப் பெரும் பயணத்தை விளக்கி 15 நாளுக்கு முன்பாகவே சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்து இருந்தனர்.
திராவிடர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், தஞ்சைக் கிராமம் பகுதி மக்கள், நகரத்தவர் என ஆபிரகாம் சாலை முழுவதும் மக்கள் வெள்ளம், காணும் இடம் எங்கும் கருஞ்சட்டை வீரர்கள். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நகருக்குள் நுழையும் புறவழிச் சாலையிலிருந்து பரப்புரைக் கூட்டம் நடைபெறும் ஆபிரகாம் பண்டிதர் சாலை வரை நூற்றுக்கணக்கில் கழகக் கொடிகள் கழக மாநாடோ என்று கட்டியம் கூறின.
AT HOME என்பார்களே அது போன்ற உணர்வு தஞ்சைத் தரணியிலே ஆசிரியரிடத்துக் காணப்பெற்றது எனலாம். இங்கே "நான் முதல் பட்டதாரி. இங்கே மேடையில் இருக்கின்றவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். ஏன்? எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மம் ஆண்ட நாடு இது. எப்படிப் படிச்சிருக்க முடியும் என்று கேட்டவர், இதை மாற்றிக் காட்டியது திராவிட இயக்கம்தான்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மேனாள் மாவட்டத் தலைவர் தோழர் இர.புட்பநாதன் வயதின் காரணத்தால் மேடைக்கு ஏறி வர இயலாது என்பதால் மேடையில் இருந்த ஆசிரியர் நாமே கீழே சென்று வாழ்த்த வேண்டும். ஏன்னா நான் இன்னும் இளைஞன் தான் எனக் கூறி 89 வயது இந்த இளைஞர் மேடையை விட்டிறங்கி இர.புட்பநாதனுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்து மகிழ்ந்தார். இது நடந்தது தஞ்சைக் கூட்டம் முடித்து புதுக்கோட்டைக்குப் பயணித்து அங்கே சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்றப் பெரும் பயணக் கூட்டத்தில். இங்குத் திருக்கோகர்ணம் சந்திப்பில் முன்னர் தலைவரைச் சிறப்பாக வரவேற்றனர்.
9.4.2022 அன்று மாலை நாகப்பட்டினத்தில் உரையாற்று கையில், புதிய கல்விக்கொள்கை என்பது புதிய குலக்கல்விக் கொள்கை என்பதை எவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்து, நாகையில் கூடியிருந்த மக்களை வியக்கச் செய்த அவருடைய நினைவாற்றல் பொருத்தமான உரைப்பகுதி சுட்டிக்காட்டத் தக்கது.
"உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூளை என்று சொல்லப்பட்ட வெள்ளைக்காரன் போன பிறகு முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் 'ஹிந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று சொன்னவர்களைச் சிறையிலடைக்கணும் என்றவர் - தந்தைப் பெரியாரைச் சிறையிலடைத்தவர் ராஜகோபாலாச்சாரி என்று சொல்லப் படக்கூடிய ராஜாஜி கொண்டு வந்த இதே குலக்கல்வியைக் சட்டப் போராட்டம் நடத்திச் சர்வ சக்தி வாய்ந்த இராஜ கோபாலாச்சாரியைத் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்துச் சென்னை வரை நடைப் பயணம் செய்த வரலாறு இந்த நாகப்பட்டினத்திற்கு உண்டு. அப்படிப்பட்ட ராஜாஜியை விட இவர்கள் மதியூகிகளா? என்று கேள்வி எழுப்பி அப்படி இல்லை என்பவரைச் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அறிவுப்பூர்வமான வரலாற்றைக் கூறி இந்தியாவில் மோடி அரசு ஏற்படுத்த முயலுவதும் ஹிந்தி திணிப்பு என்று புரிய வைத்தார்.
மேலும் அவர் பரப்புரைப் பயணத்துக்கு அடிப்படையான மூன்று பிரச்சினைகளும் அரசமைப்புச் சட்டப்படியே என்பதையும் விளக்கினார்.
தஞ்சையைப் போலவே திருவாரூர் நாகைக் கூட்டங்களிலும் சாலை வளைவுகள் சாலையின் இருபுறமும் கழகக் கொடிகள் ஏராளமாக தமிழர் தலைவரை வரவேற்றன.
திருவாரூரில் எடுத்த எடுப்பிலேயே "தளபதி தமிழக முதல்வர் ஆட்சி பத்து மாதத்தில் - பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைச் செய்துள்ள நல்ல ஆட்சி. அதைத் தடுத்திடும் வகையில் டில்லியிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் சட்ட விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
ஆசிரியரின் பெரும் பயணப் பொதுக்கூட்டம் 10.4.2022 அன்று சீர்காழி, அதனைத் தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற போது "உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டு வரலாறு தெரியாது. தந்தை பெரியாரோ திராவிடர் கழகமோ தோற்றதாக வரலாறு கிடையாது என ஆசிரியர் பாடம் நடத்தினார். ஆசிரியரின் சொல் மழையிடையே இயற்கை மழையும் தலை காட்டி கொண்டிருந்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவராக இருந்த போது சீர்காழியில் மாதத்திற்கு இருமுறையாவது கிராமப் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாக நினைவு கூர்ந்தவர். அதே சமயம் இப்போது அப்படி வரஇயலாத சூழல் நிலவுவதையும் சுட்டிக் காட்டினார். மழையையும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அமர்ந்து உரை கேட்டதைக் குறித்துக்
"குடி செய்வார்க்கில்லை பருவம்
மடிசெய்து மானம் கருதிக் கெடும்"
எனும் குறளை நினைவுபடுத்தினார்.
கடலூர் தமிழர் தலைவர் பிறந்தமண் அல்லவா? அங்கே அவருக்கு அளித்த வரவேற்பும் வித்தியாசமாகத் தானிருந்தது எப்படி? தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அங்கே தீப்பந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துரை.சந்திரசேகரன் செய்திருந்த இந்த ஏற்பாடு மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. கடலூரில் செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் எனும் எதிர்நீச்சல் வரலாற்றை மிகுந்த மலர்ச்சியுடன் மீட்டிக்காட்டினார். ஆசிரியர் மண்ணின் மைந்தர், நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
புதுச்சேரி அண்டை மாநிலம் என்று பெயர் தானே தவிர முழுக்க முழுக்க தமிழ் மண்தான். இன்னும் சொல்வதானால் முறையற்ற வழியில் சங்கிகள், காவித்திருக்கூட்டம் ஆட்சியை கைப்பற்றி ஆளும் மாநிலம். அங்கேயும் தமிழக மாவட்டங்களுக்கு இணையான மிகுந்த உற்சாக வரவேற்பு. கலை நிகழ்ச்சியும் கூட நடைபெற்றது. புதுச்சேரியில் நடப்பது பொம்மலாட்ட அரசு என்று கூறிடவும் தயங்கிடவில்லை. "நாங்க போன முறையே சரியாகச் சொன்னோம். ஆனால் நீங்க பொய்யான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்திட்டீங்க. இந்த முறை சரியாக இருக்கனும் என வழிகாட்டவும் செய்தார். தீயணைப்பு வீரர்கள் போல் ஒன்றுபட்டு பாசிச ஆட்சியை வீழ்த்தவும் வேண்டும் என்றார் பொருத்தமாக.
அடுத்துப் பயணித்துச் சேர்ந்த தமிழ் மண் திண்டிவனத்தில் கடலூரைப் போலவே தோழர்கள் வழியில் இரண்டு பக்கமும் தீப்பந்தம் ஏந்தி பேண்டு இசை முழங்கச் சென்னைக்குக் கூட கேட்கும் உரத்த குரலில் "தமிழர் தலைவர் வாழ்க! தந்தை பெரியார் புகழ் ஓங்குக! " என்று முழக்கமிட்ட மக்கள் வெள்ளத்தில் நீந்தி காந்தியார் திடல் அருகே இருந்த மேடைக்குச் சென்றார். இங்கே அமைச்சர் செஞ்சி மஸ்தானும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனும் உரையாற்றிய பின் நிறைவாகவே உரை ஆற்றினார் தமிழர் தலைவர்.
தமதுஉரையில், புதுவைக்கு அருகில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் வாழ்ந்த ஊர் அருகிலிருக்கும் ஊர் திண்டிவனம் என்பதை நினைவூட்டும் வகையில் பொதுக்கூட்டம் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" எனப்பலத்த கையொலி இடையே தொடங்கினார்.
திண்டிவனத்தில் தமிழ்நாடு வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சியைத் தொட்டுக் காட்டினார். நெருக்கடி நெருப்பாற்றில் தமிழகம் நீந்திய நிகழ்வு அது.
திண்டிவனத்தில் பொதுக்கூட்டத்தில் தான் பேசிக் கொண்டிருந்த போதுதான் தலைவர் கலைஞரின் கழக அரசு கலைக்கப் பெற்றதையும் அன்னை மணியம்மையார் பொறுப் புடன் நடந்து கொண்டதையும் தாங்கள் பெரியார் திடலுக்குத் திரும்பிச் சென்ற போதுதான் கைது செய்யப்பட்டதையும் அதையொட்டி நிகழ்ந்தவற்றையும் நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கத்தை எளிதாக வீழ்த்திடலாம் என எவரும் எண்ணிக் கனவு காண வேண்டாம் என எச்சரிக்கவும் செய்தார். திண்டிவம் பெரும்பயணக் கூட்டத்தைச் சிறப்பாக அனைவரும் இணைத்து அமைத்துக் கொடுத்ததைப் பாராட்டும் வகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், திருமாவளவன், ரவிக்குமார், பெண் நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார். நிகழ்ச்சியை முடித்துச் சென்னை புறப்பட்டார். சென்னை சேர்ந்தாரே பயணம் நிறைவுற்றதா? தொடர்கிறது. இரண்டு நாட்களுக்குப் பின் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து சந்திப்போம்.
No comments:
Post a Comment