"உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களிலும் "இடஒதுக்கீடு" நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

"உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களிலும் "இடஒதுக்கீடு" நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்"

டில்லி உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அன்னம் சுப்பாராவ் நினைவு சொற்பொழிவில் தமிழர் தலைவர் உரிமைப் பேருரை


சென்னை, மே 4 சமூகநீதிக்கான வழக்குரைஞர் மன்றத்தின் மேலாண் அறக்கட்ட ளையாளரும், டில்லி உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞருமான அன்னம் சுப்பாராவ் மறைந்து ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் போற்றுதலாக அன்னம் சுப்பராவ் நினைவு சொற்பொழிவு சென்னை - பெரியார் திடலில் 3.5.2022 அன்று நடைபெற்றது.

சமூகநீதிக்கான வழக்குரைஞர் மன்றமும், அனைத்திந்திய நீதித்துறை பணிகளுக்கான மன்றமும் இணைந்து நடத்திய அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறை (Inclusive Judiciary)  எனும் தலைப்பிலான நினைவுச் சொற்பொழிவிற்கு சமூக நீதிக்கான வழக்குரைஞர் மன்றத்தின் தலைவரான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நீதித்துறை தொடர்பான பல்வேறு துணைத் தலைப்புகளில் சட்ட வல்லுநர் - வழக்குரைஞர் - அறிஞர்கள் உரையாற்றினர். அரியானா மாநில அரசின் கலைப் பண் பாட்டு (நிர்வாகம் & ஒருங்கிணைப்பு) துறையின் முதன்மைச் செயலாளர் முனைவர் டி.சுரேஷ் அய்.ஏ.எஸ். அவர்கள் அனைத்திந்திய நீதித்துறை பணி உருவாக்கம்  (Establishment of All India Judicial Services) எனும்   தலைப்பில் உரையாற்றினார். கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார், அனைவரையும் உள்ள டக்கிய நீதித்துறை பற்றிய பார்வை (Vision for Inclusive Judiciary) எனும் தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை, திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் தலைவர் த.வீரசேகரன் வரவேற்றுப் பேசினார். நிறைவாக உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞரும் அன்னம் சுப்பாராவ் அவர்களின் மூத்த மகனுமான ஏ.டி.என்.ராவ் நன்றி தெரிவித்து உரையாற்றினார். நிகழ்ச்சியினை திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி தொகுத்து வழங்கினார்.

சமூகநீதிச் சுடரொளி அன்னம் சுப்பாராவ் படத்திறப்பு

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அன்னம் சுப்பாராவ் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். சொற்பொழிவு ஆற்றிட வருகை தந்த சட்ட வல்லுநர் - அறிஞர் பெருமக்கள்  அன்னம் சுப்பாராவ் அவர்களின் படத்திற்கு மலர் தூவி நினைவுகளைப் போற்றும் வகையில் வீரவணக்கம் செலுத்தினர்.

மூத்த வழக்குரைஞர் சட்ட வல்லுநர் 
கே.பராசரன் செய்தி

அன்னம் சுப்பாராவ் அவர்களுடன் உச்சநீதிமன்றத்தில் இணைந்து பணியாற்றிய சட்டவல்லுநரும், மேனாள் அரசு வழக்குரைஞருமான மூத்த வழக்குரைஞர் கே.பராசரன் தாம் அனுப்பிய செய்தியில் அன்னம் சுப்பாராவ் அவர்களுடன்  தாம் கொண்டிருந்த சட்டத் தொழில் சார்ந்த நெருக்கத்தினையும் நினைவு கூர்ந்து வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழர் தலைவரின் தலைமை உரை

நிகழ்ச்சியின் நிறைவில் தமிழர் தலைவர் தலைமை உரையாற்றினார். 

தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

நாட்டின் தலைநகர் டில்லியில்  - உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக நீண்ட காலம் சட்டப் பணியாற்றிய அன்னம் சுப்பாராவ் அவர்கள் சமூக நீதி தொடர்பான பலதரப்பட்ட ஆக்கப்பூர்வ பணிகளில் பெரும் ஈடுபாடு கொண்டு சேவையாற்றியவர். சமூகநீதிக்கான வழக்குரைஞர் மன்ற உருவாக்கத்தில் பெரும் பணியாற்றி அதன் நிறுவனத் தலைவர் எல்.ஹாவனுர் அவர்கள் மன்றத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து சமூகநீதி வழங்கிடும் முன்னேற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணை புரிந்த பெருமகனார் அன்னம் சுப்பா ராவ் ஆவார். தமது கவனத்திற்கு வந்த, தாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் சமூக நீதிக்கு எதிரான - அதனை மட்டப்படுத்துகின்ற வகையில் கருத்துகள் வெளிப்பாட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் எதிர் கருத்தினை பலமாக தெரிவித்து சமூகநீதியின் மேன்மையை, அவசியத்தினை உணர்த்தி வந்தவர் சுப்பாராவ் அவர்கள்.

ஒரு முறை உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கில் இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கு எதிராக தமது வாதத்தினை எழுத்து வைத்த ஒரு பிரபல வழக்குரைஞர், நீதிபதிகள் முன்னிலையில் "பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் முட்டாள்கள்"  (Backward Class people are idiots) என்று தெரிவித்தார். அப்பொழுது நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த சுப்பாராவ் அந்த பிரபல வழக்குரைஞரைப் பார்த்து கோபமாக "நீங்கள் குறிப்பிட்ட முட்டாள் பிற்படுத்தப்பட்டோரில் நானும் ஒருவன். உங்களது கருத்தினை பலமாக மறுக்கிறேன். நீங்கள் தெரிவித்ததை திரும்பப் பெற வேண்டும்" என்றார். பிரபல வழக்குரைஞருக்கு எதிராக யாருமே அதுவரை அப்படி பேசியதில்லை. தொடர்ந்து திரும்பப் பெற வலியுறுத்தி,  அந்த பிரபல வழக்குரைஞர் தான் சொன்ன சொற்றொடரை திரும்பப் பெற்றதற்குப் பின்னர்தான் அவருடைய வாதம் தொடர்ந்தது; பின்னர்தான் சுப்பாராவ் தமது இருக்கையில் அமர்ந்தார். சமூகநீதிக் கருத்தியல் பற்றாளாராக இருந்ததுடன் அந்தக் கருத்திற்கு பங்கம் விளைவிக்கின்ற வகையில் மட்டப்படுத்துகின்ற வகையில் எவரேனும் பொதுவெளியில் பேசினாலோ துணிச்சலாக தம் கருத்தினை வெளிப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருவதை தமது வாழ்நாள் கடமையாக சுப்பாராவ் அவர்கள் கொண்டிருந்தார்.  சமூக நீதிப் போராளிக்கு  - அவரது பெயரில் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் எங்களின் வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறோம். 

உயர்நிலை நீதிபதிகள் 
நியமனத்தில் இடஒதுக்கீடு

இப்பொழுது நடைபெறுவது "அனைவரையும் உள்ள டக்கிய நீதித்துறை" எனும் தலைப்பிலான சொற்பொழிவு. உயர்நீதித்துறையில் அனைவரையும் உள்ளடக்கிய நிலையின் அவசியம் தான் சொற்பொழிவின் உள்ளடக்கம்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து சமூகநீதி பற்றிய பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் ஒ.சின்னப்பாரெட்டி அவர்கள். பணி நிறைவிற்கு பின்பு சமூக நீதி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்களில் பங்கேற்று சமூகநீதி மேம்பட அரிய பல கருத்துகளை வழங்கியவர். எங்களது அழைப்பின் பேரில், பணி நிறைவு பெற்ற பின்பு  பெரியார் திடலுக்கு வருகை தந்து ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார். தனிப்பட்ட உரையாடலில்  எங்களிடம் ஒரு உரையாடல் நிகழ்வினைப்  பகிர்ந்து கொண்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக தான் பணியாற்றிய பொழுது சகநீதிபதிகளுடன் உரையாடும் பொழுது "பிராமணர்களாகிய  5 நீதிபதிகள் பெரும்பான்மை யான மக்கள் சமத்துவ நிலை தொடர்ந்திட வழி வகுக்கும் சமூகநீதி பற்றிய வழக்கில் வாதங்களைக் கேட்டு நாம் தீர்ப்பளிக்க உள்ளோமே; இது சரியா?" என்று குறிப்பிட்டாராம். உடன் இருந்த பிராமண நீதிபதிகள், "நாங்கள் பிராமணர்கள் நீங்கள் பிராமணரல்லாதவர்" என பதிலுரைத்தனராம்.  "நான் பிராமணன் இல்லைதான். ஆனால் நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவனில்லை, தாழ்த்தப்பட்டவர் இல்லை; உயர்ஜாதியைச் சார்ந்தவன். பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நம்மில் நீதிபதிகள் யாருமே இல்லை!" என்று உச்சநீதிமன்றத்தில் அன்று நிலவிய உண்மையான அவலநிலை பற்றி நீதியரசர் ஒ.சின்னப்பரெட்டி கூறினார். அவர் கூறியது அன்றைய நிலை மட்டுமல்ல; இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவலநிலை. 

உயர்ஜாதியைச் சார்ந்த சில நியாயமான நீதிபதிகள் தற் பொழுது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் அங்கம் வகித்தாலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தோரை பிரதி நிதித்துவப் படுத்தி  போதுமான அளவில்நீதிபதிகள் இருந்தால் தான் உண்மையான, முழுமையான சமூகநீதி  அனைவருக்கும் கிடைக்கும் நிலை உருவாகும் என அவர்கள் கூறிவருகின்றனர்.

அரசு உயர் பதவியில் இருந்த தாழ்த்தப்பட்ட அதிகாரிகள், தந்தை பெரியார் அவர்களை அழைத்து சென்னையில் ஒரு விழா நடத்தினர்.  இந்த நிகழ்வு நடந்தது 1971ஆம் ஆண்டில்; அப்பொழுது முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தார். விழாவில் தாங்கள் படித்து உயர்நிலையில் - அரசு பதவியில் இருப்பதற்கு தந்தை பெரியார் ஆற்றிய சமுதாயப் பணிதான் என்று பாராட்டிப் பேசினர். விழாவின் இறுதியில் தந்தை பெரியார் பேசுகையில், தன்னை பலவாறு புகழ்ந்து பேசியிதைக் குறிப்பிட்டு, தன் உழைப்பால் தாழ்த்தப்பட்ட - சமுதாயத்தினர் பெரிதாக உயர்ந்து விட வில்லை.  அரசுப் பணியாளர்களாக - உயர் அரசு அதிகாரிகளாக மட்டுமே வந்துள்ளனர். நாடு விடுதலை அடைந்து 25 ஆண்டுகள் (அப்பொழுது) ஆகிய நிலையிலும் உயர்நீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நீதிபதியாக வரவில்லையே! அப்படி என்ன சாதித்து விட்டோம், சட்டம் படித்த தகுதி வாய்ந்த வழக்குரைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இல்லாமலா போய் விட்டார்கள்? என கோபமாக பெரும் ஆதங்கத்துடன் தந்தை பெரியார் நிகழ்ச்சியில் பேசி முடித்தார். விழாவிலிருந்து திரும்புகையில் அதுகுறித்து 'விடுதலை' ஏட்டில் தலையங்கம் எழுதவும் என்னைப் பணித்தார்கள். அப்படியே பெரியார் பேச்சில் குறிப்பிட்டவாறு தலையங்கம் வெளிவந்தது.

'விடுதலை' - தலையங்கத்தைப் படித்துப் பார்த்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்ட அமைச்சர் செ.மாதவன் அவர்களை அழைத்து தந்தை பெரியாரின் ஆதங்கத்தை குறிப்பிட்டு மாவட்ட நீதிபதிகள் பட்டியலைக் கொண்டுவரச் சொன்னார்; தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தோர் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்த பொழுது 12ஆவது இடத்தில் மாவட்ட நீதிபதி வரதராஜன் அவர்கள் இருந்தார். உடனே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வீராசாமி அவர்களுக்கு விபரத்தை சொல்லி அனுப்பி அரசின் பரிந்துரையாக  (அப்பொழுது கொலீஜியம் அமைப்பு இல்லை) உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். சட்ட அமைச்சரையும் பரிந்துரையுடன் அனுப்பினார். அதன் பின்பு இந்தியாவின் உயர்நீதிமன்றத்தின் தாழ்த்தப்பட்ட சமுதாய முதல் நீதிபதியாக வரதராஜன் பதவியேற்றார். 

நீதிபதி வரதராஜன் அவர்கள் யாரென்று தந்தை பெரியாருக்கும் தெரியாது. வரதராஜன் அவர்களும் தந்தை பெரியாரை அதுவரை பார்த்தது இல்லை.  உயர்நீதிமன்ற நீதிபதி வரதராஜன் அவர்கள்தான் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் முதல் நீதிபதியாக உயரும் நிலையை உருவாகின. தந்தை பெரியாரால், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் சட்டம்  படித்த வழக்குரைஞர்கள் உயர்நிலை நீதிபதியாக முதன் முறையாக வரமுடிந்தது ஒரு வரலாறு.

1992இல் மண்டல் வழக்கை - இந்திரா சகானி வழக்கினை விசாரித்த 9 நீதிபதி அமர்வில் நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் அங்கம் வகித்தார். பிற்படுத்தப் பட்டோருக்கு முதன்முதலாக அரசுப் பணி வழங்கிடுவதில் இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கி 27 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்திட தீர்ப்பு வழி ஏற்படுத்தியது. தீர்ப் பினை வழங்கிய மற்ற நீதிபதிகளிடம் 'தாமும் பெரும்பான்மை நீதிபதிகளுடன் ஒத்த கருத்தினை கொண்டிருந்தாலும், தாம் தனியாக தீர்ப்பினை எழுத விரும்புவதாகவும் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து படித்து இந்த நிலைக்கு உயர்ந்த நிலையில் அதற்குரிய காரணங்களையும் பதிவு செய்திட விரும்புவதாகவும் தெரிவித்து மற்ற நீதிபதிகள் சம்மதத்துடன் தனியாக தீர்ப்பினை வழங்கினார்.

நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் தனது தனித் தீர்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்க தந்தை பெரியாரும், அவர் நிறுவிய இயக்கமும் எப்படி அடிப்படையாக இருந்ததை விரிவாகப் பதிவு செய்துள்ளார். இப்படி சமூகநீதியில் அக்கறைக் காட்டக்கூடிய - ஈடுபாடுள்ள உயர்நிலை நீதிபதிகள் ஒரு சிலர் அன்று இருந்தனர். இன்றும் சிலர் உள்ளனர். ஆனால் சமூகநீதி முழுமையாக வழங்கப்பட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பின சமுதாயத்திலிருந்து உரிய எண்ணிக்கையில் நீதிபதிகள் வரவேண்டும். 

அந்த சமுதாயத்தில் சட்டம் படித்து, தகுதி உள்ளவர்கள் நிறையவே உள்ளனர். அவர்களுக்கு நீதிபதியாகும் வாய்ப்பு கிட்டவில்லை. அவர்களும் உயர்நிலை நீதிபதிகளாவதற்கு ஒரே வழிமுறை உயர் நீதித்துறையில் - உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் 'இடஒதுக்கீடு' முறை நடை முறைக்கு வரவேண்டும் என்பதே. அரசமைப்புச் சட்டத் தில் உயர் நீதித்துறைக்கு 'இடஒதுக்கீடு' என்று எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை. உயர்நீதிபதிகள் நியமனங்களும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு  நடைபெறும் சொற்பொழிவுகளால், அது குறித்த விவாதங்களால் சட்டம் படித்த உரிய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உயர்நீதிபதி நியமனங்களில் இடஒதுக்கீடு பெறும் நிலை தமக்கு கிடைக்கா விட்டாலும் மற்றவர்களுக்கு, அடுத்த தலைமுறையினருக்காவது நடைமுறைக்கு வரவேண்டும் என  பொது நல உணர்வுகள் ஓங்கிட வேண்டும்.

இத்தகைய சொற்பொழிவுகள், கருத்து பரிமாற்றங்கள் தொடர்ந்து  நடைபெற வேண்டும். நடைபெறும்  சொற்பொழிவிற்கு வித்திட்ட அன்னம் சுப்பாராவ் அவர்களின் நினைவைப் போற்றுவோம். சமூகநீதிக்கான உறுதிப்பாடு கூடிய உணர் வினை பெறுவோம்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

பேராசிரியர் ரவிவர்மகுமார்

கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்மகுமார் தமதுரையில் குறிப்பிட்டதாவது: 

1992ஆம் ஆண்டிலிருந்து - மண்டல் வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்ற காலத்திலிருந்து அன்னம் சுப்பாராவ் அவர்களுடனான பழகும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. 2000ஆம் ஆண்டில் மத்திய கல்வி நிலையங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு வழி ஏற் படுத்திய 93ஆம் அரசமைப்புச் சட்ட திருத்த காலங்களிலும் சுப்பாராவ் அவர்களுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய பழக்கத்தால் சமூகநீதிக்கான வழக்குரைஞர் மன்றத்தில் பொறுப்பு வகித்து பணியாற்றும் சூழலும் உருவாகியது.

ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையினராக உள்ள நம் நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறை - உயர் நிலை நீதித்துறையின் அவசியம் பற்றி  நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். இந்த தேவை என்பது புதியதல்ல, பிற நாடுகளில் முன்னரே நடைமுறையில் உள்ளதுதான். உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நியமனங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

தென்னாப்பிரிக்கா நாடு ஒடுக்கப்பட்ட மக்களான கருப்பின மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடு. ஆனால் அதிகார நிலையில் வெள்ளையர் இருந்தனர். பல்வேறு, பலநிலை, பல்வேறு கால கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் கருப்பின மக்களின் தலைவராக நெல்சன் மண்டேலா ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார். ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க முனைந்தார். அத்தகைய பெரும் பணிக்கு நமது நாட்டைச் சார்ந்த - கருநாடக மாநிலத்தில் தேவராஜ் அர்சு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் - சட்ட அறிஞர் எல்.ஹாவனூர் அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கி கொடுத்த அரசமைப்புச் சட்டம் நெல்சன் மண்டேலா அதிகார நிலைக்கு வரும் நிலையில் ஏற்கப்பட்டது. அந்த அரசமைப்புச் சட்டத்தில் தென்னாப்பிரிக்கா நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களின் 'இடஒதுக்கீடு' - பிரதிநிதித்துவம் என்ற பெயரால் தனிச்சட்டப் பிரிவு உருவாக்கப்பட்டது. கருப்பின மக்களுக்கு மட்டுமல்ல - ஆசிய வம்சா வளியினர் - மகளிர் என அனைவருக்கும் நீதிபதி நியமனங்களில் பிரதிநிதித்துவம் வழங்கும் வழி முறை ஏற்படுத்தப்பட்டது. இன்றும் அந்த பிரதிநிதித்துவ முறை தொடர்கிறது.

 இந்திய வம்சாவளியினைச் சார்ந்த முதல் நீதிபதியாக ஜேக்கப் ஜக்காரியா, ஆசிய வம்சாவளிப் பிரதிநிதித்துவப் படுத்தியவராகப் பணியாற்றினார். பல நாடுகளில் உயர்நிலை நீதித்துறைகளில் இடஒதுக்கீடு (Reservation) ,  பிரதிநிதித்துவம் (Representation), உடன்பாட்டு உறுதி நிலை (Affirmative action) என பல்வேறு பெயர்களில் - ஒரே  சமூகநீதி நோக்கத்தில் நிலவுகிறது.

நாட்டு விடுதலைக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஆறு நீதிபதிகள்தான் பணியாற்ற முடிந்தது. ஒரே ஒருவர்தான் தலைமை நீதிபதியாக வர முடிந்தது. இப்பொழுது ஒரே ஒருவர்தான் உச்சநீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் உள்ளனர். உயர்நீதி மன்றங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தாழ்த்தப்பட்டோர் நீதிபதிகளாக உள்ளனர். போதிய பிரதி நிதித்துவம் இல்லை. பிற்படுத்தப்பட்டவர்களும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. உயர்நீதிமன்ற , உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெறுவதற்கு 10 ஆண்டுகாலம் வழக்குரைஞராக பணியாற்றிய அனுபவம் என்பதே தகுதி நிலை. அத்தகைய தகுதியில் ஏராளமான ஒடுக்கப்பட்டோர் வழக்குரைஞராக பணியாற்றி வருகின்றனர். அத்தகையோர் நீதிபதிகளாக நியமனம் பெற, வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். உயர்நிலை நீதிபதி நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். சமூகநீதிதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம்.

இவ்வாறு பேராசிரியர் தாம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அரசு முதன்மைச் செயலாளர் 
முனைவர் டி.சுரேஷ்

அரியானா மாநில அரசின் முதன்மைச் செயலாளர் முனைவர் டி.சுரேஷ் அய்.ஏ.எஸ். உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது:

ஆந்திராவில் பிறந்து, படித்து, பணியில் சேர்ந்து, தமிழ்நாட்டைச் சார்ந்தவரை மணம் முடித்து தற்பொழுது அரியானாவில் அரசுப் பணியில் உள்ளேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். எனது தந்தை வழிப்பாட்டனார் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளி. எனது தந்தையை ஓரளவிற்கு படிக்க வைத்தார். எனது தந்தை என்னை நல்லநிலைக்கு கொண்டு வந்தார். குடும்ப அளவில் முயற்சி இருந்தாலும், சமூகநீதி அடிப்படையில்தான் - இடஒதுக்கீடு வழிமுறை இருந்த காரணத்தால்தான் இன்று அய்.ஏ.எஸ். அதிகாரி நிலைமைக்கு வர முடிந்தது. நான் இந்த நிலையில் உள்ளதாலேயே எனது குடும்ப உறவினர்கள் அனைவரும் உயர் நிலையில் உள்ளதாகக் கருதி விட முடியாது. பலர் அடிநிலையில்தான் உள்ளனர். இன்றும் அவர்களுக்கு உதவி செய்து அவர்கள் நல்ல நிலையில் உயர்த்திடும் கடமையினை தொடர்ந்து வருகிறேன். ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவர் உயர்நிலை அடைந்ததால் குடும்பத்தினர் அனைவரும்  உயர்ந்து விட்டதாகக் கருத முடியாது. சமூகநீதி அடிப்படையில் மேம்பாடு அடைந்தவர்கள், வந்த வழிமுறை பற்றிய நினைவுகளுடன் சமூகநீதி உணர்வுடன் - சிந்தனையுடன் இருந்திட வேண்டும். பிறருக்கு உதவிடும் பிறரை உயர்த்திடும் பணியினை முடிந்த வரையில் செய்திட வேண்டும். ஆனால் இடஒதுக்கீடு அடிப்படையில் உயர்நிலைக்கு வந்த மிகப் பலரிடம் ஒரு வித மேட்டிமைத்தனம் (ணிறீவீtவீsனீ) நிலை கொண்டு வருகிறது. பிறரை பற்றிய அக்கறை - மற்றவர்களும் தம்மை போல நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். குறைந்தபட்சம் சமூகநீதி பற்றிய நன்றி உணர்வாவது அத்தகையோரிடம் வெளிப்பட வேண்டும். இந்த வகையில் உயர்ஜாதி மக்களிடமுள்ள ஒருமைப்பாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் படித்து  பட்டம் பெறலாம். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கு வரலாம். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம்; அமைச்சராகலாம், நாட்டின் குடியரசுத் தலைவராகலாம். ஒடுக்கப்பட்ட தன்மையின் அடிப்படையில் உயர்நிலை நீதிபதிகளாக வர முடியாது என்பதே உண்மை நிலை; அவல நிலை. இந்த நிலை மாற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் 'இடஒதுக்கீடு' பின்பற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான சமூகநீதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலை உருவாகும். அந்த நிலை வர சரியான புரிதலுடன், சமூகநீதி உணர்வுடன் பணியாற்றிடுவோம்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஏ.டி.என்.ராவ்

சமூகநீதிச் சுடரொளி அன்னம் சுப்பாராவ் அவர்களின் மூத்த மகனும், உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் மூத்த வழக்குரைஞருமாகிய ஏ.டி.என்.ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த. அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். தமதுரையில் ஏ.டி.என்.ராவ் கூறியதாவது:

எங்களது தந்தையர்  எங்களைப் படிக்க வைத்து அவரைப் போலவே வழக்குரைஞராகப் பணியாற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தினார். குடும்ப நிமித்த அவசியப் பணிகள் இருப்பினும் தமது வழக்குரைஞர் பணிக்கு முன்னுரிமை அளித்து கடமை ஆற்றினார். அதே பண்பினை எங்களுக்கும் கற்றுக் கொடுத் தார். அவர் கடைப்பிடித்த சமூகநீதிக் கொள்கையின் பால் அக்கறை கொண்டு பணியாற்றிட, சமூகஅநீதியில் பாதிக்கப்பட்டோர்களுக்கு சட்டரீதியாக உதவிகள் வழங்கிட எங்களை பயிற்றுவித்தார். எங்களது தந்தையார் வழியில் நாங்கள் இருப்பது, தொடர்ந்து இருப்பது எங்களுக்கு பெருமையும், மனநிறைவும் அளிக்கிறது.

சமூகநீதி பற்றிய உணர்வுத்திறன் (Sensitisation of Social Justice) ஒடுக்கப்பட்டோர் நிலையிருந்து மேம்பட்ட நிலை எட்டியோரிடம் ஊட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நம்மால் இயன்ற வரையில் உதவி புரிவோம். சட்டத் தொழிலில் சமூகநீதி சார்ந்த பணியில் எங்கள் தந்தையார் வழியில் பணி ஆற்றி வருகிறோம். 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதை நினைவு கூற விரும்புகிறேன். மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியும் கலந்தாய்வில் பங்கேற்பு கிட்டாத ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு மாணவி கலந்தாய்வுக் கூட்டம் நிறைவு பெறும் நாளுக்கு முதல்நாள் பிற்பகல் எங்களைச் சந்தித்தார். மருத்துவப் படிப்பு அனுமதிக்கான கலந்தாய்வில் பங்கேற்றிட சட்டரீதியான "உதவியைக் கேட்டார்" அவருடைய நிலை, அவருடைய குடும்பப் பின்னணி பற்றி தெரிந்து கொண்டு உடனே வழக்கு தாக்கல் மனு தயாரிக்க  எனது உதவியா ளர்களைப் பணித்தேன். அடுத்த நாள் நீதிபதி முன்னிலையில் நேரடியாக  அந்த மாணவியையும் அழைத்துச் சென்று வழக்கமான கலந்தாய்வில் பங்கேற்க காலை 11.30 மணிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுதலையும் தெரிவித்தேன். மாணவியின் நிலையைப் புரிந்து  கொண்டு உடனே நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்ற உத்தரவு தொலை பதிவி (திணீஜ்) மூலம் அனுப்பப்பட்டு, அந்த மாணவி கலந்தாய்வில் கலந்து கொண்டார். மருத்துவக் கல்வி  பயில அனுமதியும் கிடைத்தது. வழக்காடும் தொகையாக மாணவி தனது தாயின் சேலை முந்தானையில் கட்டி வைத்திருந்த ரூ.2000 அய் எனக்கு அளிக்க முன் வந்த போது மனம் நெகிழ்ந்து மறுத்து விட்டேன்.

இது நடந்து 8 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்று அந்த மாணவி ஒரு டாக்டர். அவரது கணவரும் டாக்டர். மருத்துவ மேல் படிப்பையும் அந்த மாணவி  முடித்து விட்டார். எங்களது தந்தையார் ஊட்டிய சமூகநீதி உணர்வுதான் இத்தகைய வழக்குகள் நடத்த எங்களை முனைப்படுத்தியது. தொடர்ந்து எங்களது தந்தையார் காட்டிய வழியில் பணியினைத் தொடர்வோம். எங்களது தந்தையார் நினைவு சிறப்பு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோருக்கும் பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிறைவு சொற்பொழிவின் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன், தமிழ்நாடு அரசின் தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் குழுவின் உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், டில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞர் லெனின், திராவிடர் கழக வழக்குரைஞர்கள் அணியின் தோழர்கள் , சென்னை உயர்நீதிமன்ற வழக் குரைஞர்கள் வருகை தந்திருந்தனர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மற்றும் திராவிடர் கழக பல்வேறு அணியின் பொறுப்பாளர்கள், சமூநீதி ஆர்வலர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சமூகநீதிச் சுடரொளி அன்னம் சுப்பாராவ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு கொள்கை சார்ந்த நிகழ்வாக அவரது நினைகளைப் போற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

தொகுப்பு: வீ.குமரேசன்


No comments:

Post a Comment