நாராயண் லட்சுமணன்
கேரள மாநிலம் கண்ணணூரில் அண்மையில் நடைபெற்ற மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23ஆவது மகாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சு இரண்டு காரணங்களுக்காகவாவது இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெறத் தக்கதாக அமைந்துள்ளது. இந்த பேச்சிலும் இதற்கு முன் அவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் அவரது செயல்பாடுகள், இந்திய ஒன்றியத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் கீழ் - பொதுக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த மாதிரியிலான கூட்டாட்சி கோட்பாட்டுக்கு ஆழ்ந்ததொரு சவால் விடுவதாக அமைந்திருக்கின்றன என்பது முதலாவது,
திராவிடக் கோட்பாடு மற்றும் கம்யூனிஸ்டு கோட்பாடு என்ற இரண்டு தீவிரமான புரட்சிகரமான அரசியல் சித்தாந்தங்கள்- உத்தி அளவில் இல்லா விட்டாலும், கோட்பாட்டு அளவிலாவது ஒருங்கிணைய இயன்ற தன்மைக்கான தொடக்க கால சமிக்ஞையாக அவரது பேச்சு கருதப்பட இயலும் என்பது இரண்டாவது. சில குறிப்பிட்ட பொதுக் கொள்கை அம்சங்களில் பா.ஜ.க. அல்லாத இதர கட்சிகள் ஆளும் மாநிலங்களை தண்டிப்பது போன்ற ஒன்றிய அரசின் கடுமையான போக்குக்கு எதிராக மாநில அளவில் கேட்கப்படும் எதிர்ப்புக் குரல்கள் ஓரணியில் திரள்வதற்கான வாய்ப்பினையும் நேரத்தையும் இத்தகைய அரசியல் முன்னேற்றம் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில சுயாட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்கள்
தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே நிலவும் கலாச்சார, வரலாற்று தொடர்புகள் பற்றி மிக மிகப் பெருமையாக கண்ணணூர் சி.பி.அய். (எம்.) மகா நாட்டில் அவர் பேசியதற்கு பார்வையாளர்களிடமிருந்து இடி முழக்கம் போன்ற கைதட்டல்களுடன் வரவேற்பு கிடைத்தது. அதிகாரங்கள் குவிக்கப்படுவதன் விளைவாகவும் காரணமாகவும் இன்று நடைமுறையில் உள்ள கூட்டாட்சியின் மாதிரிக்கு மு.க.ஸ்டாலினால் விடப்பட்ட சவாலுக்கும் பெருத்த கைதட்டலுடன் கூடிய வரவேற்பு கிடைத்தது. அதனால் என்ன என்று முன் வைக்கப்படும் வாதத்திற்கு எதிராக அவர் வைக்கும் வாதம், இந்திய அரசமைப்பு சட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முறையான இடம் மறுக்கப்படுகிறது என்பதுதான். சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது, நீட் தேர்வு, திட்டக் குழு கலைக்கப்பட்டது மற்றும் தேசிய முன்னேற்றக் குழுவின் நிலை ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலினும் கேரள முதல்வர் பினாராயி விஜயனும் வெளிப்படுத்திய மிக மிகப் பெரிய அளவிலான கவலைகளில், ஒன்றிய அரசுக்கும் சில குறிப்பிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கும் இடையேயான வரி வருவாய்ப் பங்கீடு மன நிறைவு அளிக்காததாகவும் நிதிக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராகவும் உள்ளது என்பதும் ஒன்றாகும். கொள்கைகளின் நடைமுறைக்கான நிதி உதவி மிக மிக அதிகமான அளவில் ஒன்றிய அரசால் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடுதான் மாநில நிர்வாகத்தின் உயிர் காக்கும் குருதி ஒட்டம் போன்றதாக இருப்பதாகும்.
