* பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில், பசு மாட்டைக் கொன்றதாக பழங்குடியினத்தைச் சேர்ந்த இருவர் படுகொலை
* காந்தியாரை சுட்டுக் கொன்றபோதும் சரி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் சரி அமைதி காத்த பூமி தமிழ்நாடே!
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நடப்பது வெறுப்பு அரசியல்; பெரியார் மண்ணான தமிழ்நாட்டிலோ நடப்பது விருப்பு அரசியலாம் 'திராவிட மாடல் ஆட்சி' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அவரது அறிக்கை வருமாறு.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கட்சி மாறிய ‘ஆயாராம் காயாராம்கள்' மூலமாக பா.ஜ.க. கைப்பற்றிய நிலையில், அங்கு நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. வின் ‘ராமராஜ்யம்' - ஹிந்துத்துவா சாம்ராஜ்யம் - எப்படி நடைபெற்று வருகிறது என்பதை உலகம் அறிந்து தலைகுனியும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் பசுவின் பெயரால் பழங்குடியினர்
இருவர் படுகொலை
மத்திய பிரதேச சியோனி மாவட்டத்தில் உள்ள சிமாரியன் என்ற பகுதியில் சுமார் 15, 20 காவியினர் சேர்ந்து, அவ்வூர் பழங்குடி சகோதரர்கள்மீது - அவர்கள் பசுமாட்டைக் கொன்றார்கள் என்ற சந்தேகத்தின்மீது கொடுந்தாக்குதல் நடத்தி, அதில் பழங்குடியினர் இரண்டு பேர் இறந்தனர்; பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒன்று திரண்ட பஜ்ரங் தள் காவிக் கூட்டம் - பஜ்ரங் தள் என்றால், ‘வானர சேனை' என்று பொருள். சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பாட்டி என்பவர் வீட்டுக்கு இந்த வன்முறையினர் படையெடுத்துச் சென்று, அவர்கள் பசுவைக் கொன்றதாகக் கூறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இது இரவு 2.30 மணிக்கும் - 3.00 மணிக்கும் இடையில் நடந்துள்ளது!
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்; 12 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டதாம். அந்த இரண்டு பழங்குடி சகோதரர்களும் இந்தக் காவிக் கூட்டத்தினரால் அடித்தே கொல்லப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன் உ.பி.யில் குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி (அது மாட்டுக்கறியில்லை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது) என்ற பொய்க் குற்றச்சாட்டைக் கூறி, ‘அக்லக்' என்ற இஸ்லாமியரை இதேபோல் அடித்துக் கொன்றனர்!
கருநாடகத்திலும், வேறு சில மாநிலங்களிலும் ‘பசுப் பாதுகாப்பு' என்ற சாக்கில், தலித் சகோதரர்களை, சிறு பான்மையினரை இப்படி கொல்லும் வெறுப்பு அரசியல் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் மூலபலம் காரணமாக ஆங்காங்கே நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிலோ 'திராவிட மாடல்' ஆட்சி
தமிழ்நாட்டில்தான் இத்தகைய மதவெறித் தாண்ட வத்திற்கோ, வெறுப்பு அரசியலை விதைப்பதற்கோ இடந்தராத ‘திராவிட மாடல்' ஆட்சி சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெறுவதால், நிம்மதியான பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கை கிடைக்கிறது; சிறுபான்மையினரும், ஏன் பார்ப்பனர்களும்கூட தக்க பாதுகாப்புடன் இருப்பதால், தமிழ்நாடு ஆட்சியின்மீது ஏடுகள், சமூக வலைத் தளங்கள்மூலம் முதலமைச்சர்மீதும், ஆட்சி மீதும் ‘நிந்தாஸ்துதி' பாடி, அவதூறு சேற்றை வாரி அனு தினமும் எறிந்து வருவதில் தனி இன்பம் காணும் ‘சுதந்திரத்தை' அனுபவித்து வருகிறார்கள். (‘இனமலர்' ஏடே அதற்குத் தக்க சாட்சி - இன்னொரு வார ஏடும் இதற்கு இணையாகும்).
இப்போது மட்டுமா மதவெறி மாய்த்து மனிதநேயத் தோடு திகழ்கிறது தமிழ்நாடு - பெரியார் மண்? 1947 - பாகிஸ்தான் பிரிவினைமூலம் வடபுலத்தில் ஏற்பட்ட மதக் கலவர நவகாளி பலிகள் நேர்ந்த காலத்திலும் சரி, காந்தியார், கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி பெற்ற ஹிந்து மகாசபை மராத்தியரான சித்பவன் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக பம்பாய் சத்தரா, நாக்பூர் - ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையம் எதிரே என கலவரங்கள் வந்தபோதும்கூட, தந்தை பெரியார், பார்ப்பனர்கள்மீது எந்தவித வெறுப்பு அரசியலையும் விசிறிவிடவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் தமிழ்நாடு பேணியது அமைதியே!
1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடே இரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, இந்த ‘திராவிட பூமி', சுயமரியாதை மண் சகோதரத்துவத்துடனும், மனித நேயத்துடனும் அவர்களைப் பாதுகாத்து சுதந்திரமாக நடமாட வைத்தது!
சுயமரியாதை, பகுத்தறிவு கோலோச்சும் ‘திராவிட மாடல்' ஆட்சியில் ‘‘யாவரும் கேளிர்'' என்ற விருப்பு - கூட்டு - ஒருமித்த அரசியலே, காமராசர், அண்ணா, கலைஞர் முதல் எம்.ஜி.ஆர். (மண்டைக்காடு போன்ற ஒன்றிரண்டைத் தவிர) வரை நடந்து இன்று ஒப்பற்ற முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்தில் முத்திரை பதித்து, அமைதிக் கொடி உயர்ந்து பறப்பதால்தான் உலக நாடுகள் தமிழ்நாட்டை தொழில் முதலீட்டுக்கான பாதுகாப்பு மாநிலமாக பரவசத்துடன் பார்த்துப் போட்டி போட்டு இங்கே வருகின்றனர்.
வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம்!
இங்கு எல்லா மாட்டுக்கும், ஆட்டுக்கும் பாதுகாப்பு உண்டு. சகல ஜீவராசிகளுக்கும் பாதுகாப்பு கருணை யுள்ள வள்ளலார் பூமியில் உண்டு. ‘எல்லாருக்கும் எல்லாமும்', ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடு அடிப்படையில் அவை அனைத்தும் உண்டு!
வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம்!
விரும்பும் பொதுமையை சகோதரத்துவத்துடன் பரப்புவோம்!
அதுவே, ‘திராவிடத்தின்' தத்துவமும், நடைமுறையு மாகும்!
ஒன்றுபட்டு மனித ஒருமைப்பாடு காப்போம், வாரீர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.5.2022
No comments:
Post a Comment