பேராசிரியர் டாக்டர்
ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி.,
தமிழ்நாடு இதழியல் வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய இதழ் 'குடிஅரசு' ஆகும். தந்தை பெரியார் குடிஅரசைத் தோற்றுவித்த காலத்தில் "தமிழ் இதழ்கள்" எனப்பட்டவை எல்லாம் பார்ப்பனர்களிடமே இருந்தன. இவை அனைத்தும் திராவிட மக்களுக்கு எதிராகவே செயல்பட்டன. கருத்தியல் அடிப்படையில் இவை அனைத்தும் அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறை, சமூகநீதி ஆகியவற்றிற்கு எதிரானவையாகவே விளங்கின. இத்தகைய சூழ்நிலையைப் பெரியார் விளக்குகிறார்;
"திராவிட நாட்டில் உள்ள தினசரிப் பத்திரிகைகள் யாவும் திராவிடர் அல்லாதவர்களிடமும், திரா விடர்களின் மாற்றார்களான பிறவி எதிரிகளிடமும், அவர்களின் அடிமைகளிடமுமே இருந்து வருகின்றன. குறிப்பாக ஆரியர்கள் வெகு தந்திரமாக வெகு முன்னெச்சரிக்கையுடன் பத்திரிகை உலகைத் தங்கள் கைவசத்தில் ஏக போகமாக ஆக்கிக் கொண்டதுடன் வேறு ஒருவரும் அத்துறையில் தலை எடுக்காதபடியும், வேறு ஒருவரும் தினசரிப் பத்திரிகைகள் நடத்திச் சமாளிக்க முடியாதபடியும் செய்து வந்திருக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள்" என்கிறார்.
இந்தநிலையில், குடிஅரசின் கொள்கை முழக்கம் ஊரெங்கும் கேட்டது. பார்ப்பனச் சேரிகள் பதறிப் போயின! ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு அணை போடப்பட்டது. குடிஅரசின் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் "குள்ளநரிகள்" ஓட்டம் பிடித்தன. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் போர்வாளாகக் 'குடிஅரசு' விளங்கியது.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுயசிந்தனை யாளரான தந்தை பெரியாரின் கனல் பறக்கும் கந்தகச் சிந்தனைகளை ஏந்திச் செல்வதற்கு மேலும் பல இதழ்கள் தேவைப்பட்டன. 'புரட்சி', 'பகுத்தறிவு', 'ஸிமீஸ்ஷீறீt' முதலான இதழ்கள் இந்தத் தேவையைச் சிறிது காலம் ஓரளவு நிறைவு செய்தன. ஆனால் இன எதிரிகளின் ஏடுகள், பொருள் முட்டுப் பாடின்றித் தமிழர்களுக்கு எதிரானப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்தன.
இந்நிலையில் சென்னையிலிருந்து வாரம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்த நீதிக்கட்சியின் தமிழ் இதழாகிய 'விடுதலை' ஈரோட்டிலிருந்து நாளிதழாக வெளிவரத் தொடங்கியது (1937). 'விடுதலை'யின் நோக்கத்தைப் பற்றிக் 'குடிஅரசு' (1.8.1937) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
"பார்ப்பனரல்லாத தமிழ் மக்களின் முன்னேற் றத்திற்காக பெருத்த நஷ்டங்களுடனும் கஷ்டங்களு டனும் ஆரம்பித்திருக்கும் ஒரு சிறந்த தமிழ் தினசரிப் பத்திரிகை (விடுதலை) - இதன் ஆசிரியர் பண்டித எஸ். முத்துசுவாமிப் பிள்ளை. இதில் தோழர் ஈ.வெ. ராமசாமி முதலிய சிறந்த அறிஞர்களால் ஜஸ்டிஸ் கட்சியைத் தழுவி எழுதப்படும் கட்டுரைகளும், உள்ளூர் வெளியூர் செய்திகளும் தந்திகளும் மலிந் திருக்கின்றன. இதைப் பார்ப்பனரல்லாத எல்லாத் தமிழ் மக்களும், செல்வந்தர்களும் ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
தேசத்தின் பேரால் அன்றாடம் நடந்து வரும் பார்ப்பனச் சூழ்ச்சியும், காங்கிரஸ் புரட்டும் அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவர் கையிலும் 'விடுதலை' அவசியம் இருக்க வேண்டும். இன்று பார்ப்பன ஆதிக்கத்தை அச்சமின்றி ஆணித்தரமாய் வெளிப்படுத்தும் பத்திரிகை இது ஒன்றேயாகும். ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் 5000 பிரதிகளுக்குமேல் தினம் வெளியாகின்றன. இனி ஒரு மாதத்தில் 10,000 பிரதிகள் வெளியாகலாம்" என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
இதனால் 'விடுதலை' இதழின் அக்கால நிலையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சிறிது காலத் தில் விடுதலை சென்னைக்கே திரும்ப வந்து விட்டது (1.5.1941 முதல்) இதனால் மகிழ்ச்சியடைந்த தலைவர்கள் பலர் 'விடுதலை'யை வாழ்த்தி வரவேற்றார்கள்.
