மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 42 மாநாடுகள் - 16 போராட்டங்கள்
ஆசிரியர் அவர்களுடைய பயணம் ஒன்றும் புதிதல்ல; பலமுறை பல பிரச்சினைகளுக்காக இதுபோன்ற தொடர் பயணங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது
சென்னை, மே 5 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள். மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 42 மாநாடுகள் - 16 போராட்டங்கள்; ஆசிரியர் அவர்களுடைய பயணம் ஒன்றும் புதிதல்ல. பலமுறை பல பிரச்சினைகளுக்காக இது போன்ற தொடர் பயணங்களை திராவிடர் கழகம் நடத்தி யிருக்கிறது என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எடுத்துரைத்தார்.
பிரச்சாரப் பெரும்பயண நிறைவு விழா!
கடந்த 25.04.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புப் தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவரது உரை பின்வருமாறு:
சரித்திர சாதனையை செய்துவிட்டு வந்த முதலமைச்சர்!
மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய பரப்புரைப் பயண நிறைவு விழாவில் பங்கேற்று பெருமை சேர்க்கக்கூடிய தமிழ்நாட்டின் முதலமைச்சர், தமிழர் தலைவர் அவர்களால் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ என்று பட்டம் சூட்டப்பட்ட முதலமைச்சர் அவர்களே, இந்த மன்றத்திற்கு வருகின்றபொழுதுகூட, ஒரு சரித்திர சாதனையை செய்துவிட்டுத்தான், இந்த மன்றத்திற்குள் நுழைந்திருக்கின்றார்.
துணைவேந்தர்களை, ஆளுநர் நியமிக்கக்கூடாது; தமிழ்நாடு அரசுதான் இனி நியமிக்கும் என்ற வெற்றியோடு, முதலமைச்சர் அவர்கள் பெரியார் திடலிலே முதலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வந்தார். அந்நிகழ்வில், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் பங்கேற்றார்.
நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்துப் பதிவு
எந்த நேரத்தில், எதைச் சொல்லவேண்டுமோ, எதை அழுத்திச் சொல்லவேண்டுமோ அதை அழுத்திச் சொல்லத் தவறாத முதலமைச்சர் நமது முதலமைச்சர் என்பதற்கு அடையாளமாக, திராவிடர் கழகம், திராவிட இயக்கம் நீண்ட காலமாகச் சொல்லுகின்ற நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்கின்ற நம் முழக்கத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முன்னால், நீதித்துறையில் இட ஒதுக் கீடுவேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தைப் பதிவு செய்தவர் நம்முடைய வரலாற்று நாயகர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
ஆனால், ஏடுகளைப் புரட்டிப் பார்த்தேன்; அந்த நிகழ்ச்சியிலே முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளைப்பற்றி சொல்லியிருக்கிறார். தமிழ் ஏடுகளில்கூட பல செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன, ஒன்றே ஒன்றைத் தவிர - நீதித் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொன்ன முதலமைச்சருடைய அந்த ஒரு வரி மட்டும் திட்டமிட்டு நீக்கப்பட்டு இருக்கிறதோ என்று கவலைப்படவேண்டிய ஓர் அவசியம் இருக்கிறது. அந்த நிலைமைதான் இன்றைக்கும் இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அத்தகைய பெருமைக்குரிய முதலமைச்சர் அவர்களே,
இரண்டாண்டுகள் கரோனா தொற்று - ஊரடங்குக் கட்டிப் போட்டது
நீண்ட நெடிய பயணத்தை 89 ஆம் ஆண்டிலும், யார் யாரோ தடுத்துப் பார்த்தார்கள் - 10 வயதில் - மாலை நேரம் என்றால், ஒலிபெருக்கிக்கு முன்னால் நின்றவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்.
அவரை இரண்டாண்டுகள் கரோனா தொற்று - ஊரடங் குக் கட்டிப் போட்டது. ஆனாலும், காணொலிமூலமாக நாள்தோறும் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும், அதில் அவருக்கு மனநிறைவு இல்லை. மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.
இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; இனி பொதுக்கூட்டங்கள் எல்லாம் எடுபடாது; பத்திரிகைகளைப் படிப்பதெல்லாம் இனி இருக்காது என்று சொல்கின்றார்கள்.
அதில் நாம் மாறுபடுகின்றோம். நேரிடையாக மக்களைப் பார்த்து பேசுகின்றபொழுதுதான் - தலைவர்களுக்கும் உற்சாகம் - பொதுமக்களுக்கும் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தக்கூடியதுதான் நம்முடைய இயக்கம்.
அப்படி 10 வயதில் மேடை ஏறியவரை - இரண்டு ஆண்டுகள் கரோனா தொற்று - ஊரடங்கு கட்டிப் போட்ட நிலையில்,
சொன்னார்கள், கொடுமையான வெயில் காலத்திலே இந்தப் பயணத்தைத் தொடங்குகிறீர்களே என்று சொன்ன பொழுது,
யாரும் மறுப்பு சொல்ல முடியாத ஒரு பதில்!
ஒரு பதிலை நம்முடைய தமிழர் தலைவர் சொன்னார் - அதற்கு யாரும் மறுப்பு சொல்ல முடியாத ஒரு பதிலை சொன்னார்.
தந்தை பெரியார், 95 ஆம் ஆண்டில், மூத்திரச் சட்டி யைத் தூக்கிக்கொண்டு நாடு முழுவதும் அலைந்தாரே, அதைவிட எனக்கு வயது அதிகமா என்று கேட்டார்.
கேட்டவர்கள், வாயடைத்துப் போனார்கள்.
அவ்வளவு பெரிய பயணத்தை மிகச் சிறப்பாக நடத்தி வந்து, அந்தப் பயணத்தினுடைய அருமைகளைப்பற்றி யெல்லாம் இங்கே எடுத்துக் கூறவிருக்கின்ற கழகத் தலை வர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், தமிழர் தலைவர் என்று போற்றப்பட்ட ஆசிரியர் அய்யா அவர்களே,
‘திராவிட இயக்கப் போர்வாள்’
அதேபோல, ‘திராவிட இயக்கப் போர்வாள்’ - இந்தப் பட்டத்தையும் கொடுத்தது நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோ எம்.பி., அவர்களே,
எங்கள் அமைச்சர், அப்படியென்றால், எங்கள் பகுதி அமைச்சர் - மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்களே,
வணக்கத்திற்குரிய மேயர் பிரியா அவர்களே -
இன்னும் நூறாண்டு பெரியார் வாழ்ந்திருப்பார்
தந்தை பெரியார் இருந்திருந்து, ஒரு 50 சதவிகிதம் உள்ளாட்சியிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்று பார்த் திருந்தால், இன்னும் நூறாண்டு பெரியார் வாழ்ந்திருப்பார் என்று கருத முடியும். அவ்வளவு பெண்கள் எங்கு பார்த்தாலும்.
ஆசிரியருடைய பயண நிகழ்ச்சிகளில் எல்லாம் ஏராளமான பெண் மேயர்கள் பங்கேற்ற காட்சி மறக்க முடியாத காட்சி.
அதேபோல, சென்னை துணைமேயர் மகேஷ்குமார் அவர்களே,
இந்நிகழ்வில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே,
மற்றும் இங்கே வந்திருக்கக்கூடிய மேனாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே, அருமைப் பெருமக்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலமுறை பல பிரச்சினைகளுக்காக இதுபோன்ற தொடர் பயணங்களை
திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது
இங்கே எங்களுடைய பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் சொன்னார், ஆசிரியர் அவர்களுடைய பயணம் ஒன்றும் புதிதல்ல. பலமுறை பல பிரச்சினை களுக்காக இதுபோன்ற தொடர் பயணங்களை திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது.
அசைக்கவே முடியாது - எம்.ஜி.ஆராவது - தோற்ப தாவது என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு காலகட்டத்திலே, வருமான வரம்பு ஆணை என்று ஒரு ஆணையைக் கொண்டு வந்தார்.
ஆண்டு வருமானம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் என்றால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதுதான் அந்த ஆணையின் சாராம்சம்.
எந்தப் பள்ளிக்கூடத்தில் அவர் படித்தார் என்று தெரியாது.
தேர்தலில் 39 இடங்களில் - 37 இடங்களில் தோல்வியுற்றது எம்.ஜி.ஆர். கட்சி
அந்த ஆணையை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் பயணம் - கடுமையான பயணம் - அப்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 39 இடங்களில் - 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியுற்றார் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதற்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெற்றது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியில் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது நானும் இருந்தேன்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்விகள்!
ஒரு கேள்வியை அவரிடத்தில் வைத்தேன்.
நீங்கள் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்று சொல்வது, அரசமைப்புச் சட்டப்படி தவறுதானே? என்றேன்.
யார் சொன்னா? இருக்கு என்றார்.
அடுத்த கேள்வியைக் கேட்டேன்.
ஷெட்யூல்ட் காஸ்ட், பேக்வர்ட் கிளாஸ் என்று பட்டியல் கொடுத்திருக்கிறீர்களே, அது ஜாதிப் பட்டியலா? பொருளா தாரப் பட்டியலா? என்று கேட்டேன்.
என்ன கேட்கிறீர்கள்? என்ன கேட்கிறீர்கள்? நீங்கள் எந்த பத்திரிகையில் இருந்து வந்திருக்கிறீர்கள்? என்றார்.
‘விடுதலை’ நாளிதழ் என்றேன்.
அப்படின்னா, வீரமணிக்குத்தான் தெரியும்; கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.
சமூகநீதிக்கு எதிரான ஆட்சி என்று பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்
ஏன், இந்த அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியிருக்கிறீர்கள் என்று ‘இந்து’ பத்திரிகை யின் செய்தியாளர் கேட்டபொழுது,
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்,
‘‘ஓர் இயக்கம் - அரசை சாராத ஓர் இயக்கம் - ஒரு தலைவர் - எங்கள் ஆட்சி - சமூகநீதிக்கு எதிரான ஆட்சி என்று பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்’’ என்றார்.
யார் அந்தக் கட்சி? யார் அந்தத் தலைவர்? எல்லோருக்கும் தெரியும்.
இப்படி அசைக்க முடியாதவர் என்று சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களையே, இதுபோன்ற சுற்றுப்பயணங்கள் மாற்றமடையச் செய்திருக்கிறது.
திராவிடர் கழகம் மேற்கொண்ட 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும்தான் காரணம்
இன்றைக்கு நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் தலைவர் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.
மண்டல் குழுப் பரிந்துரை -
இந்தியா முழுவதும் 42 மாநாடுகள் -
16 போராட்டங்கள் -
பிரதமர் வீட்டிற்குமுன்னால் மறியல் -
நாடாளுமன்றத்திற்கு முன்னால் மறியல் -
எங்கள் கருஞ்சட்டைத் தோழர்கள் திகார் சிறைவரை சென்றிருக்கிறார்கள்.
அதனுடைய விளைவுதான், இன்றைக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு - தமிழ்நாட்டில் மட்டுமல்ல - இந்தியா முழு வதும் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்கள் பலன் அடைகிறார்கள் என்றால், அதற்கு திராவிடர் கழகம் மேற் கொண்ட 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும்தான் காரணம்.
பெரியார் பிறந்த மண் முயற்சித்தால்,
அது கண்டிப்பாக வெற்றி பெறும்
பி.பி.மண்டல் அவர்கள், சென்னைக்கு வந்தபொழுது, இதே இடத்தில் அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தோம்.
அப்பொழுது அவர் சொன்னார், ‘‘நாங்கள் பரிந்துரை களைக் கொடுக்கலாம்; அந்தப் பரிந்துரைகள் செயல் பாட்டுக்கு வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. காகாகலேல்கர் முதல் கமிசனுக்கு என்ன கதி வந்ததோ, அதுபோன்று இதற்கும் வரலாம். ஆனால், எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது - பெரியார் பிறந்த மண் முயற்சித்தால், அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.
இதைச் சொன்னவர் யார், பி.பி. மண்டல் அவர்கள்.
ஆக, இதுபோன்ற பயணங்கள் எல்லாம் பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரியலாம். அதனுடைய சாதனைகள் என்பது மிகப்பெரியது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது, ‘‘மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்‘‘ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் ஜாதி ஒழிப்பு மாநாடுகள்
தெற்கே ஜாதிக்கலவரங்கள் ஏற்பட்டபொழுது, தமிழ் நாடு முழுவதும் ஜாதி ஒழிப்பு மாநாடுகள் நடைபெற்றன.
இப்படி சொல்லிக் கொண்ட போகலாம்.
மறைந்த தோழர் தா.பாண்டியன் அவர்கள் சொல்வார், நாடாளுமன்றத்தில் முதல் சட்டத் திருத்தம் வந்தது - அப்பொழுது பெரியார் இருந்தார். திராவிடர் கழகத்திற் கென்று ஒரு எம்.பி. இல்லை - ஒரு எம்.எல்.ஏ., இல்லை. ஆனால், தந்தை பெரியார்தானே முதல் சட்டத் திருத்தத் தைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தார் என்று சொல்வார்.
அரசாங்கம் சட்டம் போடுகிறது; அதை மக்கள் மத்தி யிலே எடுத்துச் செல்லுகின்ற பணியை - மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பணியைத்தான் திரா விடர் கழகம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய முதலமைச்சருக்கு யார் எதிரி?
பொதுவாக என்ன சொல்வார்கள், ‘‘உன்னைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், உன் நண்பன் யார்? என்று சொல்’’ என்பார்கள்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் அப்படி சொல்ல வில்லை - ‘‘உன்னைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், உன் எதிரி யார் என்று சொல்’’ - அப்பொழுதுதான் உன்னுடைய யோக்கியதை தெரியும் என்றார்.
இன்றைக்கு நம்முடைய முதலமைச்சருக்கு யார் எதிரி? என்று சொல்லுங்கள் பார்ப்போம். உங்களுக்கெல்லாம் தெரியும்.
ஒரு தேசிய செயலாளர் சொல்கிறார்,
Stalin is more dangerous than Karunanidhi என்று.
இந்த ஒரு சர்டிபிகேட் உங்களுக்குப் போதும்.
நீங்கள் எங்கே நிற்கின்றீர்கள்?
யாருக்காகப் போரிடுகின்றீர்கள்?
யாருக்காக சட்டங்களை இயற்றுகின்றீர்கள்?
என்பதற்கு மேற்கண்ட சர்டிபிகேட்தான் சான்று என்று தந்தை பெரியார் பார்வையில் எடுத்துச் சொல்லவேண்டும் என்று நான் சொல்லிக் கொள்கிறேன்.
இன்னொருவர் இருக்கிறார், சோவிற்குப் பின்னால் ஒருவர் வந்திருக்கிறார் - அது யார் என்பது உங்களுக்குத் தெரியும்.
எங்களை வழிநடத்துவது திராவிடர் கழகம் என்றார் முதலமைச்சர்!
அவர் சொன்னார்,
‘‘ஸ்டாலின் நல்லவர்தான்; வீரமணியிடமிருந்தும், தி.க. விடமிருந்தும் கொஞ்சம் விலகியிருந்தால் நல்லது’’ என்றார்.
அதற்கு நம்முடைய முதலமைச்சர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
‘‘நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி - எங்களை வழிநடத்துவது திராவிடர் கழகம்‘‘ என்று சொன்னார்.
ஆக, எதிரிகளுக்குப் பதிலடி!
இந்த இயக்கமே அப்படித்தான் - எதிர்ப்பிலே வளர்ந்த இயக்கம்!
அந்த முறையில்தான் இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எதிர்ப்பிலே, வெற்றிக்கொடியை நாளும் நாட்டிக் கொண்டிருக்கின்றார் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
முக்கியமாக, நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு மிகப்பெரிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அவர் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆகின்றன.
நாங்களும் கூகுளில் எல்லாம் தேடிப் பார்த்தோம். எந்தப் பத்திரிகையிலாவது ஒருவர் 60 ஆண்டுகள் ஆசிரி யராக இருந்திருக்கிறாரா? என்றால் இல்லை.
‘விடுதலை’யினுடைய ஆசிரியராக
60 ஆண்டுகள்!
இவர் ஒருவர்தான் ‘விடுதலை’யினுடைய ஆசிரியராக 60 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ண பிள்ளை தெருவில் இருந்த ‘விடுதலை’ அலுவலகத்தில், தந்தை பெரியார் அவர் கள், நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு குறைந்த வயது அப்பொழுது - அவருடைய தோளைப்பற்றி, ஆசிரியர் அவர்களை நாற்காலியில் அமர வைத்த பெருமை - அந்தப் பேறு - நம்முடைய ஆசிரியரைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது.
இன்னொன்றையும் சொன்னார் -
‘விடுதலை’யை, வீரமணியிடம் ஏகபோகத்தில் ஒப் படைக்கிறேன் என்று சொன்னார்.
60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள்
அந்த ஆசிரியர் அவர்கள், ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, திராவிடர் கழகம் ஒரு முடிவெடுத்து இருக்கிறது. 60 ஆயிரம் விடுதலை சந்தாக்களைக் கொடுப்பதென்று முடிவெடுத்திருக்கிறோம்.
இங்கே வந்திருக்கின்றவர்கள் நினைத்தால் முடியும்.
‘விடுதலை’ சந்தா ‘விடுதலை’க்காக அல்ல!
‘விடுதலை’ ஏட்டிற்காக அல்ல!
நாட்டு மக்கள் விடுதலைக்காக ‘விடுதலை’ இருக்க வேண்டும்!
தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம்!
‘விடுதலை’ப் பணிமனையை திறந்து வைக்கும்பொழுது, குன்றக்குடி அடிகளார் சொன்னார், ‘‘தமிழன் இல்லம் என்ப தற்கு அடையாளம், அங்கே விடுதலை இருக்க வேண்டும் என்பதுதான்’’ என்று சொன்னார்.
அதை இந்த நேரத்தில் நான் நினைவூட்டக் கடமைப் பட்டு இருக்கிறேன்.
‘விடுதலை’ என்ன செய்யும் என்பதுபற்றி அவர்களுக்குத் தெரியும்
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதலமைச்சரான வுடன், அவர் போட்ட இரண்டாவது கையெழுத்து, அரசு நூலகங்களில் போடப்படுகின்ற ‘விடுதலை’யை நிறுத்து வதற்கான கையெழுத்துதான்.
அவர்களுக்குத் தெரியும் - ‘விடுதலை’ என்ன செய்யும் என்பதுபற்றி அவர்களுக்குத் தெரியும்.
ஆகவே, அதையும் முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு இந்த நேரத்தில் நான் கொண்டுவர விரும்பு கின்றேன்.
நீங்கள் நம்பும் அரசியலை பெருமைப்படுத்துங்கள். 30 தோழர்கள் கடுமையான முறையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கே நீங்கள் வந் திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்களுடைய ஆயுளும் நீளட்டும் -
ஆட்சியும் நீளட்டும்!
நீங்கள் அய்ந்தாண்டுகள் அல்ல - இன்னும் பல அய்ந்தாண்டுகள் ஆண்டு - தந்தை பெரியார் விரும்பிய அந்த லட்சியத்தை முடிக்கின்ற வரை - உங்களுடைய ஆயுளும் நீளட்டும் - ஆட்சியும் நீளட்டும் என்று கூறி, விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment