பார்த்து நடந்தால் பாதை தெரியும் பாதை தெரிந்தால் பயணம் தொடரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

பார்த்து நடந்தால் பாதை தெரியும் பாதை தெரிந்தால் பயணம் தொடரும்

தமிழர் தலைவரின் பெரும் பரப்புரைப் பயணம் தொடர்கிறது

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

ஆன்மீகர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 எனும் சித்திரை மாத முதல் நாள் மூட, மூட நம்பிக் கைகளின் அடிப்படையில் ‘தமிழ்ப் புத்தாண்டு' எனும் சிறப்புடைய நாளாகக் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் திராவிடர்க்குக் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் அறிந்து - தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு - அப்படியானால் ஏப்ரல் 14, சித்திரை முதல் நாள் வேறு ஒரு வகையில் மிக முதன்மை வாய்ந்த நாளாகவே விளங்கி வருகிறது.

அரசியல் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் என்பதாலேயே முதன்மையும், சிறப்பும் அந்நாளுக்குரியதாகிறது.

அதினினும் மிக்கச் சிறப்பு வாராது வந்த மாமணி என நாம் கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டின்ஒப்பற்ற முதல மைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளை, 

தமிழ்நாடு அரசு "சமத்துவ நாளாக"க் கொண்டாடும் என 13.04.2022ஆம் நாள் சட்டப் பேரவையில் அறிவித்தார். வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பு 3.4.2022 முதல் நாகர்கோவிலில் தொடங்கிப் பரப்புரைப் பெரும் பயணம் மேற்கொண்டிருந்த தமிழர் தலைவர், இந்த அறிவிப்பினை வரவேற்று, வரவேற்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிகுந்த பிரகடனமாகும் என அறிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டின் தலைநகர் வரை எட்டிச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை முதன் கட்டப் பயணத்தைத் தொடர்ந்து 14.4.2022 அன்று திருவண்ணாமலை, கல்லக்குறிச்சியில் தொடங்கித் தம் நாற்பது நகரங்களில் 24 நகரங்களுக்குத் தொடர் பரப்புரைப் பெரும் பயணம் மேற்கொண்டார். செங்கற்பட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றிய அரசுக்கு மிகப்பெரிய எதிர்ப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இந்தி மொழித் திணிப்பில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என எச்சரித்தார்.

தமிழர் தலைவரின் இந்த வெற்றிப் பயணம் நிறை வுற்ற இவ்வேளையில் ஓர் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறோம். ஒரு மாமனிதர் தன்னலத்திற்கு அல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலச் சந்ததியினர் நலன் கருதித் தம் உடல் நலனையும் பொருட்படுத்தாது தமிழகம் முழுமையிலும் 21 நாட்கள் பெரும் பரப்புரைப் பயணத் தைச் சந்து முனைகளில் அல்ல - தம் கழகத்தினரிடம் மட்டுமல்ல - ஒவ்வோர் ஊரிலும் தி.மு.க, அதன் தோழ மைக் கட்சியினரும் அதுவும் அமைச்சர்கள், தலைவர் களுடன் வெற்றிப் பயணம் மேற்கொண்டார்.

ஜனநாயகத்துக்கு உரியவை அல்ல

ஆனால், தினமலர், தினமணி, இந்து ஆகியன வேண்டுமாயின் பார்ப்பன ஊடகங்கள் பதுங்குவது வழக்கம். பார்ப்பனரல்லாதார் ஊடகங்கள் கூட அச்சு ஊடகங்கள் மட்டுமல்லாது, தகவல் ஒலிபரப்பு ஊடகங்கள் கூட இத்தகவலை மக்களிடத்துக் கொண்டு செல்லாதது வருந்தக் கூடியது மட்டுமல்லை. ஜனநாயகத்துக்கு உரியவை அல்ல.

‘தீபமும் திகைப்பும்' என இனமானப் பேராசிரியர் கூறியதும், மூனா கானா என்ற பெயரில் தலைவர் கலைஞர் எழுதியதும் தான் பகுத்தறிவாளர்களுக்கு நினைவிற்கு வரும். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம். தன் தொண்டர்களுக்குப் பாசறை அமைத்துள்ளது.

பரப்புரைப் பெரும் பயணப் பொதுக் கூட்டம் அடுத்துக் கண்ட நகர் திருவண்ணாமலை. சமயவாதிகள் திருவண்ணாமலைக்கு ஒரு கதை சொல்லி மும்மூர்த்தி களில் முதல் மூர்த்தி தானே என்று சிவன் மெய்ப்பித்த தலம் என்னும் திருவண்ணாமலை.

பக்தி வந்தால் புத்தி போகும், 
புத்தி வந்தால் பக்தி போகும்

திருவண்ணாமலையில் பேசுகையில், "இந்தத் திருவண்ணாமலைக்குத் திராவிட இயக்கத்தில் சிறப்பான வரலாறு உண்டு. பக்திக்கும் சொல்வார்கள். நான் சொன்னது புத்திக்கு" என்று கூறி எடுத்த எடுப்பிலேயே கைதட்டல்களை அள்ளிக் கொண்டு விட்டார். “பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்" என்று தந்தை பெரியார் சொல்வார் எனத் தொடர்ந்தார்.

ஒரு புதிய உவமையைத் திருவண்ணாமலையில் ஆசிரியர் சுட்டியதைக் கூற வேண்டும். தி.க.வைத் தூசிப் படையாகவும், தி.மு.க.வை ராணுவமாகவும் உவமித்தார். ‘ராணுவம் வரும் முன் தூசிப் படை என்பது - தூசிப் படை இராணுவம் வரும் முன் பாதையைச் செப்பனிடுவ தோடு எங்கெங்கே கண்ணி வெடி வைக்கப்பட்டிருக்கிறது என்றறிந்து அதை நீக்குபவர்கள்" என விளக்கம் அளித்தார்.

திருவண்ணாமலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு கல்லக்குறிச்சி நோக்கிப் பயணித்தார். கல்லக் குறிச்சி மந்தை வெளித் திடலில் கல்லக்குறிச்சியில் நேர நெருக்கடி காரணமாக உடனடியாகத் தன் பேச்சைத் தொடங்கினார்.

நீட் தேர்வு எழுதாமல் அமெரிக்கா சென்றுள்ள தமிழ் நாட்டு மருத்துவர்களின் சிறப்பைத் தம் நேரடி அனுப வத்தில் பகிர்ந்து கொண்டார்.

அரசமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமையை விளக்கிப் பேசினார். இதனால் விளையும் ஆபத்தைச் சுட்டிக் காட்டினார். அதிலிருந்து விடுபட - மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வலியுறுத்தினார்.

இரா.முத்தரசன்

கல்லக்குறிச்சிப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற வர்களில் பொதுவுடமை இயக்க மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிடத்தக்கவர்.

தமிழர் தலைவர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திருச்சி நோக்கித் தம் பயணத்தை தொடர்ந்தார்.

15.4.2022 அன்று பெரம்பலூரிலும், அரியலூரிலும் பெரும் பயணப் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. கட்சி வேறுபாடின்றி தமிழர் தலைவர் உரையாற்றும் கூட்டங்களில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆங்காங்கே மக்களிடத்து முகிழ்க்கின்ற விழிப்புணர்ச்சி, எழுச்சிப் பெருக்கினைப் பார்த்து, இந்தப் பயணம் வெற்றி பெறும் என்று வாழ்த்துத் தெரிவித்தே உள்ளனர். தங்கள் பகுதிகளில் பொது மக்களோ தமிழர் தலைவர் வருகை யினை ஒரு பெருவிழாவாகத் திருவிழாவாகக் கருதித் தங்கள் பங்களிப்பினை உணர்வுபூர்வமாய் உரிமையுடன் அளித்தனர்.

ஆ.ராசா

15.4.2022 அன்று பெரம்பலூர் தேரடித் தெருவில் பரப்புரைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. பொது வாகவே பெரம்பலூரைச் சேர்ந்தவரும், உதகமண்டலம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஆசிரியரின் செல்லப்பிள்ளை என்பதோடு தந்தை பெரியார் திடலோடு என்றுமே மிக நெருக்கமான, மிக இணக்கமான நட்பும் உறவும் கொண்டிருப்பவர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் பிதாமகர் என்பதால் அவர் பின் அனைவரும் அணி வகுத்து நிற்கிறோம் ஒருநாளும் ஓய்வெடுக்க மாட்டேன் என்று சொன்ன தந்தை பெரியாராய் இருக்கின்ற தமிழர் தலைவரைத் தங்கள் மண்ணுக்கு வருக வருக வருக என வரவேற்றார்.

தமிழர் தலைவர் தம் உரையில் பெருமையுடன் பெரம்பலூரில் விளக்கி உரைத்தது, தளபதி ஸ்டாலினின் பெருமை மிகு திராவிட மாடல் ஆட்சியைப் பெருமிதம் கொண்டது. குருவிக்காரர் என்று இச்சமூகத்தை இழித்தே பேசுவோர் இல்லத்தில் உணவருந்தியதைப் பெருமிதத் துடன் எடுத்துக் கூறியதே. அங்கிருந்து அடுத்த கூட்டத் திற்குச் செல்ல அரியலூர் புறப்பட்டார்.

சா.சி.சிவசங்கர்

அங்கே அரியலூரில் அண்ணா சிலை முன்பு அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில் பழைய துரோணாச்சாரியார் கதையைச் சொல்லிக் கொள்கைப் பிரச்சாரத்தை விளக்கி உரையாற்றி யவர் ‘இன்றைக்கு துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலைக் கேட்டால் என்னவாகும்?' என்று கேட்டு நிறுத்திக் கட்டை விரலைக் கேட்பவர்கள் காணாமல் போவார்கள் என்று கூறி மக்களிடையே எழுந்து பொங்கி நின்ற உணர்ச்சியைப் பிரதிபலித்தவர், விழிப்புணர்வு பெறத் தவறாதீர்கள் என வலியுறுத்தி விடை பெற்று வந்தார்.

பாறையான திராவிட எழுச்சியோடு மோதுகிறது பா.ஜ.க. ஒன்றிய அரசு, தலை சுக்கு நூறாய் நொறுங்கப் போகிறது. மருத்துவம் பயில இன்றைக்கு நூறு ஆண்டு களுக்கு முன் விண்ணப்பம் வீசிடவே சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற கோடரிக் கொள்கை வகுத் திருந்த போது மருத்துவப் படிப்புக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு என்று அன்று தந்தை பெரியார் கேட்ட கேள்வியைத் தாமும் கூறி விளக்கி உரையாற்றினார் 17.4.202 அன்று திண்டுக்கல்லில்.

இந்தப் பரப்புரைப் பயணம், கொள்கை கோட்பாடு விளக்க மெல்லாம் இந்த மேடையில் இருப்பவர்களுக்காக அல்ல, உங்கள் பிள்ளைகளுக்காக, உங்கள் பேரப் பிள்ளைகளுக்காக என்பதால் எச்சரிக்கையோடு இருங் கள் என்று கூறித் தம் உரையை நிறைவு செய்து விட்டுத் திருச்சிக் கூட்டத்திற்குப் பயணித்தார். திண்டுக்கல்¬த் தொடர்ந்து அடுத்துச் சென்றது மலைக்கோட்டை நகருக்கு - சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சியினர் என்று பெருங்கூட்டத்தினர் நிறைந்து நின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை நகர் அன்னை மணியம் மையார் 1937இல் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டப் பேராளிகள் ராமசாமி, வெள்ளைச்சாமி ஆகிய சிறையில் உயிர்நீத்த தியாகச் செம்மல்களின் சிறையிலேயே புதைக்கப் பெற்ற உடல்களால் போராடிப் பெற்றுக் காவிரிக் கரைகளில் புதைக்க எடுத்துச் சென்ற போது அவ்வழி செல்லக்கூடாது என்று காவலர் மறிக்க அன்னை மணியம்மையார் ஒரு போராளி என்று காட்டிய சாலை திருச்சி காந்தி மார்க்கெட் சாலை.

அந்தச் சாலையில், காந்தி மார்க்கெட் மரக்கடை நிறுத் தம் அருகில் நடைபெற்றப் பெரும் பயணப் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை நிகழ்த்தினார்.

பெரியார் தோற்றது கிடையாது

ஆங்கிலச் சொல் விளையாட்டைத் தம் உரையில் எடுத்துக் காட்டியதும் - இந்திக்கு எதிராக வீர முழக்க மிட்டதும் குறிப்பிடத்தக்கன. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆங்கிலத்தில் வைத்துள்ள பெயரைச் சுட்டிக்காட்டி அது "நேஷனல் எஜுகேஷன் பாலிசி அல்ல, நோ எஜுகே ஷன் பாலிசி" என்று சொல்லிச் சிரிப்பலையை மிதக்க விட்டார். ‘இதுவரையில் பெரியார் தோற்றது கிடையாது‘ என்று எச்சரிக்கை செய்து தம் உரையைத் திருச்சியில் நிறைவு செய்தார்.

21  நாட்கள் பயணத்தில் கோவை சுந்தராபுரம், மேட்டுப்பாளையம் பரப்புரைப் பயணம் தான் குறிப்பிடத் தகுந்த புரட்சி அறிவிப்புப் பயணமாக அமைந்தது எப்படி? அதென்ன புரட்சி, புரட்சி என்பதை விடப் போராட்ட அறிவிப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஒன்றிய அரசு பரப்புரைப் பயணம் என்றால் மேடை போட்டு முழங்குவார்கள். அதோடு பிசுபிசுத்து ஓய்ந்து விடும் என்று எண்ணியிருந்தால் இச்செய்தி இடியாக டில்லிக்குப் பரவியிருக்கும்.

இது இராவண லீலா நடத்திடும் முன் அன்னை மணியம்மையார், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், தலைமை அமைச்சர் இந்திரா அம்மையாருக்கும் விடுத்த எச்சரிக்கை போல் முதன்மை வாய்ந்தது.

தமிழர் தலைவர் "இந்தித் திணிப்பு மீண்டும் நடை பெறுமானால் அன்றைக்கு எடுத்த தார்ச் சட்டியும் தூரிகையும் இன்றும் அப்படியே இருக்கிறது" என்று மட்டும் கூறி மேட்டுப்பாளையத்தில் உரையாடிச் சென்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தம் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று கூறினாரே அதை மேட்டுப்பாளையத்தில் அழுத்தம் திருத்தமாகப் பதிய வைத்தார்.

மனுதர்மத்தின் கொடுமையை...

அதற்கு வள்ளுவப் பெருந்தகையின் "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று திருக்குறளை உதாரணமாக்கியவர் தொடர்ந்து இதற்கு எதிரான பண்பான ஆரியப் பண்பாட்டை மனு தர்மத்தின் கொடுமையை எடுத்து வைத்தார்.

இந்தி நெவர் - இங்கிலீஷ் எவர்

அமித்ஷாவுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் இந்தியைத் திணித்த ராஜாஜியையே "இந்தி நெவர் - இங்கிலீஷ் எவர்" என்று கூற வைத்த இயக்கம் என்று கூறியவர். இந்தித் திணிப்பைக் கண்டித்து, இந்தித் திணிப்பை எதிர்த்து எழும்பூரில் இந்தி எழுத்தைத் தார்பூசி அழிப்போம் என்று ஏப்ரல் 30ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதற்குக் கால தாமதமின்றி நாள் குறித்தார்.

ஆம்! நாளும் குறித்து விட்டார் நம் தலைவர் ஆசிரியர். திராவிட மாடல் என்பது அனைவருக்கும் அனைத்தும் சமூகநீதி, சமத்துவத்திற்கானது என்று பெருமிதத்துடன் கூறி வரும் தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும் பயணம் 18.4.2022 அன்று குன்னூரிலும் திருப்பூரிலும் நடைபெற்றது. குன்னூரில் பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியது. குன்னூரில் உரை நிகழ்த்திய ஆசிரியர், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு மக்கள் பட்ட பாடுகளை எடுத்துக் காட்ட, பள்ளி ஆசிரியர் மாணவனின் வயதைக் கண்டறியக் கைகளால் காதைத் தொட்டுக் காட்டச் சொல்வதை அப்படியே செய்து காட்டினார். அப்படி எல்லாம் சொல்லிப் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் இதை தலைகீழாக மாற்றும்படி "நீட், கியூட்" தேர்வுகளை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகக் கொண்டு வருவதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார்.

மேலும் ஆளுநர் சட்டப்படி தம் கடமையைச் செய்ய வில்லை என்று கூறி தம் உரையை நிறைவு செய்கையில் "திராவிடர் கழகம் முன்னெடுத்த போராட்டம் தோற்றதாக வரலாறே கிடையாது" எனும் உண்மையைக் கூறித் தம் உரையை நிறைவு செய்தவர் திருப்பூர் நோக்கிப் புறப் பட்டார்.

திருப்பூரை அடைகையில் இரவு 8.30 மணி ஆகி விட்டது. அங்குப் பெரும் பயணக் கூட்டம் வெள்ளியங் காடு தெற்குப் பகுதியில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரையினைத் தொடங்குகையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்துப் பேசிடத் திருப்பூர் வந்தபோது ஒரு பெரிய கொலை முயற்சித் தாக்குதல் நடந்ததை நினைவு கூர்ந்தார். கொலை முயற்சி மேற்கொண்டோர் திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறியாத பரிதாபத்திற்குரிய வர்கள் என்றதோடு ‘எதிர்ப்புகள் எதுவந்தாலும் அவை கள் தான் எங்கள் வளர்ச்சிக்கு விளைச்சலுக்கு உரங்கள் என்று' அடக்கத்துடன் கூறினார்.

‘மேடையில் இருந்தோர் மட்டுமல்லாது, மக்கள் அனைவரும் உணர்ச்சிவயமான நிலையை எட்டக் கொலை முயற்சியில் நீங்கள் வெற்றி கூடப் பெறலாம். ஆனால் எங்கள் கொள்கைகளை ஒருபோதும் வெல்ல முடியாது' என்று வீர உரை கேட்டபோது தான் - வேறெங் கும் இல்லாத அண்ணா சிலையும் தந்தை பெரியார் சிலையும் ஒரே இடத்திலே வைத்துள்ள - கலைஞர் திறந்து வைத்த வரலாறு உண்டு என நினைவு கூர்ந்தார்.

ஆர்.எஸ்.எஸ். பாஜகவில் இருக்கும் நம் மக்களுக்கு அவர்களின் கூண்டிலே சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை, ஒன்றிய அரசின் குன்றிய மனத்துச் சூழ்ச்சி, 1987இல் கலைஞர் தம்மை வாழ்த்திப் பேசித் தார்ச் சட்டியை எடுத்துக் கொடுத்து ‘அய்யா இல்லாத போது, அண்ணா இல்லாத போது வழியனுப்பி வைத்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்தவர்' மக்களே விழிப்போடு இருங்கள் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பரப்புரைப் பயணம் 20.4.2022 அன்று ஈரோட்டிலும், கரூரிலும் நடந்தது. ஈரோட்டில் முதலில் கரம்பட்டி நாலு வீதிப் பகுதியில் நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிடத்தகு நிகழ்வு உள்ளதைக் கண்டு வந்துள்ளோம்.

அந்த வரிசையில் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் ஈரோட்டில் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார். அறிவுச் செல்வி - நேரு ஆகிய இருவருமே ஆசிரியரால் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைக்கப் பெற்றவர்கள். காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தந்தை பெரியாரின் பேரனுமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆசிரியர் பயணத்தை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment