திருப்புவனம், மே 3 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி யில் நடக்கும் 8ஆவது கட்ட அகழாய்வில் அழகிய தலையலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வில் அய்ந்து குழிகள் தோண்டப்பட்டு பணி நடக்கிறது. இதுவரை நீள்வடிவ தாயக்கட்டை, பாசி மணிகள், சுடுமண் காதணிகள், நெசவு தக்கழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப் பட்டன. கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் தலையலங்காரத்துடனும் காதில் வட்ட வடிவ காதணியுடனும் சுடுமண் பொம்மையின் தலைப்பகுதி மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பத்து செ.மீ., நீளம் மற்றும் உயரம் கொண்ட பொம்மையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
7ஆம் கட்ட அகழாய்வில் அகரத்தில் தலையலங்கார பொம்மை, விலங்கு உருவ பொம்மைகள் கிடைத்த நிலையில் தற்போது 8ஆம் கட்ட அகழாய்வில் கீழடியில் சுடுமண் பொம்மை கிடைத்துள்ளது.கொந்தகை, அகரம் உள்ளிட்ட தளங்களிலும் அகழாய்வு நடக்கின்றன. கொந்தகையில் 21 முதுமக்கள் தாழிகளை முழுமையாக வெளியில் எடுத்த பிறகு மரபணு சோதனை நடத்த தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment