மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 விழுக்காடு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதிலும் ஹிந்திமொழியில் ஒற்றைப்படை மதிப்பெண்களை வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்துத்துவ அமைப்புகளின் முகாம்கள் மற்றும் நல்லொழுக்கப்பாடம் என்ற பெயரில் மதவெறியை ஏற்றியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
கரோனா தொற்றுக் குறைந்த பிறகு கடந்த ஆண்டு ஜூலை முதல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் வழக்கம் போல் துவங்கி நடந்தன. மத்தியப் பிரதேசத்தின் இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதினர். இந்த தேர்வு களுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளன. இதன்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 3,55,371 மாண வர்கள் தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3,48,219 மாணவர்கள் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 60 சதவீதத்திற்கும் குறைவாக இருந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், அரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பகவத் கீதை ஒரு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் காலையும் மாலையும் அங்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் யோகா, ஆன்மீகப் பயிற்சி, கலாச்சாரப் பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.
பல பள்ளிக்கூடங்கள் பஜனை மடங்களாகவே மாறி விட்டன. உஜ்ஜைனியில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் பசுமாட்டைக் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து கேட்ட போது வகுப்பறையில் பசுமாடு இருந்தால் மாணவர்களுக்கு அறிவுத்திறன் பெருகும், அதே நேரத்தில் பசுவை மதிக்கவும் கற்றுக் கொள்வார்கள். காலையிலும் மாலையிலும் பசுவை தொட்டு வணங்கும் போது அவர்களின் மனதில் தீய எண்ணங்கள் விலகிவிடும் என்று சாமியாரும் போபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யா சிங் புதிய விளக்கம் ஒன்றைக் கூறியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் கல்வியை விட பசு மாடுகளுக்கே அதிக கவனம் செலுத்தப்பட்டது. பகலில் வகுப்பறை - இரவில் பசுமாடுகளைத் தங்கவைக்கும் மாட்டுத்தொழுவமாக மாற்றப்பட்டது. மாட்டு மூத்திரம் மற்றும் சாணி நாற்றத்தால் பல மாணவர்களின் உடல் நிலை சீர்கெட்டுவிட்டது. இதனால் பலர் பள்ளிகளுக்கு வராமல் தவிர்த்தனர். உத்தரப்பிரதேசத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் 'ஹிந்தி' பாடத்தில் 'முட்டை' வாங்கிய நிலையில் தற்போது அதே நிலை மத்தியப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளது. மதரீதியிலான மாணவர் அமைப்புகள் பள்ளிக்கல்வியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த அரசே அனுமதிக்கிறது. விளைவு இன்று பல லட்சம் மாணவர்கள் வெறும் உடலுழைப்பு அடிமைகளாக மாறியுள்ளனர். இவர்களை அப்படியே கலவரத்திற்கு பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் நோக்கம், இதற்கான வேலையைத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகவும் செய்து வருகிறது.
இது போன்ற கல்வியைத்தான் தேசிய கல்வி என்ற பெயரால் இந்தியா எங்கும் பரப்ப விரும்புகின்றனர்.
திராவிட ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் 90 விழுக்காடு வரை தேர்ச்சி பெறுகின்றனர்.
கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்குப் பசு தரிசனம், ஆன்மிகம், யோகாவின் பெயரால் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை களையும் ஊட்டினால் மாணவர்கள் கல்வியின்மீது என்ன கவனம் செலுத்துவார்கள்?
தங்கள் தாய்மொழியாகிய ஹிந்தியிலேயே ஒற்றைப் படையில் மதிப்பெண்கள் வாங்குகிறார்கள். இந்த இலட்சணத்தில் ஹிந்தியை இந்தியா முழுவதும் திணிக்கப் போகிறார்களாம்.
'வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் நோயைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
No comments:
Post a Comment