“தமிழை வளர்க்காத தமிழ்த் துறைகள்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

“தமிழை வளர்க்காத தமிழ்த் துறைகள்”

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் தின் தமிழ்த் துறையில், தேசியக் கருத்தரங் கம் ஒன்று இம்மாதம் 22 - 24 தேதிகளில் நடக்க உள்ளது. "இராம பக்தரும், இசை ஞானியுமான தியாகராஜரின் பாடல்களில் தத்துவமும் தெய்வீக மதிப்பும்" என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்குத் தியாகய்யர், முத்துசாமித் தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய "இசை மும் மூர்த்திகள்" படத்துடன் கூடிய அழைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 

இம் மூவருமே பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந் தவர்கள். இவர்கள் தமிழ்க் கீர்த்தனைகள் எதுவும் இயற்றியதில்லை. தமிழ் இசையில் பாடியதும் இல்லை. எல்லாம் சாஸ்திரிய சங்கீதம் தான். தெலுங்குக் கீர்த்தனைகள் இயற்றித் தெலுங்கிலேயே பாடினார்கள். தமிழுக்கும், தமிழிசைக்கும் துளி கூடத் தொடர்பே இல்லாத இவர்களின் "தெய்வீக இசை"யைப் பற்றித் தமிழ்த் துறை சார்பில், தேசியக் கருத்தரங்கம் நடத்த தமிழ்நாட்டில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் தேவை தானா?

"தமிழிசை" என்பது தமிழ் மண்ணில் மலர்ந்த தமிழர்களின் இசைமுறை. இசைப் பதற்கு என்றே தமிழில் இயற்றப்பெற்ற அத்தகைய இசைப் பாக்களின் தொகுதியே "இசைத்தமிழ்" எனப்படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர் போன்றோரின் இசைத்தமிழ் ஆய்வுகளால் தமிழ் இசையின் பெருமை உணரப்பட்டு, அதுவே ஓர் இயக்கமாக உருவெடுத்தது. அண்ணாமலை அரசர், ஆர். கே. சண்முகம் ஆகியோரின் முயற்சியால் 1942 ஆம் ஆண்டில் தமிழிசை இயக்கம் தோன்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியும், சென்னையில் தமிழிசைச் சங்கமும் உருவாக்கப்பட்டன. 

இதற்கு முன்னரே இந்தி எதிர்ப்புப் போராட்ட விளைவால் பெரியாரும், அண் ணாவும் தமிழிசைக்காகக் குரல் கொடுத்த னர். "தமிழர் இசையை வளர்த்தது போல் வேறு இனத்தினர் வளர்க்கவும் இல்லை; தமிழர் இசையை இழந்தது போல் வேறு யாரும் இழக்கவும் இல்லை" என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டுப் பண்டைய தமிழி சையை மீட்டுருவாக்கம் செய்யும் முயற் சிக்கு ஆதரவாக நின்றார்.

சங்க காலத்தில் தமிழிசை செல்வாக்குப் பெற்றிருந்ததற்குச் சங்கத் தமிழ் நூல்களே சான்றுகள் ஆகின்றன. தமிழ் மொழியை யும், தமிழ் இசையையும் புரந்த மன்னர்களே அப்போது தமிழ் மண்ணை ஆண்டு வந்தனர். களப்பிரர் காலத்திற்குப் பின் வந்த பல்லவர் ஆட்சியின் போது, வடமொழிகள் உயர் நிலை பெற்று, வடமொழி இலக்கிய, இலக்கணம் சார்ந்த நூல்கள் தமிழில் இயற்றப்பட்டன. சங்கம் மருவிய காலத்தின் இறுதியில் பக்தி இலக்கியங்கள் தோன்றித் தமிழிசைக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத் தின. பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் இசை வடிவில் இயற்றப்பட்டதால் மீண்டும் தமிழிசை தலை நிமிர்ந்தது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற் றாண்டு வரை பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் தமிழிசையும் ஏற்றம் பெற்றது. பிற்காலச் சோழர்களுக்குப் பிறகு வந்த முகமதியர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழ் இசை செல்வாக்கிழந்து, பதினைந்தாம் நூற்றாண்டில் கர்நாடக இசை எனப் பெயர் மாற்றம் பெற்றது.

தமிழிசை என்று பெருமை பேசுகின்ற அதே நேரத்தில், இசைத்தமிழுக்கான பழந் தமிழ் நூல்கள் இதுவரை நமக்குக் கிடைக்க வில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அவை இருந்ததற்கான குறிப்புகள் மட்டும் தான் கிடைக்கின்றனவே தவிர, அதற்கான ஓலைச்சுவடிகள் ஒன்று கூடக் கிடைக்க வில்லை. சிலப்பதிகாரம் மட்டும்தான் பழந் தமிழ் இசையைக் கூறும் ஒரே காப்பியமா கும்.

சிலப்பதிகாரம் கூறும் பண்களை ராகங்கள் என்றும், அலகு என்பதைத் தாளம் என்றும் பிற்காலத்தில் வட மொழிப் பெயர் சூட்டிச், சிவனோடு சேர்த்துக் கதை கட்டி, அதுவே இசையின் தொடக்கம் என் கிற திரிபுவாதம் தான் வடமொழி வாதமாக முன் வைக்கப்பட்டு வருகின்றன.

17, 18 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்து சாமித் தீட்சிதர் ஆகிய இவர்களை இசை மும்மூர்த்திகள் என்று முன்னிறுத்தும் வட இந்திய வரலாற்றாளர்கள், அதுவே அவர் களுக்கு முன்பாக வாழ்ந்த தமிழ் இசைவா ணர்கள் ஆன அருணாச்சலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய முற்றிலும் தமிழிசையை முன்னெ டுத்த தமிழ் மும்மூர்த்திகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பும் கூடக் காட்டுவதில்லை. தமி ழிசை மூவர், தமிழ் இசை மும்மூர்த்திகள், ஆதி மும்மூர்த்திகள் என்று அழைக்கப் படும் இவர்கள் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித், தமிழிசையை வளர்த்த பெருமக்கள் ஆவர். 

இவர்கள் இசைத்து வந்த பண்ணும், அலகும் சேர்ந்த தமிழ் இசைப் பாடலான "உருப்படி" என்னும் இசை வடிவம் தான், பின்னர் ராகம், தாளம் சேர்ந்த "கீர்த்தனை" என்றானது. உருப்படியின் உறுப்புகளான "எடுப்பு, தொடுப்பு, முடிப்பு" ஆகியவை "பல்லவி, அனுபல்லவி, சரணம்" என்று தற்போது வரை வழங்கப் பட்டு வருகின்றன. இதுதான் இந்திய இசை வரலாற்றில் தமிழுக்குக் கிடைத்திருக்கும் இடம். 

எல்லாமே தமிழில்தான் இருந்தன. இருக்கின்றன. ஆனால் இந்திய இசை என்பது "சாஸ்திரிய ஸங்கீதம்" என்று கூறு வதே தற்காலப் பார்ப்பனிய மாடல்; சில தரங்கெட்ட தமிழர்களுக்கும் தான்.

-முனைவர் சிவ இளங்கோ, 
புதுச்சேரி.


No comments:

Post a Comment