வரும் 2024க்குள், அமெரிக்காவில் 20 லட்சம் 'ட்ரோன்'கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்கிறது, அமெரிக்க விமான முகமை.ஏற்கனவே, அமெரிக்க எல்லைப் பகுதி முதல், சிறைச் சாலைகள் வரை குற்றச் சம்பவங்களுக்கு, ஆளில்லா சிறிய விமானங்களான ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
செப்., 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு ஆட்கள் உள்ள விமானங்கள் கடத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆளில்லாத விமானங்களை, மிக எளிதாக அத்தகைய தாக்குதல்களுக்குப் பயன்படுத்த முடியும் என அஞ்சுகிறார் அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.தங்கள் வான் எல்லைக்குள், அனுமதி பெறாத, சந்தேகத்திற்கிடமான வகையில் ட்ரோன்கள் பறந்தால் அவற்றை சுட்டு வீழ்த்தும் அதிகாரத்தை மாநில, நகர, கிராம நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என பைடன் கருதுகிறார்.
இதற்கான மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற ஆதரவு திரட்டி வருகிறார் அவர்.அத்துமீறும் ட்ரோன்களின் சிக்னல்களை ஜாம் செய்வது முதல், வேறு ஒரு ட்ரோனை அனுப்பி வலை வீசிப் பிடிப்பது வரை, ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை பட்டியலிட்டு மதிப்பிட்டு தரும்படி பைடன் வல்லுனர்களைக் கேட்டிருக்கிறார். இறுதிப் பட்டியலை எட்டும் ட்ரோன் எதிர்ப்புக் கருவிகளை, கிராம அதிகாரி வரை வாங்கி வைத்துக்கொள்ள அனுமதி தரவும் பைடன் யோசித்து வருகிறார்.ஆப்கானிஸ்தான் முதல் அரபு நாடுகள் வரை, தாக்குதல்களுக்கு ட்ரோன்களை பெருமளவில் பயன்படுத்திய நாடு அமெரிக்கா என்பதை பைடன் மறந்துவிட்டார் போல.
No comments:
Post a Comment