மு.க.ஸ்டாலினுடைய கண்ணணூர் பேச்சு மட்டுமல்லாமல், 2016-2017 முதல் 2019-2020 வரை தமிழ்நாட்டுக்கு ரூபாய் 2,524.20 செயல்பாட்டு மான்யம் வழங்கப்பட வேண்டும் என்று 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ள போதிலும், ஒன்றிய அரசு 2016-2017ஆம் ஆண்டுக்கு 494.99 கோடி ரூபாய் மட்டுமே அளித்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசின் நிதிப் பற்றாக் குறையை சீர் செய்யும் நோக்கத்தில் அவர் அண்மையில் டில்லிக்கு சென்றார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்த வேண்டுகோள் அறிக்கையில், "நிபந்தனைகளை நிறைவு செய்துவிட்டு, நிதி பயன்பாட்டு சான்றிதழை அளித்த பிறகும் 2017-2018ஆம் ஆண்டுக்கான மான்யம் அளிக்கப்படவில்லை" என்றும் "அதனை தொடர்ந்து 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான மானியங்களும் விடுவிக்கப்படவில்லை" என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர்கள் பற்றி
அண்மைக் காலமாக, ஏற்கெனவே நலிந்து போய்க் கொண்டிருக்கும் அரசமைப்பு சட்ட பாரம்பரியத்தை பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் உடைக்கும் பேரச்சம் தரும் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக மு.க.ஸ்டாலினும், பினராயி விஜயனும் கண்டித்து வருகின்றனர். சாதாரணமாக மாநில அரசின் அதிகார எல்லைக்குள் இருக்கும் என்று கருதப்படும் நிர்வாக விஷயங்களில் ஆளுநர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது அல்லது கேள்விக்கு உள்ளாகி இருக்கும் மாநில அரசுக்கு எதிரான அரசியல் சூழ்நிலைகளில் தங்களது அலுவலகத்தையும் ஈடுபடுத்திக் கொள்வது என்ற வடிவத்தை ஆளுநர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த ஆண்டின் தனது குடியரசு தின விழா உரையின்போது மும்மொழி திட்டத்தை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி கேட்டுக் கொண்டுள்ளதை இதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். போற்றி வளர்க்கப்பட்டு வரும் தமிழ் மொழியின் அடையாளம் மற்றும் கலாச்சாரக் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பது ஆளுநரின் இத்தகைய பேச்சு. இந்தி மொழிப் பாடங்களை பள்ளிகளில் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கூறும் தேசிய கல்வி வரைவு மசோதாவின் ஒரு பிரிவு நீக்கப்படக் காரணமாக இருந்த 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்கொண்ட போராட்டங்களின் போது ஆளுநர் அரசமைப்பு சட்டப்படியான தனது அதிகாரங்களை விட அதிக அளவிலான அதிகாரங்களை எடுத்துக் கொண்டதும் மிகப் பெரிய அளவிலான எதிர்ப்பை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே ஏற்படுத்தியது.
வழக்கமான தனது அரசமைப்புச் சட்டக் கடமைகளைத் தாண்டி, சிலர் விவரிப்பது போல, ஒன்றிய அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு ஆதரவாக மாநில அரசியலில் தனது கட்டை விரலை நுழைத்து அழுத்துவதுபோன்ற விவகாரங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 'நீட்' தேர்வு விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஏற்புக்கு அனுப்புவதில் ஆளுநர் மிக நீண்ட கால தாமதம் செய்கிறார் என்ற ஸ்டாலின் மற்றும் அவரது சகாக்களின் மிகச் சரியான குற்றச்சாட்டு, கல்வித் துறை 1976ஆம் ஆண்டு முதல் அரசமைப்பு சட்ட அட்டவணையின் பொதுப் பட்டியலில் இருந்து வருகிறது என்ற உண்மையில் இருந்து பிறந்ததாகும்.
கருத்து மாறுபாடு
கொண்டவர்களிடையேயான ஒற்றுமை
ஒன்றிய அருசுக்கும் மாநில அரசுகளுக்கு மிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது ஒன்றும் புதியதல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த முதலமைச்சர்களும் நாடு முழுவதும் பல பத்தாண்டு காலமாக சர்க்காரியா கமிஷனின் ஆதரவு பெற்ற மாநில சுய ஆட்சிக் கோட்பாட்டுக்காக மிகக் கடினமாக போராடி வந்திருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் - மேனாள் குஜராத் முதலமைச்சரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி மாநில சுயாட்சி பற்றி டிவிட்டரிலும் இதர வழிகளிலும் மிக உரத்த குரலில் ஆதரவாகப் பேசி வந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். என்றாலும் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வைப் பொறுத்தவரை, மக்களின் சுயநிர்ணயம் பற்றிய தொரு போராட்டத்திற்கு, கொள்கை அளவிலான சண்டை சச்சரவுகள் என்ற நிலையில், மட்டுமே இல்லாமல் மிக ஆழ்ந்ததொரு அர்த்தத்தை அளிக்க வேண்டும்.
இந்தி திணிப்பு என்ற கண்ணோட்டத்திற்கு எதிரான தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் எதிர்ப்பு, வெகு தூரத்தில் டில்லியில் உள்ள ஜாதி ஆதிக்கம் செலுத்தும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் பல பத்தாண்டு காலமாக மேற்கொண்ட சமரசப் பேச்சு வார்த்தைகளில் இருந்து மறந்தது ஆகும். தமிழ்நாடு அரசியல் களத்தில் இடம் பெறுவதற்காக அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளைத் தோற்கடித்ததையடுத்து, அவர்களது தந்திரங்கள் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாமல் போய்விட்டன. திராவிட இயக்கத்தை ஒளிரச் செய்த உணர்வின் சாரம் 1967ஆம் ஆண்டில் அரசமைப்புகளில் நிலவிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்கள் குறிப்பிடத்தக்கதொரு முறையில் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து தமிழ்நாடு மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததற்கு காரணமாக அமைந்தது. இன்று தி.மு.க., எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அதே டில்லி அரசியலை நிராகரிக்கும் அதன் பின்னணியில் இருப்பதுதான் அந்த உணர்வு.
தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தில் திமுக அல்லது அஇஅதிமுக எந்தக் கட்சி இருந்தாலும், தங்கள் வாக்காளர்களுடன் 1969ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல்திராவிட கட்சி தலைவர்கள் செய்து கொண்டிருந்த சமூக ஒப்பந்தம் என்பது வெகு ஜனங்களுக்கான சமூக நலத் திட்டங்களைச் சுற்றியே செயல்பட்டு வந்தது. ஒடுக்கப்பட்ட சமூக ஏழை மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களுக்கான நிதி இந்த திராவிட இயக்க அரசுகளால் ஒதுக்கப்பட்டது.
நல்ல நிலையிலான பொது சாலைகள், கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் என்னும் தலத்தில் தமிழ்நாடு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த வரலாற்று ரீதியிலான போக்கு உருவானது. தகுதி வாய்ந்த இத்தகைய கொள்கைகளுக்கு நிதி ஒதுக்குவது பற்றி விடை அளிக்கப்படாமல் போய்விட்ட கேள்வி ஒன்றும் இருக்கிறது. அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் இருந்து கிடைக்கும் வருவாய் இந்த மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செலவில் எந்த அளவுக்கு ஈடு செய்யும் என்பதுதான் அந்த கேள்வி? ஆக்க பூர்வமான பணி வாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் செயல்பாடுகளுக்காக, இலவசங்கள் எதிர்பார்ப்பைத் தாண்டி வேலை செய்யும் மக்களை இந்த கொள்கைகள் எந்த அளவில் முடமாக்குகின்றன? என்பதும் ஒரு கேள்வி? இக் கடினமான கேள்விகளுக்கான மன நிறைவளிக்கும் விடைகளை திராவிட இயக்கம் இன்னமும் அளிக்கவில்லை.
ஏழைகளுக்கு ஆதரவான செயல் திட்டங்கள்
ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து பொது நிதி ஆதரவு என்பது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு ஏன் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது என்பதற்கான விளக்கத்தை அது தருகிறது. வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிய பங்கினை ஒன்றிய அரசு குறைத்தோ அல்லது கால தமதமாகவோ அளிப்பதற்காக ஸ்டாலின் மற்றும் விஜயன் போன்ற தலைவர்கள் குறிப்பாக கோவிட் -19 தொற்று நோய் பாதிப்பு நேரத்தில் மாநிலங்களுக்கான வரி வருவாய் மிகவும் குறைந்து போயிருந்த நேரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிப்பதற்கான சூழ்நிலையை அது உருவாக்குகிறது.
ஈடு இணையற்ற இந்த சமூக நல இயக்கத்தின் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகளை முன் வைத்து, தனது தந்தையும் திராவிடர் இயக்கத்தின் பெருந்தலைவரும் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் அவர்களின் தகுதி பெற்ற வாரிசு என்பதை ஸ்டாலின் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பை 2021 மே மாதத்தில் ஏற்றுக் கொண்ட போது, ஒட்டு மொத்த மாநிலத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கின்றதா என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்தபோது, சென்னை மாநகர மேயராகவும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் அவரது தந்தையின் மேற்பார்வையில் ஆற்றிய பணிகள் அவரது அரசியல் நுணுக்கங்களைப் பட்டை தீட்டியுள்ளது என்றே கூறலாம். அந்த வழியில் அவர் திராவிட அரசியல் உணர்வில் இருந்து ஏதோ சில உண்மையான பண்புகளையும் ஆற்றலையும் தன்னுள் பெறப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இந்த உணர்வு மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டால், காவியுடை கட்சிக்கு மாற்றான ஓர் புதிய ஒன்றிய அரசு வருவதற்கான வாய்ப்பு திருப்பத்தில் காத்து நிற்கிறது என்று கூறலாம்.
நன்றி 'தி இந்து' 20.4.2022
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment