டாக்டர் பிரித்விராஜ் செய்வது தொழில் அல்ல நண்பர்களே, மருத்துவத் தொண்டு!
உணவகத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
போச்சம்பள்ளி, மே 6 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஜி.எம்.மருத்துவமனை டாக்டர் பிரித்விராஜ் அவர்கள் செய்வது தொழில் அல்ல நண்பர்களே, மருத்துவத் தொண்டு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜி.எம். மருத்துவமனையில்
மலிவு விலை உணவகம் திறப்பு!
கடந்த 20.3.2022 அன்று பகல் ஒரு மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஜி.எம்.மருத்துவமனையில் மலிவு விலை உணவகத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமை டாக்டர்- இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவராக இந்தப் பகுதியில் அருந்தொண்டாற்றி வரக்கூடிய நம்முடைய பாசத்திற்கும், பெருமரியாதைக்கும் உரிய டாக்டர் ஜி.எம்.பிரித்விராஜ் அவர்களின் அழைப் பின்படி, போச்சம்பள்ளியில் உள்ள இந்த ஜி.எம். மருத்துவமனையில் உள் சிகிச்சை பெறக்கூடியவர் களுக்கும், மற்றும் அவர்களின் உடனாளர்களுக்கும் பயனளிக்கும் மலிவு விலை உணவகத் திறப்பு விழா என்ற இந்த சிறப்பான நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் மானமிகு தோழர் அறிவரசன் அவர்களே,
அறிமுகவுரையாற்றிய மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே, மாநில அமைப்பாளர் தோழர் இரா.குணசேகரன் அவர்களே,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர் க.மாணிக்கம் அவர்களே, இங்கே அருமையான ஓர் அறிமுக உரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் அண்ணா.சரவணன் அவர்களே,
மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம் அவர் களே, வெங்கடேசன் அவர்களே, ஞானசேகரன் அவர்களே, அரிபிரதாப் அவர்களே, மற்றும் சுற்றுவட் டாரத்திலிருந்து வந்திருக்கின்ற கழகத்தினுடைய முக்கிய மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆகிய அனைத்துத் தோழர்களே, நேரத்தின் நெருக்கடியின் காரணமாக, தனித்தனியே அவர்களுடைய பெயரை விளித்ததாகக் கருத வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு,
இங்கே வருகை புரிந்துள்ள அனைத்து இயக்கங் களைச் சார்ந்த பெருமக்களாக இருக்கக்கூடிய தோழர்கள் இராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பைச் சேர்ந்த கோவேந்தன், தாய்மார் கள், இந்த மருத்துவமனையில் சிறப்பாகப் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், இவர்கள் எல்லாவற்றையும்விட, இவர்களை இயக்குகின்றவராக இருக்கக்கூடிய அம்மா திருமதி விஜயா முருகேசன் அவர்கள்,
இவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருக் கக்கூடிய நம்முடைய பாராட்டுதலுக்கும், பெருமிதத் திற்கும் உரியவராக இருக்கக்கூடிய நவீன்குமார் அய்யா அவர்களே,
அவருடைய தாயார் அவர்களே,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சிகரமான நாள் - இனிய நாள்!
இந்த நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாள் - இனிய நாளாகும். எப்படி என்று சொன்னால், வியக்கும்படி- இங்கே எல்லோருக்கும் சிறப்பு செய்யச் சொன்னார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு சிறப்பு செய்வதை, ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதினேன். அவர்களை, டாக்டர் அறிமுகப்படுத்திய பொழுது சொன்னார்.
''50 ஆண்டுகளுக்கு முன்பு, தாதம்பட்டியில்பயிற்சி முகாம் நடைபெற்றது. அங்கே பெரிய மாந்தோப்பு இருக்கும், பெரிய வீடு இருக்கும். அதெல்லாம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அப்பொழுது நாங்கள் எல்லாம் சின்னப் பிள்ளையாக விளையாடிக் கொண்டிருந்தோம்'' என்று சொன்னார்.
'கிரிஷிப் பண்டிட்' என்று அந்தக் காலத்திலேயே பெயர் வாங்கியவர்கள். வேளாண்மைத் துறையில் சாதனை செய்தவர்கள்.
அப்படிப்பட்ட சுயமரியாதைச் சுடரொளிகள் தாதம்பட்டி கோவிந்தசாமி அவர்கள், வெள்ளைச்சாமி அவர்கள், துரைசாமி அவர்களை எல்லாம், நம்மு டைய நாகரசம்பட்டி அய்யா சம்பந்தம் அவர்களு டைய தந்தையார் சுந்தரம் அவர்கள்தான் அறிமுகப் படுத்தி வைத்தார். அதேபோன்று, விசாலாட்சி அம்மா.
தந்தை பெரியாரின்மேல்...
இவர்களுக்கெல்லாம் அய்யாவின்மேல் ரொம்பப் பற்று. அவரைப் பார்த்தவுடன் ஒரு மின்சார ஈர்ப்பு - எல்லோருக்கும். அதேபோன்று, அவருடைய அன்பு மிகப்பெரிய அலாதியானது.
ஒருமுறை சுந்தரம் அவர்கள், ''எங்கெங்கோ பயிற்சி முகாம் நடத்துகிறோம் என்று சொல்கிறீர்களே அய்யா, இங்கே மாந்தோப்பு நிழலில் நடத்தினால் நன்றாக இருக்குமே!'' என்று சொன்னார்.
அதன்படி பயிற்சி முகாம் அங்கே நடைபெற்ற பொழுது, அய்யா அவர்கள் பயிற்சி வகுப்பெடுப்பார். நான் விடுதலை ஆசிரியராக சென்னையில் இருந் தேன். பயிற்சி முகாமிற்கு என்னை வரச் சொல்லி, எனக்குப் பலரை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இரண்டு, மூன்று முறை பெரியார் திடலுக்கும் அவர் வந்திருக்கிறார்.
ஒரு பெரிய ஜமீன்போன்று இருக்கும்; விருந்து உபச்சாரம் நடந்துகொண்டே இருக்கும். அய்யாவைப் பார்ப்பதற்காக சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான தோழர்கள் வருவார்கள். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்கள் 20 பேர்தான். ஆனால், நாள்தோறும் அய்யாவைப் பார்த்துவிட்டுப் போகிறவர்கள் 100 பேருக்கும் மேல் இருக்கும்.
தாதம்பட்டிக்குச் சென்றவுடன், முதலில் உபசரிப்பு - சாப்பிட்டுவிட்டு பெரியார் அய்யாவைப் பார்க்கலாம் என்பார்கள்.
''என்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொன்னீர்களே, அவர்கள் எங்கே? வரச் சொல்லுங்கள்!'' என்று தந்தை பெரியார் சொல்வார்.
''சாப்பிடுவதற்காக அவர்களை அழைத்துச் சென் றிருக்கிறார்கள்'' என்று சொல்வார் இவர்.
''ஆமாம், இங்கே வருகின்றவர்களை இவர் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார்'' என்று சிரித்துக் கொண்டே அய்யா சொல்வார்.
தாதம்பட்டி பெரியவர்கள் துரைசாமி அய்யா, கோவிந்தசாமி அய்யா, வெள்ளைச்சாமி அய்யா
அப்படி ஓர் அருமையான, மறக்க முடியாத, என்றென்றைக்கும் திராவிட இயக்க வரலாற்றில், கழக வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த குடும்பம் என்று சொன்னால், தாதம்பட்டி பெரியவர்கள் துரைசாமி அய்யா, கோவிந்தசாமி அய்யா, வெள்ளைச்சாமி அய்யா ஆகியோர் குடும் பங்கள் ஆகும்.
இதைவிட எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னவென் றால், இங்கே அண்ணா.சரவணன் சொன்னதுபோன்று, நான் போச்சம்பள்ளி நிகழ்ச்சிக்கு சென்ற முறை வந்தபொழுது, எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருந் தது - டாக்டர் அவர்களை அறிமுகப்படுத்தினார்கள். டாக்டரும், எங்களுடைய மருத்துவமனைக்கு வரவேண்டும் என்ற அப்பொழுது சொன்னார்.
வருகிறேன் என்று நானும் சொன்னேன்.
அன்று கொடுத்த வாக்குறுதியை
காப்பாற்றிவிட்டேன்!
அன்றைக்குச் சொன்னபடி என்னுடைய வாக் குறுதியையும் காப்பாற்றிவிட்டேன், எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தொழில் அல்ல நண்பர்களே;
மருத்துவத் தொண்டு!
வெயிலே தெரியவில்லை; ஏனென்றால், குளிர்ச்சி யான சூழல் - ஒரு கிராமப் பகுதியில், கட்சி வேறு பாடில்லாமல் அருமையான வரவேற்பு - இந்த சுற்று வட்டாரத்தில் மருத்துவமனையே கிடையாது என்று இங்கே நம்முடைய தோழர்கள் சொன்னார்கள்; ஆகவே, இவர்கள் செய்வது தொழில் அல்ல நண்பர்களே; தொண்டு,மருத்துவத் தொண்டு.
தொண்டு செய்வதற்கு எல்லோரும் முன்வரமாட் டார்கள். எம்.டி., அதற்கும் மேல்பட்டப் படிப்பு எல்லாம் படித்திருக்கிறார்; நல்ல அனுபவம் வாய்ந்த டாக்டர் இவர்.
நாங்கள்கூட அறக்கட்டளையின் சார்பாக மருத் துவமனைகளை நடத்துகின்றோம். அதில் ஒரு பகுதியாக, திருவாரூர், நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள சோழங்கநல்லூரில் மருத்துவமனையை தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது என்பதை இப்பொழுது உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
நிறைய விவசாயிகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள், ஏழை, விவசாயத் தோழர்கள் இருக்கின்ற பகுதி - நாகை வட்டம் கீழத்தஞ்சை மாவட்டம். அவர்கள் கழ கத்திற்கு ஆதரவானவர்கள், போராட்டம் என்றால், நிறைய அளவிற்குப் பங்கு பெறுவார்கள். கூட்டங்களுக்குச் செல்லும்பொழுது, அவர்களைக் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
பிரச்சாரத்திற்காக சென்றிருக்கும்பொழுது, ஒரு காட்சியை அங்கே பார்த்தேன். நிறைமாத கர்ப்பிணி ஒருவரை, கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து, தூக்கிக் கொண்டு சென்றார்கள்.
அவர்களைப் பார்த்து நான் கேட்டேன், ''ஏன் இப்படி கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துத் தூக்கிக் கொண்டு போகிறீர்கள்?'' என்று.
''இங்கே பேருந்து வசதி அதிகம் கிடையாது; காலையில் ஒரு பேருந்து, மாலையில் ஒரு பேருந்து தான் வரும். மருத்துவமனையும் 10 மைல்களுக்கு அப்பால்தான் இருக்கிறது; திருவாரூர் அல்லது நாகப்பட்டினத்திற்குத்தான் செல்லவேண்டும். இந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவரைத் தூக்கிக்கொண்டு போகிறோம்'' என்று சொன்னார்கள்.
சோழங்கநல்லூரில்
மருத்துவமனை
அதைக் கேட்டு நான் மிகவும் சங்கடப்பட்டேன். அன்று மாலையே நம்முடைய தோழர்களிடம் சொன் னேன்; உடனே இங்கே மகப்பேறு மருத்துவமனையை அறக்கட்டளையின் சார்பில் தொடங்கவேண்டும் என்று.
அந்தப் பகுதியில் உள்ளோர் இடம் கொடுத்தார்கள்; மருத்துவமனைக்கான கட்டடத்தைக் கட்டி, மருத் துவமனையையும் தொடங்கினோம்.
ஒரு சிக்கல் என்னவென்றால் நண்பர்களே, கிராமப்புற உள்பகுதியில் உள்ள அந்த மருத்துவமனை யில் பணியாற்றுவதற்கு டாக்டர்கள் வரமாட்டேன் என்கிறார்கள்.
அறக்கட்டளை சார்பாக, அரசாங்க சம்பளமே கொடுக்கிறோம் என்று சொன்னாலும், வரமாட்டேன் என்கிறார்கள்.
கிராமத்தில் உள்ள படித்த பிள்ளைகள்கூட, கிராமத்தில் தொண்டு செய்யவேண்டும் என்று விரும்புவதில்லை. நகரத்தில் பணியாற்றவேண்டும் அல்லது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும்; மேலே படிக்கவேண்டும் என்று தன்னலத்தை அவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்களே தவிர, பொதுநலத்தை அவர்கள் முன்னிலைப்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.
டாக்டர் பிரித்விராஜ்
அதற்கு மாறாக, இங்கே இருக்கின்ற நம்முடைய டாக்டர் அவர்கள் நினைத்திருந்தால், வெளிநாடுகூட சென்றிருக்கலாம்; ஆனால், அப்படியில்லாமல், எந்தப் பகுதியில் பிறந் தோமோ அந்தப் பகுதியில் மருத்துவமனையை அமைத்து, மருத்துவத் தொண்டை செய்கிறாரே நம்முடைய டாக்டர் பிரித்விராஜ் அவர்கள் - அதற்காக அவருக்கு எத்தனை முறை வேண்டு மானாலும் நன்றி சொல்லலாம்!
அதற்காக அவருடைய வாழ்விணையர், அவருடைய குடும்பத்தவர், அவருடைய சகோதரர் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்து இன்றைக்கு ஓர் அருமையான மருத் துவமனையை உருவாக்கியிருப்பது நம்முடைய நன்றிக்குரிய ஒன்றாகும்.
நாம் அவரை பாராட்டுவதோடு மட்டுமல்ல, அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
நகரத்திற்கு அவர் சென்றால், இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்; வெளிநாட்டிற்கும் சென்றிருக்க லாம். ஆனால், அப்படியில்லாமல், இந்தப் பகுதி மக்களுடைய வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு இங்கேயே இருக்கிறார்.
இதய நோய் என்றால், உடனே கவனிக்கவேண்டும்; இதய நோய் என்பது கடலைப் போன்றது; எப்படி கடலில் அலை வரும்பொழுது, கொஞ்சம் மேலே எழும்பிவிட்டால், உள்ளே இழுத்துச் செல்லாதோ, அதேபோன்று, இதய நோய் வரும்பொழுது உடனே சிகிச்சை அளித்தால், அவரைக் காப்பாற்றிவிடலாம். அதேபோன்றுதான் பக்கவாத நோய் எல்லாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்கி விட்டால், அந்த நோயாளியைக் காப்பாற்றிவிடலாம்.
அந்நோயாளிகளை அழைத்துச் செல்லவேண்டும் என்றால், மருத்துவமனைக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கும். அப்படியே அழைத்துக்கொண்டு போகும்போதுகூட, அரசியல் கட்சி கிளர்ச்சிகள் இப்பொழுதெல்லாம் அதிகம். எந்த நாட்டிலும் இல்லாத அளவில், நம்முடைய நாட்டில்தான் சாலை மறியலை கண்டுபிடித்திருக்கிறார்கள். கடலூரில்கூட சாலை மறியல் நடைபெறும்பொழுது, ஆம்புலன்சுக்கு வழிவிடாததால், இரண்டு பேர் இறந்துவிட்டார்கள். வழிவிட்டிருந்தால், அந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.
'திராவிட மாடல்' ஆட்சியின்
இல்லம் தேடி மருத்துவம்!
இதுபோன்ற அவலங்கள் எல்லாம் நீங்கவேண்டும் என்றால், திராவிட மாடல் ஆட்சி மிகத் தெளிவாக உருவாக்கியுள்ள ஒரு திட்டம்தான் இல்லம் தேடி மருத்துவத் திட்டம்.
திராவிட மாடல் ஆட்சியைப்பற்றி ஆய்வு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் உள்ள இரண்டு விஷயம் முக்கியமானது.
ஒன்று, கல்வி
இன்னொன்று மருத்துவம்.
மருத்துவக் கல்வி இதிலேயே இணைந்ததுதான்.
நீதிக்கட்சி காலத்திலிருந்து அவர்கள் குறி வைத்தது, மருத்துவக் கல்விதான்.
அதற்கு முன்பு என்ன நிலை இருந்தது என்றால், எல்லோரும் மருத்துவப் படிப்பு படிக்க முடியாது. சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவப் படிப் பிற்கே மனு போட முடியும்.
இப்பொழுது அதுபோன்று நீட் தேர்வு இருப்ப தினால்தான், அதை நாம் எதிர்த்துக் கொண்டிருக் கின்றோம்.
சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக் கல்வி என்பதை எதிர்த்துப் போராடினார்கள்; நீதிக் கட்சியின் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் அந்த முறையை நீக்கினார். பிறகு எல்லோருக்கும் மருத்துவப் படிப்பு படிக்கின்ற வாய்ப்பு வந்தது.
இந்தியாவில், வடபுலத்திலோ மற்ற இடங்களிலோ இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.
தருமபுரி மருத்துவக் கல்லூரிக்காக
திராவிடர் கழகம் போராட்டம்
தருமபுரியில், கலைஞர் ஆட்சியில் மருத் துவக் கல்லூரி கட்டப்பட்டது. அதற்கு அனுமதி கொடுக்காமல் வைத்திருந்தார்கள். அதற்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது.
பொது நிகழ்ச்சி ஒன்றில், அதிகாரி ஒருவரை சந்திக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் சொன்னார்.
கேதன்தேசாய் என்பது அவருடைய பெயர். அந்த அதிகாரி, முதலமைச்சர் கலைஞரை அரை மணிநேரம் காத்திருக்க வைத்தார். அருகிலிருந்து அமைச்சர்கள் எல்லாம் கோபப்பட்டார்கள். உடனே கலைஞர் அவர்கள், ''கோபப்படாதீர்கள், அவரிடம் நாம் அனுமதி வாங்கவேண்டி இருப்பதால், அவர் எப்படி நடத்தினாலும், நாம் பொறுத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும்; இதில் கவுரவம் பார்க்கக்கூடாது; நம்முடைய பிள்ளைகளுடைய வாழ்வு இதில் அடங்கியிருக்கிறது. தருமபுரியில், மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்குவதுதான் மிகவும் முக்கியம்'' என்றார்.
அப்படி வந்ததுதான் தருமபுரி மருத்துவக் கல்லூரி.
தருமபுரிக்குச் செல்லவேண்டும் என்ற நிலையை விட்டுவிட்டு, கிருஷ்ணகிரிக்குச் செல்லவேண்டும் என்ற நிலையை விட்டுவிட்டு, இன்றைக்குப் போச்சம்பள்ளி சந்தையில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உடனே ஜி.எம். மருத்துவ மனைக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு நல்ல சொல்லாக்கம் 'உடனாளர்கள்!'
இந்த சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்காக ஓர் அருமையான மருத்துவமனையைக் கட்டி யிருக்கிறார். இங்கே வருகின்ற நோயாளிகள், நோயாளிகளுடன் கூட வருகின்றவர்கள் உண விற்கு என்ன செய்வார்கள்?
ஒரு நல்ல சொல்லாக்கத்தை சொல்லியிருக் கிறார், அதற்காக அவரைப் பாராட்டவேண்டும்.
மருத்துவமனையில் உள்சிகிச்சை பெறு
பவர்கள்; அவர்களின் 'உடனாளர்கள்' என்று சொன்னார்.
அட்டண்டர் என்ற வார்த்தைக்கு 'உடனா ளர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். மருத்துவத்தை மட்டும் சொல்லவில்லை; தமிழையும் சொல்லிக் கொடுக்கிறார்.
'உடனாளர்கள்' என்ற சொல் எனக்குப் புதிய சொல்தான். 'விடுதலை'யில் இனி அந்த சொல் லைப் பயன்படுத்துவோம். நாங்கள் எல்லாம் 'உடனாளர்கள்'தான்.
அவர்களுக்கென்று ஓர் உணவகத்தை மலிவு விலையில் கொடுக்கவேண்டும் என்பதற்காக இன்று அதனை தொடங்கியிருக்கிறார்.
நம்முடைய வள்ளலார் அவர்களுடைய சிறப்பு என்னவென்றால், பசிக்கு முதலில் உணவு கொடுக்க வேண்டும் என்பார்.
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்
மனிதனுக்கு அடிப்படை பிரச்சினையே பசிதான்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நகைச்சுவையாக பல விஷயங்களை சொல்வார். அதில், 'நல்லதம்பி' திரைப்படத்தில், சுதந்திரத் தைப்பற்றி சொல்வார்.
ஒருவர் 'அம்மா' என்பார்.
உடனே என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், என்ன? என்பார்.
பசிக்குது என்பார் அவர்.
அப்படியா? பசித்தால் உடனே சாப்பிடவேண்டுமே, ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் என்பார்.
நான் பிச்சைக்காரன் என்பார் அவர்.
அய்யய்யோ, அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லி 'சாப்பாடு கொடு' என்பார்.
அதுபோன்று, உணவு என்பது அடிப்படையானது. போராட்டமே வாழ்க்கை - வாழ்க்கையே போராட்டம் என்று இருக்கக்கூடிய சூழலில், உணவு என்பதுதான் அடிப்படை.
உணவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஆசை இருப்பது மனிதனுக்கு இயல்புதான். அதற்கு ஒரு எல்லையே இல்லை. அது பணமாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி.
உயிரோடு இருக்கும்பொழுது எந்தப் பதவியும் கிடைக்காதவர்கள்கூட இறந்தவுடன் சிவலோகப் பதவி, வைகுண்ட பதவி என்று வைத்திருக்கிறார்கள்.
அதேபோன்று பணம் சம்பாதிக்கவேண்டும்; நாம் பெரிய கார் வைத்திருந்தாலும், நம்மைவிட அவர் பெரிய கார் வைத்திருக்கிறாரே என்று நினைக்கிறார் கள். எவ்வளவு பெரிய வீடு கட்டினாலும், அம்பானி போன்று, அதானி போன்று நாம் இன்னும் வீடு கட்டவில்லையே என்று நினைக்கிறார்கள். ஆகவே, இதற்கு ஓர் எல்லையே கிடையாது.
ஓர் எல்லை கட்டிய ஒரே ஒரு சங்கதி உணவுதான்
ஆனால், ஓர் எல்லை கட்டிய ஒரே ஒரு சங்கதி உணவுதான். ஒருவருக்கு உணவு போடும்போது, போதும், போதும் என்று சொல்வார்கள்.
போதும் என்ற விஷயத்தை உண்டாக்கக்கூடிய ஓர் அற்புதமான, சிறப்பான ஒரு கேண்டீனை சிறப்பாக அமைத்திருக்கிறார்.
அதைவிட எனக்கு மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்றால், இதுபோன்ற ஓர் உண வகத்தைத் திறக்கவேண்டும் என்கிற உந்து சக்தி எங்கே கிடைத்தது என்பதை தொலைப்பேசியில் பேசும்பொழுது என்னிடம் சொன்னார்.
பெரியார் திடலில் உள்ள பெரியார் கேண்டீனில் நண்பர்களோடு வந்து சாப்பிட்டு இருக்கிறேன்; பெரியார் கேண்டீனில் குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் கொடுக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனை போடுவோம். லாபம் சம்பாதிப்ப தற்காகத் தான் வருகிறார்களே தவிர, குறைந்த விலையில் கொடுப்பதற்கு முன்வருவதில்லை.
ஆகவே, இந்த உணவு விடுதியை லாபம் சம் பாதிப்பதற்காகத் திறக்கவில்லை. இது நிரந்தமாக தொடரவேண்டும் என்பதற்காக, எப்படி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையை முறையாகச் செய்திருக்கிறார்கள்.
நோயாளிகளுக்கும், உடனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஓர் உணவு விடுதியாகும்.
அதைவிட அய்யா அவர்களுக்கும், எங்களுக்கும் இடையே வலுப்படுத்தக் கூடிய நிகழ்ச்சியாக நான் இதனைக் கருதுகிறேன்.
அய்யா நம்முடைய கோவிந்தசாமி அவர்களா னாலும், வெள்ளைச்சாமி அவர்களானாலும், தாதாம் பட்டி துரைசாமி அவர்களானாலும் -
கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை - எம் மிடம் மனிதநேயம்தான் இருக்கிறது என்று வாழ்ந்த வர்கள்.
இங்கே உரையாற்றிய ஒரு நண்பர் சொன்னார், மனிதனின் பகுத்தறிவுக்கு என்ன சிறப்பு என்பது குறித்து, பெரியார் அவர்கள் எளிமையாகச் சொன்னார்.
''கடவுளை மற, மனிதனை நினை'' என்றார்.
பல பேர் சொல்வார்கள், ''கடவுளை மற'' என்று பெரியார் சொல்கிறாரே என்று.
''கடவுளை மற'' என்று சொன்னதோடு நிறுத்த வில்லை அவர்; ''மனிதனை நினை'' என்று சொன்னார்.
ஏனென்றால், மனிதனை மறந்துவிட்டு, கடவுளை மட்டும்தான் நினைக்கின்றான். கடவுள் சாப்பிடுகிறதோ இல்லையோ, ஆறுகால பூஜை என்று சொல்கிறார்கள். மனிதன் பட்டினி கிடப்பதைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை.
பெரியார் அவர்களுடைய கவலை - மனிதகுலத்தைப் பொறுத்தது!
ஆகவேதான், பெரியார் அவர்களுடைய கவலை என்பது மனிதகுலத்தைப் பொறுத்தது. யாரையும் சங்கடப்படுத்தக் கூடியதல்ல.
அய்யா சொன்னார்,
"ஒரு குருவி கூடு கட்டுகிறது; யாருக்குக் கூடு கட்டுகிறது? அதற்கு மட்டும்தான் கூடு கட்டும்.
ஒரு மனிதன் வீடு கட்டுகிறான்; அவன், அவனுக்கு மட்டும் வீடு கட்டிக்கொள்வதில்லை; பிறருக்கு வீடு கட்டுகிறான்'' என்றார். அவன்தான் மனிதன். மற்ற வர்களுக்கு உதவி செய்கிறான்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பதுதான் தொண்டறம். அந்த உணர்வுதான் மருத்துவம்.
வெள்ளைக்காரர்களின் காலத்திலிருந்து மருத் துவத்திற்கு என்ன பெயர் என்றால், மெடிக்கல் சர்வீஸ் என்பதுதான். மருத்துவத் தொண்டு இது.
ஆகவேதான், மிக அற்புதமான அளவிற்கு, தங்களுடைய சொந்த கிராமத்தில், கிராம மக்களுக்குப் பணியாற்றக் கூடிய அளவிற்கு, பாரம்பரியமாக அவர்களுக்குப் பெருமை உண்டாகக் கூடிய அள விற்கு, டாக்டர் அவர்களும், அவருடைய சகோதரர் அவர்களும், அவருடைய குடும்பத்தினரும் அனை வரும் ஒன்றாக இருந்து, மருத்துவத் தொண்டை செய்வதோடு, மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு என்ன தேவையோ அதை சிறப் பாக செய்து - அருமையான உணவகத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு பயிற்சி முகாம் நடத்துவதற்கு அனுமதி
அய்யா கோவிந்தசாமி, வெள்ளைச்சாமி, துரைசாமி ஆகியோருடைய பெயர் நிலைக்கக் கூடிய அளவில், தாதம்பட்டியில், இந்த ஆண்டு இறுதிக்குள், அவர்கள் எப்பொழுது சொல் கிறார்களோ, மறுபடியும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் எத்தனை நாள்கள் சொல்கிறார் களே, அத்தனை நாள்களும் பயிற்சி முகாம் நடத்துவதற்கு நானே முன்னின்று அனுமதி அளிக்கிறேன்.
இங்கே நாங்கள் வந்து தங்குவதற்கு எங்களுக்கொன்றும் பயமில்லை. ஏனென்றால், நல்ல மருத்துவமனை பக்கத்திலேயே இருக் கிறது; நல்ல டாக்டர்கள் இருக்கிறார்கள்; அதை விட சாப்பாட்டிற்குக் கஷ்டப்படாத அளவிற்கு, உணவு விடுதி இருக்கிறது.
ஆகவே, தாராளமாக தாதம்பட்டியில், 50 ஆண்டுகள் ஆனாலும், மறுபடியும் பயிற்சி முகாமை நடத்தி, இந்த உறவு, இந்தக் கொள்கை உறவு சிறப்பாக இருக்கவேண்டும்.
ஆகவே, பெரியாருடைய இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமே, கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்களும் உண்டு; கண்ணுக்குத் தெரி யாத உறுப்பினர்களும் உண்டு.
தொண்டறச் செம்மல்களுடைய பணி
தொடர்ந்து நடைபெறட்டும்!
அதுபோன்று, கண்ணுக்குத் தெரியாமலே, பெரியார் மீது பற்றுக்கொண்டவர்களாக, எப்பொழு தும் பெரியார் பற்றாளர்களாக இருக்கக்கூடிய இந்தத் தொண்டறச் செம்மல்களுடைய பணி தொடர்ந்து நடைபெறட்டும்.
எனவேதான், நம்முடைய விடுபட்ட உறவு இன் றைக்குப் புதுப்பிக்கப்படுகிறது; புதுப்பிக்கப்படுகின்ற உறவு இன்னும் வலுப்படுத்தப்படுகிறது. அதற்காக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றோம்.
எப்போதும்போல், அய்யா காலத்தில், அத்தனை தலைமுறைக்கு முன் இருந்ததை, மீண்டும் இன்றைக்கு மறுபடியும் வலுப்படுத்துகிறோம் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,
மலிவு விலை உணவு விடுதியைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த மலிவு விலை உணவு விடுதியில், 'செல்ஃப் சர்வீஸ்' என்று போட்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, உடனே டாக்டரிடம் கேட்டேன். உணவை வீணாக்கிவிடப் போகிறார்கள் என்று.
அதற்கெல்லாம் வாய்ப்பில்லை; திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறோம் என்று சொன்னார்.
நம்முடைய நாட்டில், பப்பே உணவு விருந்தில், தட்டில் எல்லாவற்றையும் வைத்துக் கொள்வார்கள்; சாப்பிட்டுவிட்டு எடுத்துக் கொள்ளமாட்டார்கள்; பார்த்தவுடன் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, கடைசியில் சாப்பிட முடியாமல் கீழே கொட்டுவார்கள்.
உணவை வீணடித்தால்
அய்யாவிற்குக் கோபம் வரும்!
அய்யா - அம்மாவோடு நாங்கள் சுற்றுப்பயணம் செல்லும்பொழுது, தோழர்கள் வீட்டில் சாப்பிட அமர்வோம் ஓட்டுநர் உள்பட அனைவரும்.
என்னுடைய துணைவியார் இங்கே வந்திருக்கிறார்; எங்களுக்குத் திருமணம் ஆன புதுசு. எல்லா வீட்டிலும் விருந்து என்றால்கூட, இவர்கள் கொஞ்சம்தான் சாப்பிடுவார்கள்.
சாப்பிடும்பொழுது, அய்யா அவர்கள் திரும்பிப் பார்ப்பார்; அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்றால், சாப்பிடுகின்ற இலையில், யாரும் மீதம் வைக்கக்கூடாது, வீணாக்கக் கூடாது என்பதுதான்.
நாங்கள் யாராவது அப்படி செய்தால்கூட, ஓங்கி அறையவேண்டிய அவசியமில்லை; அடிக்கவேண் டிய அவசியமில்லை. ''அதைக் கொடு, நான் சாப் பிடுகிறேன்'' என்பார். அது எச்சில் என்பதையெல்லாம் பார்க்க மாட்டார்.
முதலில் வைக்கும்பொழுதே வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா! இலையில் வைத்து விட்ட பின் ஏன் வீணாக்கிச் செல்லவேண்டும் என்று சொல்வார்.
ஆகவே, தந்தை பெரியார் அவர்கள், என் துணைவியார் பக்கம் திரும்பி, ''என்னம்மா?'' என்று பார்த்தவுடன்,
இவங்க, 'டபக் டபக்'கென்று சாப்பிட்டுவிடுவார்கள்.
உணவு என்பது வீணாக்கப்படக்கூடாது. ஏனென் றால், இந்த உணவிற்காக நாட்டில் பல பேர் சங்கடப்படுகின்ற அளவிற்கு இருக்கிறார்கள்.
இந்த மலிவு விலை உணவு விடுதியை சிறப்பாக ஏற்பாடு செய்த டாக்டர் அவர்களுக்கு நன்றி! இதை நன்றாக நீங்கள் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது முதல் வரவு எங்களுக்கு - இனிமேல் அடிக்கடி ஆண்டுதோறும் வரக்கூடிய அளவிற்கு இருப்போம்.
எப்பொழுதும் நாங்கள் உங்களுக்கு
உதவிகரமாக இருப்போம்
உங்களுடைய பணி சிறக்கட்டும். எந்த வகை யிலாவது நாங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கவேண்டும் என்றால், எப்பொழுதும் நாங்கள் உதவிகரமாக இருப்போம்.
பல கிராமங்களில் மருத்துவ முகாம்களைப் போடுங்கள்; மக்களுக்கு நோயைப்பற்றி விழிப் புணர்வை ஏற்படுத்துங்கள்; அறிவுரை கூறுங்கள்; கருத்துகளை கூறுங்கள்.
வருமுன்னர் காப்பதற்கு உரிய முயற்சிகளை செய்யுங்கள். இல்லம் தேடி மருத்துவமனை இந்த ஆட்சியில்தான் வந்திருக்கிறது. வருமுன்னர் காப்பது இந்த ஆட்சியில்தான் வந்திருக்கிறது.
எனவே, இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, உணவு விடுதியை திறந்து வைப்பதில் மகிழ்ச்சிய டைகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
No comments:
Post a Comment