அன்றே எச்சரித்தார் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

அன்றே எச்சரித்தார் தமிழர் தலைவர்

தமிழர் தலைவர் 14.2.2022 அன்றே இது குறித்து எச்சரிக்கை செய்துள்ளார். (விடுதலை 14.2.2022)

உலகம் முழுவதும் மருத்துவர்கள் ஹிப்போ கிரேட்டிக் பெயரால் எடுக்கப்படும் உறுதிமொழியை சமஸ்கிருத நூலில் காணப்படும் ‘ஷராக் ஷாபாத்' பெயரில் மாற்றமா?

எல்லாவற்றிலும் பார்ப்பனக் கலாச்சாரப் படையெடுப்பா?

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை என்ற நிலையும் நாளை வருமோ?

பார்ப்பனக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 14.2.2022 அன்று அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கை வருமாறு,

மருத்துவர்கள், நம் நாட்டில் மருத்துவக் கல்லூ ரியில் படித்து பட்டம் (எம்.பி.பி.எஸ்.) பெறுகிற பொழுது, வெள்ளைக் கோட்டை அணியும்போது, மருத்துவத்தை ஒரு தொண்டறப் பணியாகச் செய்வதுபற்றிய ஓர் உறுதிமொழியை எடுப்பது பல காலமாக இருந்துவரும் ஒன்று.

ஹிப்போ கிரேட்டிக் பெயரில் மருத்துவர்கள் உலகெங்கும் எடுக்கும் உறுதிமொழி!

கிரேக்கத்தின் பிரபல டாக்டரான ஹிப்போ கிரேட்டிக் (Hippocratic Oath) பெயரிலான உறுதிமொழி என்று அதற்குப் பெயர்.

பிரபல மருத்துவரான ஹிப்போகிரேட்டிக் கிரேக்கத்தில் 460 முதல் 377(BCE - Before Common Era)   வரை வாழ்ந்தவர். ‘மருத்துவத் தின் தந்தை' (Father of Medicine) என்று அழைக் கப்படுபவர். அவர் பெயரால் மருத்துவப் பட்ட தாரிகள் தங்களது மருத்துவப் பணி தொடங்குமுன் எடுக்கும் உறுதிமொழி, அதற்குரிய நெறிமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டியதை அவர் களுக்கு அறிவுறுத்தும் ஓர் உறுதிமொழியாகும்.

உலகமெங்கும் இந்த உறுதிமொழி, நாட்டு எல்லைகளைத் தாண்டி காலங்காலமாய்க் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

சமஸ்கிருத பாட நூலிலிருந்து கொண்டுவரப்படும் உறுதிமொழி!

ஆட்சி தங்கள் கையில் சிக்கிக் கொண்டது என்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒற்றைக் கலாச்சாரத்தை - நாட்டின் பன்மொழி, பன்மத, பன்முகப் பண்பாட்டை அழித்து - புகுத்திடும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை இதிலும் புகுத் திட, ஒரு முயற்சி உருவாவதுபற்றி 13.2.2022 அன்று சில நாளேடுகளில் வந்துள்ள தகவல், நாட்டை சமஸ்கிருத மயமாக்குகின்ற வகையில் மற்றொரு திணிப்பைப் புகுத்த நேஷனல் மெடிக் கல் கவுன்சில் (NMC)  என்ற ஒன்றிய அரசின் அமைப்பு இதனை மாற்றி - ‘ஹிப்போகிரேட்டிக் ஓத்' என்பதற்குப் பதிலாக,  ‘ஷராக் ஷாபாத்' (Charak Shapath)   என்ற ஓர் உறுதி மொழியை - மாற்றம் செய்யவேண்டும் என்று திட்டமிடு கிறார்கள். இந்த உறுதிமொழி ‘ஷராக்கா சமதி' என்ற வட மொழியான சமஸ்கிருத மொழிப் பாட நூலான பழைய கால ஏடாக இருப்பதிலிருந்து எடுக்கப் படுகிறதாம்!

இதையே சட்டமாக்க முடிவு செய்து, 14.2.2022 முதல் செயல்படுத்த   NMC என்ற நேஷனல் மெடிக்கல் கவுன்சில் முடிவு செய்து, அமல்படுத்தப் போகிறதாம்!

‘ஷராக்கா'  (Charaka)   என்பவர் நமது நாட்டு புராதன மருத்துவராம்; இந்த ‘ஷராக் ஷபாத்' நெறிமுறைப்படி, ஒரு பெண்ணை ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்க அழைத்தால், அவருடன் ஒரு ஆண் கட்டாயம் இருக்க வேண்டுமாம்! இல்லை யென்றால், ஆண் டாக்டர் பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடாதாம்; முடியாதாம்!

ஆனால், ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழியில் அப்படி ஏதும் இல்லை. (உறுதிமொழியிலேயே ஆண் கடவுளும் - பெண் கடவுளும்கூட இடம் பெற்றிருக் கிறார்கள்; நாத்திகமும் இல்லை அது).

கைப்பேசி என்பது சுதேசியா?

‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டில் இதுபற்றி வந்துள்ள ஒரு செய்தியில், ‘‘நம் தாய் நாட்டைச் சேர்ந் தவர் ‘ஷராக்கா' (Charaka) விதேசியாக ஹிப்போ கிரேட்டிக் இருக்கிறார். சுதேசியாக  ‘ஷராக்' முனிவர் இருக்கிறார்'' என்கிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். என்று பயன்படுத்தும் எழுத்து சுதேசியா? முனிவர்கள் காலத்தில் கைப்பேசியோ (Cell Phone), தொலைக்காட்சியோ  (Television)  உண்டா?

‘மனதின் குரல்' (மங்கி பாத்)  பேசுகிறாரே நமது பிரதமர், அந்த வானொலியை எந்த ரிஷி கண்டு பிடித்தார்? அந்நியன் - விதேசி என்று ஒதுக்கிவிட முடியுமா? ஸ்டெதஸ்கோப், , B.P. கருவியெல்லாம் முனிபுங்கவர்கள் கண்டுபிடிப்பா?

நம் நாட்டு ராணுவத்திற்குத் தேவையான போர் விமானங்களுக்கு - ரஃபேல் வெளிநாட்டு விமானங்களை அல்லவா விலை கொடுத்து வாங்குகிறோம். வில்லும்- வேலுமா பயன்படுத்த முனைகிறோம்?

நம் நாட்டில் இப்போது பெரிய அளவில் வைக்கப் படும் தலைவர்கள் சிலை - பெருந் தலைவர்களின் சிலைகளேகூட வெளிநாட்டி லிருந்துதானே இறக்குமதி!

நமது குடியரசுத் தலைவர், பிரதமர் பயணம் செய்யும் விமானமும், கார்களும் சுதேசிகள்தானா?

அவையெல்லாம் இருக்கும்போது ஹிப்போ கிரேட்டிக் உறுதிமொழி மட்டும் அந்நியமாகத் தெரிகிறது என்பதற்கு மூலகாரணம், அதன்மூலம் ஒரு பண்பாட்டுத் திணிப்பு -  Cultural Imposition).

மருத்துவம் படிக்க மீண்டும் சமஸ்கிருதம் வருமா?

சமஸ்கிருத மயமாக்கிடும் - ஆர்.எஸ்.எஸ். செய்திடும் ஒரே மொழி, ஒரே பண்பாடு சமஸ் கிருத கலாச்சாரத்தின் திணிப்பிற்கான திட்டத்தின் செயலாக்கம்தான் இது!

இது இப்படியே தொடர்ந்தால் எங்கே போவோம்?

நாளை, மருத்துவப் படிப்புக்கு மனு போட சமஸ்கிருதம் படித்த தகுதி மீண்டும் நுழைக்கப் பட்டால், அதிசயமோ, அதிர்ச்சியோ அடைய வேண்டாம்! மருத்துவக் கனவாளர்களே, நுகத் தடியை சுமக்கத் தயாராவீர்!

நாடு எங்கே போகிறது?

இவ்வாறு அன்றே (14.2.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- கோ.கருணாநிதி


No comments:

Post a Comment