'சென்னையிலிருந்து 'விடுதலை' வெளியாவது வெகு நாளாக எதிர்பார்த்த காரியமாகும். தமிழ் மக்கள் அதை ஆதரிக்க வேண்டியது மேலும் அவசியமான காரியம்' என்று திவான் பகதூர் சாமியப்ப முதலியார் அவர்களும்,
"திராவிட மக்களுக்கு இன்று உயிர் நண்பனாக இருந்து உண்மைத் தொண்டாற்றி வரும் பத்திரிகை 'விடுதலை' ஒன்றுதான். இந்த ஒரு பத்திரிகையைத் தமிழர்கள் ஆதரித்து அது என்றும் நிலையாய் நின்று தொண்டாற்றி வர உதவி செய்யவில்லையானால் தமிழர்கள் தங்கள்மீது சுமத்தப்பட்ட இழிவு களையும், அடிமைத்தளைகளையும் நீக்கிக் கொண்டு, சுயமரியாதை பெற்று முன்னேறத் தகுதி இல்லை என்றுதான் பொருள்படும். ஆதலால் ஒவ்வொரு தமிழனும் ஒரு 'விடுதலை'யை வாங்கி வாசிப்பதோடு தன்னாலான உதவி செய்து ஆதரிக்க வேண்டியது கடமையாகும்" என்று டபிள்யு பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்களும் விடுதலையை வாழ்த்தி வரவேற்கிறார்கள்.
'விடுதலை'யின் பணி எத்தகையது? மானிட உரிமை களுக்காகவும், பாட்டாளி மக்களின் பக்கத்துணையாகவும், உழைக்கும் மகளிருக்கு உறுதுணையாகவும், அதிகார வர்க்கத்தினை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்பும் புரட்சி ஏடாகவும் 'விடுதலை' விளங்கியது என்பதைத் தோழர் ஏ.கே. கோபாலன் எழுதிய மடல் விளக்குகிறது.
"காங்கிரஸ் அரசாங்கத்தின் அக்கிரம அடக்கு முறைக்கு எங்கள் கட்சி உட்பட்டு இருந்தகாலத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக நிமிர்ந்து நின்று கிளர்ச்சி செய்த பெருமை பிரதானமாகத் திரா விடர் கழகத் தோழர்களுக்கும் 'விடுதலை' பத்திரிகைக்கும் உரியதாகும். சேலம் சிறையில் குமாரசாமி ராஜா மாதவமேனன் சர்க்கார், நிராயுதபாணிகளான கம்யூனிஸ்ட் தோழர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் செய்து 23 வீரர்களைச் சுட்டுக் கொன்றபோது அடால்ப் இட்லரையும் தோற்கடிக்கச் செய்யும் அந்த அக்கிரமத்தைத் தமிழகமெங்கும் எடுத்துக் கூறி நீங்கள் ஜனங்களைத் தட்டி எழுப்பினீர்கள். தஞ்சை ஜில்லாக் கிராமங்களில் செங்கொடியின் தலைமையில் புது வாழ்க்கைப் போதம் பெற்ற விவசாயப் பாட்டாளிகளுக்கு பெருமிராசுதார் கூட்டமும், காங்கிரசு கட்சியும் இழைத்த கொடுமைகளை, சேரிகள் சூறையாடப்பட்டதை, வாலிபர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை, பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதை, தைரியமாக ஒலிபரப்பி நல்லெண்ணமுடையவர்களின், மனசாட்சி படைத்தவரின் நீதிமன்றங்களாக நீங்கள் விளங்கினீர்கள். சாம்ராஜ்யமென்றால் கள்ள மார்க்கெட் லஞ்சம் என்பதை அம்பலப் படுத்தினீர்கள். இந்த அரிய தொண்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் உங்களை வாழ்த்துகிறேன்." ('விடுதலை' 25.5.1951)
இதே கருத்தினைக் கம்யூ. இயக்கத்தின் மூத்த தலைவர் எஸ்.ஏ. டாங்கே அவர்களும் வலியுறுத்துகின்றார்.
"திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுகளுக்காக மிகவும் பாடுபட்டுள்ளது. நாம் அனைவரும் சர்க்காரின் அடக்குமுறைக்கு ஆளாகிச் சிறைச் சாலைகளில் அவதியுற்ற பொழுதும், நம் தொண்டர்கள் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுதும் இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளும் நம்மைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் தென்னாட்டின் திலகம் திராவிடத்தின் தந்தை பெரியாரும் விடுதலைப் பத்திரிகையும் மட்டிலுமே நம்மைக் கைவிடாமல் காப்பாற்றியது. ஆகையால்தான் நாம் திராவிடர் கழகம் உண்மை யான மக்கள் கழகம் என்பதை உணருகிறோம்." (16.11.1951இல் தோழர் எஸ்.ஏ. டாங்கே பம்பாய் மாதுங்காவில் பேசியது).
மேலே எடுத்துக்காட்டியவற்றால் விடுதலை ஏடும், தந்தை பெரியாரும் ஆற்றிய அரும்பணியை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. திராவிட மக்களின் காவல் அரணாக 'விடுதலை' விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட ஏட்டுக்கு இடை யூறுகள் வராமல் இருக்குமா? எதிரிகள் வாளா இருப்பார்களா?
ஓர் இன மக் களின் சமுதாய முன்னேற்றமன்றிப் பிறிதொன்றையும் குறிக்கோளாகக் கொள்ளாது பணி புரிந்து வரும் விடு தலைக்குப் பிணைத் தொகை கேட்டது அரசு. இதனைக் கண்டித்து அறிஞர் அண்ணா 'திராவிட நாடு' இதழில் 27.6.1948) ஒரு தலையங்கமே எழுதினார்.
"திராவிடனே! உன் சமுதாயம் சேறும் பாசியும் நிறைந்த குட்டை போல் ஆகிவிட்டது. சேறும் பாசியும் நிரம்பிய குட்டையிலுள்ள நீரை எவரே விரும்புவர்? அந்த நீர் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டு விட்டது. எனவே அதை உபயோகித்து உன் உடலை நோய்க் காளாகும்படி செய்து வதைந்து போகாதே! சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப்புரவு செய்து உபயோகப்படுத்திக் கொள் என்று விடுதலை கூறுகின்றது. இப்படிக் கூறுவது தவறு; எனவே இரண்டாயிரம் ரூபா ஜாமீன் கட்டு என்று சர்க்கார் கூறுகின்றது. இது நியாயமா?" என்று அண்ணா விடுதலைக்கு அரசு பிணைத் தொகை கேட்ட நிகழ்வைக் குறித்து எழுதுகிறார்.
தந்தை பெரியார், "விடுதலை" ஏட்டுக்கு வந்த சோதனைகளையெல்லாம் எவ்வாறு எதிர் கொண்டு வெற்றி பெற்றார் என்பது தனி ஆய்விற்குரிய கருப்பொருளாகும். தமிழர் தலைவர் குறிப்பிடுவதுபோல் "தந்தை பெரியாரின் ரத்தத்தில் வளர்ந்த விடுதலை ஏடு'! "காலை ஏழரை மணிக்கு ஆபீசுக்கு வந்தால் இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போகிறேன். இதன் மத்தியில் சுற்றுப் பயணம்" என்று தந்தை பெரியார் அவர்களே 'விடுதலை' ஏட்டை வளர்க்கத் தாம் பட்ட பாட்டை உருக்கமாக எழுதுகிறார்.
எத்தனை முறை அடக்கு முறைக்கு 'விடுதலை' ஆளாயிற்று! எத்தனை முறை நிதி மூச்சுத் திணறல்! எத்தனை வழக்குகள்! இவை எல்லாவற்றையும் எதிர் கொண்டு தமிழினத்திற்கு ஊன்றுகோலாக விளங்கும் 'விடுதலை'யைக் காப்பாற்றித் தமிழர் தலைவரிடம் 'ஏகபோக உரிமையாகக்' கையளித்துவிட்டுச் சென்றுள்ளார் அய்யா.
நெருக்கடி நிலைக் காலத்தின்போது 'விடுதலை' அனுபவித்த கொடுமைகளைக் கவிஞர் கலி. பூங்குன்றன் உரைக்கக் கேட்கும்போது நம் கண்கள் நம்மை அறியாமலே பனிக்கின்றன.
தமிழ் இதழியல் வரலாற்றில் 'விடுதலை' அனுபவித்த கொடுமைகளைப் போல் வேறு எந்த இதழும் அனுபவித்ததில்லை. அதே நேரத்தில் பார்ப்பனர் சூழ்ச்சியால் அரசு தவறிழைக்கும்போது "இது உண்மையா?" என்று விடுதலையில் பெட்டிச் செய்தி வரும். இதைப் பார்த்து எத்தனை முறை தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டன என்பதை அறியும்போது நமக்கு வியப்புமேலிடும்.
பகுத்தறிவு, சமூகநீதி, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, அனைவர்க்கும் கல்வி, பார்ப்பனிய எதிர்ப்பு முதலிய அனைத்துத் தளங் களிலும் 'விடுதலை' கம்பீரத்துடன் பணியாற்றி வருகிறது.
டி.வி.வி.நாதன், பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளை, அ. பொன்னம் பலனார், என். கலிவரதசாமி, சாமி. சிதம்பரனார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் முதலான பெரு மக்கள் 'விடுதலை' ஏட்டின் ஆசிரியர்களாக இருந்துள்ளார். இவர்களுக்குப் பின்னால், தமிழர் தலைவர் - ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் 'விடுதலை' வலிவோடும், பொலி வோடும் எட்டுப் பக்கங்களோடு வெளிவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.
பார்ப்பனரல்லாத மக்களின் நலன் கருதித் தொடங்கப்பட்ட 'விடுதலை' உலகின் ஒரே நாத்திக நாளேடான 'விடுதலை' தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் தொண்டறத்தால் இன்று எண்பத்தி ஏழு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது!
திராவிடப் பெருங்குடி மக்களின் கைவாளாக பாதுகாப்பு அரணாக விளங்கும் 'விடுதலை'யே! நீ வாழ்க!
No comments:
Post a Comment