குறிப்பின் குறிப்பு உணர்வார்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

குறிப்பின் குறிப்பு உணர்வார்..!

தஞ்சையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, சிறந்த கல்வி, அறிவு, ஆற்றல் பெற்று, மருத்துவராகி அந்த துறையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் கும்பகோணத்தின் சுருதி மருத்துவமனை யின் மேலாண் இயக்குனர் டாக்டர் பி.எஸ். சித்தார்த்தன்.

சமஸ்கிருதம் தெரிந்தால் தான்  மருத்து வம் படிக்க முடியும் என்று இருந்த காலம் முதல் மருத்துவத்துறை முழுக்க ஆட்சி செய்தவர்கள் பார்ப்பனர்கள்தான். கும்ப கோணம் மிகவும் அதிகமாக அவர்களே கோலோச்சிய பகுதி. இங்கே பேராசிரியர் கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், நீதி யரசர்கள் என உயர்ந்த பொறுப்பில் அதி காரத்தில் இருந்தவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே..!

இந்த நிலை தந்தை பெரியார், அவருக் குப்பின்னால் அன்னை மணியம்மையார், பிறகு மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் - ஆகியோர் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற் காக பாடுபட்டதன் விளைவால் நம்முடைய சகோதரர்களும் இப்போது சிறந்த மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள். அந்த வகை யில் மருத்துவர் சித்தார்த்தன் ஒடுக்கப் பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்று அறிந்து அவருடைய வளர்ச்சிக்கு பல வகையில் கும்பகோணத்தில் இருந்த சனாதன மருத்து வர்கள் தடையாக இருந்துள்ளார்கள் என அவரே பலமுறை வெளிப்படையாக நம் முடைய மேடைகளில் கூறியுள்ளார்.

நான் (குடந்தை குருசாமி) என்னுடைய இணையர் ராணி, மகன் அறிவு ஒளி, டாக்டர் கே.ஆர்.குமார் அவர்களின் துணைவர் ஜெயமணிகுமார் - அனைவரும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நீஷீஸ்வீபீ-19 நோயால் கடுமையாக பாதிக்கப் பட்டதால்  அனுமதிக்கப்பட்டோம்.

உலகின் பல பகுதிகளிலும் லட்சக்கணக் கான மக்கள் இந்த கொடும் நோயினால் தாக்குண்டு மறைந்தார்கள் என்ற செய்தி தினந்தோறும் வந்து கொண்டே இருந்தது. நமக்கெல்லாம் மிகவும் நெருக்கமான கொள்கை உறவுகள், நண்பர்கள், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறை பணியாளர்கள், சிறந்த கல்வியாளர் கள் எல்லாம் தொடர்ந்து, நம்மை விட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் மறைந்து கொண்டே இருந்தார்கள்.

எங்கள் வீடு இருந்த தெருவை யாரும் பயன்படுத்தக் கூடாது என அரசு தடை போட்டு மற்ற மக்களை காத்து நின்றது. சாலையின் இரு பக்கமும் காலையிலும் மாலையிலும் சுண்ணாம்பு தெளித்தார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் இந்த நோய் தாக் கம் இருக்கிறதா என்பதை தினந்தோறும் பரிசோதனை செய்தார்கள். இந்த நோய்  அறிகுறி இருப்பவர்கள் தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்ற துண் டறிக்கையினை கொடுத்தார்கள்.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. மருத்துவமனையின் செவிலியர்கள், மருத் துவர்கள், ஊழியர்கள் என அனைவரும் உண்மையான, நேர்த்தியான, உழைப்பை பாகுபாடில்லாமல் அனைவருக்குமாக வழங்கினார்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் உடைகூட எளிமை யாக இருக்குமோ..? என்கின்ற நினைப்பை நோயிடம் போராடிய போராட்ட வீரர் களான செவிலியர்கள் மருத்துவர்கள் பயன் படுத்திய உடை நமக்கு உண்டுசெய்து விட் டது.

எங்கள் குடும்பத்தை காப்பாற்ற மருத்து வர்கள் படாதபாடு பட்டாலும், எப்படியா வது உயிரைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற பேராசையால் தஞ்சையில் வசித்து வரும் நமது கழக பொறுப்பாளர்களான வழக்குரைஞர் சி. அமர்சிங், மருந்தாளுநர் மு.அய்யனார், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் எல்லாம் அவர்கள் அறிந்தவரையில் மருத்துவரை அணுகி பேசியுள்ளார்கள்.

அதேவேளையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியின் தலைமை அதிகாரி மற்றும் டாக்டர் சித்தார்த்தன் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சமகால மருத்துவ மாணவர்கள். அதனால் அந்த தலைமை அதிகாரியிடம் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை தொடர்பு கொண்டு எங்கள் உடல் நிலைகளை  கவனித்துக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக அனைத்து உயிர்களையும் அனைவரும் சேர்ந்து காப்பாற்றி விட்டார்கள்.

டாக்டர் சித்தார்த்தனுடைய  தந்தையார் தலைமையாசிரியர். அவர் தந்தை பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண் டவர். அதைப்போலவே டாக்டர் சித்தார்த் தன் அவர்களும் நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் மீது அளவு கடந்த பாசமும், மரியாதையும் வைத்திருந்தவர். ஆசிரிய ரின் அனைத்து நூல்களையும் வாங்கி விடு வார். தன் வாழ்நாள் முழுவதும் விடுதலை  சந்தாதாரராக இருந்தவர்.

கும்பகோணத்தில் சர்க்கரை நோய் சிகிச்சை மய்யத்திற்கென தனியாக ஒரு மருத்துவமனை கட்டி அதை நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் வந்துதான் திறக்கவேண்டும் என்று காத்திருந்தார். அதைப்போலவே நம்முடைய ஆசிரியர் அவர்களும் அவருக்கான தேதியைக் கொடுத்து அந்த தேதியில் வந்திருந்து மருத்துவமனையை திறந்துவைத்தார்கள்.

நோயாளிகள் பலரை சேதா ரமில்லாமல் காப்பாற்றிய அவருக்கு கரோனா நோயால் உடல்நலம் பாதிக்கப் பட்டது. தஞ்சையில் ஒரு தனியார் மருத் துவமனையில் வைத்து பலவாறு போரா டியும் அந்த கொடுமையான நோயிலிருந்து அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு முழுமையான நாத்திக மருத்துவர் மரணம் அடைந்துவிட்டார். பெரியார் சிந்தனை களில் பின் வாங்காத சிந்தனையாளர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம்.

உடனடியாக கழகத்தினுடைய தலை வர் தமிழர் தலைவர் அவர்களுக்கும், விடுதலைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரின் உடலை பல்வேறு தடைகளை யும் தாண்டி  24. 05. 2021 அன்று அவரது இல்லத்திற்கு எடுத்து வருகிறார்கள் என்ற செய்தி அறிந்தோம். உடல் எப்போது கும்ப கோணம் வரும் என்றும் அவரை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தோடும் விசாரித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது எனது இணையர் ராணி என்னை மருத்துவர் வீட்டிற்கு போக வேண்டாம் என தடுக்கிறார்கள். நான் போவேன் என்றேன். எங்களுக்குள் கருத்து மாறுபாடு அதிகமாகிவிட்டது.

ஏற்கெனவே நமது ஆசிரியர் நோய்த் தாக்கம், அதன் கொடுமையான விளைவு கள், அதற்கான பாதுகாப்பு இவைகளைப் பற்றி விடுதலையில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதை படிக்கிறீர்களா இல்லையா...? நீங்கள் போய் தான் தீருவேன் என்று அடம் பிடித்தால் நான் நமது ஆசிரி யருக்கு போன் போட்டு சொல்லிவிடுவேன் என்று கறாராக கூறி விட்டார்கள். ஒரு வேளை சொல்லிவிடுவார்களோ என்று எனக்கு உள்ளூர பயம் வந்துவிட்டது. இருந் தாலும் சரி சரி நான் அங்கு போகவில்லை என்று பொய் சொல்லிவிட்டு கிளம்பிக் கொண்டு இருந்தேன்.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே நமது மதிப்பிற் குரிய ஆசிரியரிடமிருந்து தொலைபேசி வருகிறது. அதை எடுத்த  இணையர் ராணி, இதோ.. ஆசிரியர் அய்யாவே லைனில் வந்துட்டாங்க..! என்று போனை அலறி அடித்து எடுத்து என்னிடம் கொடுத்து விட்டார்கள்.

ஏதோ விளையாட்டாக செய்கிறார்கள் என்று நினைத்து போனைப் பார்த்தால் நமது அய்யா ஆசிரியரே தான்..

அய்யா வணக்கங்க அய்யா.

குருசாமி பேசுறேங்க அய்யா..!

வணக்கம். எப்படி இருக்கீங்க குரு சாமி..? நீங்க., வீட்ல எல்லாம் நல்லா இருக்கீங்களா..?

நல்லா இருக்கிறோம் அய்யா.

டாக்டர் சித்தார்த்தன் இறந்த செய்தியை பார்த்தேன். அதிர்ச்சியாய் இருந்தது. அவ ருடைய மருத்துவமனை திறப்புக்குக்கூட நாமெல்லாம் போயிருந்தோம் இல்லையா..

ஆமாங்கய்யா.. நல்லா ஞாபகம் இருக்கு அய்யா. அந்த மருத்துவமனையை கூட அய்யா வந்துதான் திறக்கணும்னு பிடிவாத மாக இருந்தாருங்க அய்யா.

மவுனம்...

சரி.. சரி.. அவசரப்பட்டு இப்போ அவரது உடம்ப பார்க்க அங்கே போயிடாதீங்க..! மறுபடி போய் அவர் வீட்ல இருக்கிறவங் களை விசாரிக்கலாம். நீங்களெல்லாம் பத் திரமா இருங்க.. வீட்ல எல்லோரையும் விசா ரித்தேனென  சொல்லுங்க ..!

என்று ஆசிரியர் சொல்லி விட்டு செல் போனை வைத்து விட்டார்கள்.

உடம்பெல்லாம் வேர்த்து விட்டது. அதெப்படி..! கும்பகோணத்திலே எங்கோ ஒரு மூலையில் லட்சக்கணக்கான தொண் டர்களில் ஒருவனாகிய எனக்கும், என் இணையருக்கும் நடந்த முரண்பாடு பேச்சு வார்த்தை- 350 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்னையில் இருக்கும் நம்முடைய குடும்ப தலைவர் ஆசிரியர் அவர்கள் காதுக்கு எட்டியது. ஒன்றுமே புரியவில்லை.

ஒவ்வொரு தொண்டனையும் முழுமை யாக புரிந்தவர் தான் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள். தொண்டனுக்கு ஒரு பிரச்சினை வரும்போது, அதை யாரும் எடுத்துச் சொல்லாமல், தானே உணர்ந்து அந்த பிரச்சினைக்கான தீர்வு அளிக்கும் தலைவருக்காக நாம் எதை வேண்டுமா னாலும் இழந்து வாழலாம் என்கிறது திருக் குறள்.

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப் பினுள் யாது கொடுத்தும் கொளல். ( 703 )

- குடந்தை க.குருசாமி, 
தஞ்சை மண்டல செயலாளர், 
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment