கழக வரலாற்றில் கடந்த சனி (30.4.2022) ஞாயிறு (1.5.2022) ஆகிய இரு நாட்களை மறக்கவே முடியாது -முடியவே முடியாது.
சனியன்று முற்பகல் சென்னைப் பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குமரி முதல் திருத்தணி வரை திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் 428 பேர் கலந்து கொண்டனர். 14 அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'நீட்' எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்பு ஆகிய முத்தான மூன்று நோக்கங்களை முன் னிறுத்தி ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோயிலில் தொடங்கி சென்னை வரை (நிறைவு 25.4.2022) நடைபெற்ற பிரச்சாரப் பெரும் பயணத் திற்கு - 89 வயதிலும் தலைமை தாங்கி வெற்றிகரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்த தீர்மானம் முதற்கொண்டு 14 அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தீர்மானங்களில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்:
(அ) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) பொறியாளர் நியமனங்களில் முற்றிலும் தமிழர்களைப் புறக்கணித்து விட்டு பிற மாநிலத்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் வகையில் திட்ட மிட்ட சதி அரங்கேற்றப்பட்டது. 'கேட்' தேர்வுகளை முறையாக போதிய அவகாசம் கொடுத்து நடத்திடாமல் விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட அநீதியை எதிர்த்து மே 9ஆம் தேதி திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முக்கிய அறிவிப்பு.
(ஆ) ஜூன் 4ஆம் தேதி முற்பகல் சென்னைப் பெரியார் திடலில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் - மாநில இந்தி எதிர்ப்புத் திறந்த வெளி மாநாடு என்ற இரண்டாம் அறிவிப்பு. ஜூலை 16இல் அரியலூரில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு.
(இ) மே 7ஆம் தேதி தொடங்கி மே 30 முடிய தமிழ்நாடெங்கும் பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை.
(ஈ) குற்றாலத்தில் ஜூன் 9 முதல் 12 வரை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (மாணவர் கழக கலந்துரையாடலிலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது).
(உ) ஆகஸ்டு 19, 20, 21 ஆகிய நாட்களில் பெரியார் 1000 வினா விடைப் போட்டி.
(ஊ) பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி. ஆகிய அடர்த்தியான கழக செயற்பாடுகள் அடங்கிய அறிவிப்புகள் இந்தத் தீர்மானங்களில் அடக்கம்.
திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் மே தினத்தன்று (1.5.2022) சென்னை பெரியார் திடல் நடிகவேள்
எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 344 மாணவர்கள் ஆர்வ மோடு பங்கேற்றனர். 16 அரும்பெரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மாணவர்களிடையே பெரியார் 1000 வினா விடைப் போட்டி, நீட், கியூட் நுழைவுத் தேர்வுகளைக் கைவிட வேண்டும், உக்ரைன் - ருசியப் போரின் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளிலும் பாதிக்கப்பட்டிருக்கும் இருபால் மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், விடுதலை சந்தாக்கள் சேர்ப்பு, சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிடுதல், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஹிப்பொக்ரெடிக் உறுதிமொழிக்குப் பதிலாக தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மஹரிஷி சரக் சாபக் உறுதிமொழியை மதுரை மருத்துவக் கல்லூரியில் அரங்கேற்றியதற்குக் கண்டனம் (இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிய கால இடைவெளியில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை) கரோனா காலத்தில் நீண்ட காலம் கல்விக் கூடங்களில் இணையத்தின் மூலம் நடைபெற்று, இப்பொழுது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் - ஆசிரியர் உறவில் ஏற்பட்டுள்ள உளவியல் சிக்கல்களிலிருந்து மீட்க உரிய உளவியல் ஆலோசனைகள் தேவை.
ஜாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகளை அனுமதியாமை, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் நடைபாதைக் கோயில்களை நீக்காமல் இருப்பது சுட்டிக்காட்டப்படுதல் உள்ளிட்ட மிக முக்கிய மான தீர்மானங்கள் மாணவர் கழகக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சேலத்தில் இயங்கும் பெரியாருக்கு இடமில்லாத, பெரியார் பல்கலைக் கழகத்தின் ஜாதியப் போக்கைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் மே 11ஆம் தேதியன்று மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறும் என்று கழகத் தலைவர் அறிவித்தார்.
இளைஞரணி, மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடல் கூட்டங்கள் ஒரு முக்கிய கால கட்டத்தில் எழுச்சியுடன் நடை பெற்றுள்ளன.
இத்தீர்மானங்கள் வெறும் ஏட்டளவில் முடிந்துவிடக் கூடியவை யல்ல. கழகத் தலைவர் கூட்டத்தில் சொன்னது போல - நாளை நாட்டில் சட்டங்களாகவும், செயல் வடிவங்களாகவும் மலரக் கூடியவையாகும்.
திராவிடர் கழகத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங் களுக்கு இத்தகைய சாதனை வரலாறுகள் உண்டு. 1929 - செங்கற்பட்டு முதல் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள் இன்றைக்குப் பேசப்படவில்லையா? செயல்பாட்டுக்கு வரவில்லையா?
இத்தீர்மானங்களின் அடிப்படையில், செயல்வடிவங்கள் இன்று முதலே தொடங்கப்பட வேண்டும். இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் தீர்மானங்கள் என்று மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், ஒட்டு மொத்த கழகத் திற்கான செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment