மன்னார்குடி ஜீயரைக் கைது செய்யாதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

மன்னார்குடி ஜீயரைக் கைது செய்யாதது ஏன்?

 தருமபுரம் பண்டார சன்னதி - மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கில் சவாரி செய்வது குறித்து சர்ச்சை வெடித்துள்ளது.

1962ஆம் ஆண்டில் தருமபுரத்தில் பல்லக்குச் சவாரி - என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியாரைச் சந்தித்து 'இந்த ஒரு வருடம் மட்டும் அனுமதியுங்கள் - அடுத்த வருடம் முதல் மனிதனை மனிதர்கள் சுமக்கும் நிகழ்ச்சி நடை பெறாது' என்று உத்தரவாதம் கொடுத்த நிலையில் 1963 முதல் பல்லக்குச் சவாரி நிறுத்தப் பட்டது.

இப்பொழுது புதிதாக வந்துள்ள பண்டார சன்னதி திருப்பனந்தாளில், மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் வருவார் என்று அறிவிக்கப்பட்டபோது, திராவிடர் கழகம் மறியல் போரட்டத்தை அறிவித்த நிலையில், பல்லக்கில் செல்வதைத் தவிர்த்து நடந்தே சென்றார் (12.2.2022).

மூன்று மாதங்களுக்கு முன் எடுத்த முடிவை  இப்பொழுது மாற்றிக் கொண்டது ஏன்? இதன் பின்னணி என்ன?

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபிகாரர்கள் துடியாய்த் துடிப்பானேன்?

மன்னார்குடி ஜீயரான செண்டலங்கார ஜீயர் சொல்கிறார், "பல்லக்குத் தூக்குவதைத் தடுத்தால் தமிழ்நாட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது" என்று எச்சரித்துள்ளார்.

இது பச்சையாக வன்முறையைத் தூண்டும் பேச்சாகும்.

கவிப்பேரரசரான வைரமுத்து அவர்கள் ஆண்டாள் பற்றி தெரிவித்த உண்மைக் கருத்தினை எதிர்த்து சிறீ வில்லிப்புத்தூர் ஜீயர் சோடா பாட்டிலை வீசுவோம் என்று சொன்னதற்கு   இதே மன்னார்குடி ஜீயர், சிறீவில்லிபுத்தூர் ஜீயரின் பேச்சுக்கு வக் காலத்து வாங்கிப் பேசவில்லையா?

காந்தியைக் கொன்ற கோட்சே தேச பக்தர் என்று சொன்னவரும் இவரே!

காவி கட்டியதால் கலவரத்தைத் தூண்டும், வன் முறையைத் தூண்டும் வகையில் பேச அனு மதிக்கலாமா?

சங்கராச்சாரியார் கைது செய்யப்படவில்லையா? சிறை செல்லவில்லையா? அமைச் சர்களே நடமாட முடியாது என்பது அதிக பட்சமான வன்முறைத் தூண்டுதல் அல்லவா?

தமிழ்நாடு அரசு தயக்கம் சிறிதுமின்றி உரிய வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment