ஜாதி வெறி, பெண்ணடிமை கருத்தைப் பிரதிபலிக்கும் உறுதிமொழி ஏற்பதை ஆரம்பத்திலேயே - கிருமியைத் தடுப்பதுபோல் தடுத்து நிறுத்துக!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் வழமையில் உள்ள உறுதிமொழியை மறுத்து சமஸ்கிருதத்தில் உள்ள ஜாதி வெறி, பெண்ணடிமையை வலியுறுத்தும் சமஸ் கிருத உறுதிமொழியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எடுத்ததன் பின்னணி என்ன? தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசு இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதுரை மருத்துவக் கல்லூரியில் வெள்ளைக் கோட் அணிந்து உலகமெங்கும் பல காலமாக புழக்கத்திலிருக்கும் அனைவருக்கும் ‘மனிதநேயத்துடன் மருத்துவம் பார்ப் போம்' என்ற ‘ஹிப்போகிரேட்டிக்' உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பாக தேசிய மெடிக்கல் கவுன்சிலால் புகுத்தப்பட்டுள்ள ‘மஹரிஷி சரக் ஷபாத்' உறுதிமொழியை - தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை யின் ஆணை எதுவுமில்லாத நிலையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், ஏ.பி.வி.பி. என்ற அகில பாரத் வித்யா பரிஷத் அமைப்பின் சில ஆசிரியர் - மாணவர் கூட்டு ஏற்பாடு இதில் இருக்கும் என்ற சந்தேகமும் பரவலாக இருக்கிறது. ஊடுருவல் கலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குக் கைவந்ததாயிற்றே!
'மஹரிஷி சரக் ஷபாத்' உறுதிமொழிக்கு வக்காலத்து வாங்குபவர் யார்?
மதுரை நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை நடவடிக்கை எடுத்து, அதற்குத் தலைமைதான் பொறுப்பேற்கவேண்டும் என்ற பொது சட்ட விதி நடை முறைப்படி அந்தக் கல்லூரியின் டீன் (கல்லூரி முதல்வர்) மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது தான் சரியான முறை.
இதற்கு மருத்துவர் சங்கத்தினர் என்ற ஓர் அமைப்பின் சார்பில் வக்காலத்து வாங்குபவர் எப்படிப்பட்டவர் என்று சமூக வலைத் தளங்களில் வெளியாகி, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! (மேனாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு ரெய்டின்போது இந்த டாக்டர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டதுமூலம் அவர் யாருக்கு நெருக்கம் என்பது வெளியாகியது).
மதுரையைத் தொடர்ந்து இராமநாதபுரத்திலும்!
அதேபோல, இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் நடந்ததாக இன்று (3.5.2022) படத்துடன் ‘தினமலர்' நாளேட்டில், 12 ஆவது பக்கத்தில் அந்த டீன் உறுதிமொழிகள் - மூவகையில் எடுக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுத் துள்ளது - இது தற்செயலாகவோ, வெறும் மாணவர்கள் ஏற்பாடாகவோ நடந்ததாகக் கூறுவது பிரச்சினைக்குப் பொருத்தமில்லாத விளக்கம் அளிப்பதாகும்.
‘‘ஹிப்போகிரேட்டிக்' உறுதிமொழிக்குப் பதிலாக, ‘மஹரிஷி சரக் ஷபாத்' உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையோ, மருத்துவப் பல்கலைக் கழகமோ சுற்றறிக்கையோ, ஆணையோ பிறப் பிக்காதபோது, திடீரென இப்படி மதுரை அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் என்றால், இது திட்டமிட்டே செய்யப்பட்டுள்ள ஓர் ஏற்பாடு - தமிழ்நாடு அரசிற்கு எதிரான அறைகூவலும்கூட.
ஜாதி வெறி, பெண்ணடிமையை வெளிப்படுத்தும் சமஸ்கிருத உறுதிமொழி!
இதில் மருத்துவர்கள் சங்கம் என்ற ஒரு சில அமைப் பின்மூலம் அறிக்கை விடுவதை தமிழ்நாடு அரசு ஏற்காமல், ஜாதிவெறி, பெண்களை இழிவுபடுத்துதல் ஆகியனவற்றைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தல் அவசியமானது. மருத்துவத் தொழிலின் அறத்திற்கே நேர்முரணானவற்றைக் கொண்டு சமஸ்கிருதக் கலாச்சார சீரழிவைத் திணிப்பது என்பது ‘நீட்'டைவிட ஆபத்தானது!
இதனை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், தமிழ்நாடு ஆட்சிக்கு எதிராக இப்படி பல கண்ணிவெடிகளை மதவெறி சனாதன பார்ப்பனிய சக்திகள் புதைத்து, விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும்!
நீட், தேசிய கல்வியை திசை திருப்பும் யுக்தியா?
‘நீட்' தேர்வு, புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற குலதர்மக் கல்விக் கொள்கை எதிர்ப்பை திசை திருப் பவும்கூட. இதை ஓர் உத்தியாகவும் காவிகள் பயன்படுத்து கிறார்களோ என்ற வாதமும் தள்ளப்பட முடியாது.
தமிழ்நாடு அரசு கவனம் முக்கியம்! முக்கியம்!!
தனி நபர் நல்லவரா - அல்லவரா என்பதா இதில் முக்கியம்!
பொறுப்பேற்கவேண்டியவர் பொறுப்பைப் பிறர்மீது போடுவது - அவருக்காக சிலர் பரிந்துரைப்பதும் ஏற்கத்தக்க தல்ல என்பது நமது உறுதியான கருத்து.
கிருமியைத் தடுத்திடுக!
தமிழ்நாடு அரசு இதை கிருமி பரவலாகப் பார்த்து, தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக முடுக்கிடவேண்டியது அவசர அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.5.2022
No comments:
Post a Comment