வங்காளத்து சூத்திர விதவைப் பெண் எதிர்கொண்ட தடைகளும், சாதனைகளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

வங்காளத்து சூத்திர விதவைப் பெண் எதிர்கொண்ட தடைகளும், சாதனைகளும்!

(வங்காளத்தில் பெரியார் இருந்திருந்தால் சூத்திர விதவை இராஷ்மோனியின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றிருக்கும்) 

ஒரு "சூத்திர மீனவப் பெண்" உழைப்பால் உயர்ந்து செல்வக் கொழிப்பில் திளைத்தார். அவர் ஆன்மீகத்தில் வீழ்ந்து கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். விளைவு - அவர் கட்டிய கோயிலில் அவர் பிரசாதம் கொடுக்க முடியவில்லை. கோயில் பார்ப்பனர்களுக்குக் கை மாறியது. இந்த சோகத்தைச் சித்தரிக்கும் கட்டுரை இது.

இந்திய ஒன்றியத்தின் நாட்டுப் பாடலில் திராவிடம், வங்காளம் என்ற சொற்கள் மாநிலங்களின் சிறப்பை விளக் கும் வகையில் இசைக்கப்படுவதை கேட்டு மகிழ்கிறோம். கல்கத்தா பெருநகர் கங்கையாற்றையும், வங்காளக் கடலை யும் தன் வளத்திற்கு துணையாக்கிக் கொண்டு முக்கியத் துவம் பெற்ற நிலப்பகுதியாக விளங்குகிறது.

வங்காளத்தின் சிறப்பு

இம்மண்ணில் தொழில்வளம் தழைத்து வருகிறது, பல்கலைச் சிறப்புகள் தலைதூக்கியுள்ளன. இலக்கியங்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஏற்றுமதி இறக்குமதிக்குக் குறை யேதும் இல்லை. சமயத்திற்கு சத்துணவு வழங்கி வலிமை யோடு நடைபோடுகிறது. சமயத்தின் கருவாக ஜாதி வளர்ந்து வருகிறது. காவல் தெய்வமாக காளியும் மக்கள் களிப்புக்காகவும், காட்சிக்காகவும் துர்கா தெய்வமாக துதிக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்த சிந்தனைகளும் சிற கடித்து பறக்கின்றன.

வங்காளம் பல்வேறு மனித சமுதாயமாக காட்சியளிக் கிறது. முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஆர்மேனி யர்கள் வணிகத்திற்காக குவிந்தனர். யூதர்கள் புகலிடம் தேடி வங்காளம் புகுந்தனர். ஆங்கிலேயர் வணிகத்தையும் செல்வாக்கையும் பெருக்க ஆர்வம் கொண்டனர்.

இத்தகைய மாநிலத்தில் தனியொருவரின் ஆளுமை யையும் சாதனையையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அதிலும் நால்வருண சமூக அமைப்பில் கீழ்நிலை சூத்திரர் என்று முத்திரைப் பதிக்கப்பட்ட ஒரு பெண் தன் சமூகத்தின் நலம் காக்க மேற்கொண்ட போராட்டங்கள், அவரை ஒரு தொண்டு உள்ளம் படைத்த பெண்ணாக பெருமைப்படுத்தப்படுகிறது. உயர் ஜாதியினரால் உதா சீனப்படுத்தப்பட்ட போதிலும் எழுச்சியுடன் அதனை எதிர்கொண்டு புரட்சிப் பெண்ணாக வலம் வந்தார்.

மீனவரினத்து ராஜ்சந்திரதாஸ், இராஷ்மோனி

வங்காளத்தில் ‘பெலியகட்டா’ என்ற பகுதியில் ஒரு கால்வாய் உள்ளது. அது கங்கையாற்றுடன் இணைகிறது. ஒரு காலத்தில் இந்த கால்வாயில் மக்களையும் வணிக பொருள்களையும் படகுகளில் எடுத்துச் சென்று வந்தனர். இன்று அப்பகுதியில் பொருள்கள் விற்பனையாகும் கடைகள் நிறைந்து ‘ராணி பெலியகட்டா’ என்ற பெயருடன் காணப்படுகிறது.

இந்த பெலியகட்டா கால்வாய் ஒட்டியப் பகுதியில் தான், ராஜ்சந்திராதாஸ், அவருடைய மனைவி இராஷ்மோனி யுடன் வசித்து வந்தார். இவர்கள் கைபர்த்தியா என்ற சூத்திர மீனவர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மூங்கில் கழிகளை கால்வாயில் படகு மூலம் அனுப்பி பொருளீட்டி வந்தனர்.

சந்திராதாஸ் அத்துடன் மஸ்லின் துணி, புணுகு ஆகிய பொருள்களையும் நீர்வழி ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தி வந்தார். இப்பொருள்களை சேமித்து வைக்க கிடங்குகள் அமைக்க நிலம் வாங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வணிகத்திற்கு கால்வாய்களே பெரிதும் பயன்பட்டன.

சந்திரதாஸ் உழைப்பு

தாஸ் சிறிது காலத்திற்குப்பிறகு மேலும் நிலங்களை வாங்கினார், சொத்துக்களையும் சேர்த்தார், தன் குடும் பத்தை தொழில் முனைவோர் என்ற நிலையிலிருந்து நிலக் கிழார் குடும்பம் என்ற நிலைக்கு உயர்த்தினார். 

வங்காளத்தில் 18ஆம் நூற்றாண்டில் கிராமியப் பகுதி களில் நிலவுடைமை, நிலக்கிழார்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது.  அடுத்து வந்த நூற்றாண்டில் இவரு டைய முன்னேற்றம் மேம்பட்டு மேற்குடி மக்கள் என்ற தகு தியுடன் முன்னிலை வகித்தனர். அத்தகையோர் ஆங்கி லேய கிழக்கிந்திய கம்பெனியுடன் வர்த்தக பங்குதாரராக இருந்தனர். அதன் மூலம் செல்வந்தராயினர். அந்தச் செல் வத்தைக் கொண்டு தாழ் நிலையில் வாழும் நிலக்கிழார் களின் நிலங்களை வாங்கி வந்தனர். இந்த புதிய செல்வாக்கு மக்கள் கல்கத்தாவில் ஒரு தனித்த வட்டத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் உயர் ஜாதி குடும்பங்கள் தோன்ற காரணமா யினர். வரலாற்று ஆசிரியர் எஸ்.என்.முக்கர்ஜி 1993இல் அவர் எழுதிய நூலில் பார்ப்பனர்கள், காயஸ்திகள், பைடியா போன்ற ஜாதிப் பிரிவினர் சந்திரதாஸ் போன்ற சூத்திரர்களை செல்வ உயர்நிலை ஜாதிக் கூட்டத்தினருடன் சேர்த்துக் கொள்ள தயாராகவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஹுக்லி நதியில் படித்துறைகள்

ஹுக்லி நதிக்கரை கல்கத்தா மக்களின் அன்றாட வாழ்க்கையோடு புனிதத் தன்மை நோக்கில் இணைந் திருந்தது. எனவே ஹுக்லி நதிக்கரைகள் இந்து உயர் ஜாதி செல்வர்களின் நன்கொடைகளை ஈர்க்குமிடமாக வளரத் தொடங்கின. நதிக்கரையை ஒட்டி நதியிலிறங்க வசதியான படிக்கட்டுகள் அமைத்து மக்கள் குளிக்கவும் ஈமக்காரி யங்கள் நடத்தவும் வணிக படகுப் போக்குவரத்திற்கு வசதியாக அமைக்கப்பட்டன. இந்த வேளையில் இராஷ்மோனியின் ஆலோசனையின் பேரில் கணவர் ராஜ்சந்தரதாஸின் பார்வை ஹுக்லி நதிக்கரைப் பக்கம் திரும்பியது. தானும் தன்னுடைய ஆளுமையை மேம் படுத்த ஹுக்லி நதிக்கரை சிறந்த இடமென்று கருதினார். அதன் விளைவாக சிற்பங்களுடன் கூடியத் தூண்களுடன் புகை, மாசுகாற்று வெளியேறும் வகையில் மரத்திலான கூரையமைத்து, கூண்டுகளையும் அமைத்தார். அகலமான படிக்கட்டுகளுடன் பாபு ராஜசந்திரதாஸ் என்ற படித்துறை உருவெடுத்து அதைத்தொடர்ந்து ‘அகிரிடோலா’ என்ற இரண்டாவதுப் படித்துறையை தாஸ் குடும்பம் கட்டியது.

கல்கத்தாவின் வரலாற்றுத் தொடர்புடைய 42 ஹுக்லி படித் துறைகளில் தாஸ் குடும்பத்து இரண்டு துறைகளிலும் மக்கள் கூட்டத்தைத் சுறுசுறுப்பாக காண முடியும்.

இராஷ்மோனியின் அனுபவ முதலீடு

கெட்ட வாய்ப்பாக ராஜ்சந்திரதாஸ் அவருடைய முதல் படித் துறையை கட்டிய ஆறாவது ஆண்டில் இறந்து விட்டார். நல்ல செல்வ வளத்துடன் வாழ்ந்த தாஸின் குடும் பத்துச் சொத்தை தற்போது இளம் விதவையான இராஷ் மோனி கையிலெடுத்து நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற் பட்டது. இராஷ்மோனி அடுத்த 30 ஆண்டுகள் தன்னுடைய குடும்ப தொழில் அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவினாலும் ஒரு வலிமை மிக்க பெண்மணியாக செயல்பட்டார். அத்துடன் நீதிமன்ற வழக்குகளையும் ஆணாதிக்கத்தையும் திறமையுடன் எதிர்கொண்டார்.

இரவீந்திரநாத் தாத்தாவின் சொத்து

கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரக நாத் தாகூர் தன் கணவர் தாஸிடமிருந்து பெற்ற கடனுக்கு ஈடாக அவரின் மதிப்புமிக்க இரண்டு சொத்தை விட்டுக் கொடுக்க செய்து தன் சொத்தின்மதிப்பை உயர்த்திக் கொண்டார். செல்வாக்கும் புகழும் பெற்ற  தாகூர் குடும்பத்துச் சொத்தை அந்த காலத்தில் பெற்றது ஒரு சாதனையே! இராஷ்மோனி பயிற்சிப் பெற்ற தனி இராணுவத்தையும் தனக்குதவியாக வைத்திருந்தார். தனக்குத் தொல்லை கொடுத்த நிலக்கிழார் களுக்கு எதிராகவும் பிரிட்டீஷ் தோட்டப்பயிர் உரிமையா ளர்களுக்கும் எதிராக ஆயுதம் தாங்கத் தயங்கியதில்லை.

ஆங்கிலேயருடைய சட்டத்தைக் கொண்டே கிழக் கிந்திய கம்பெனிக்கு எதிராக நடத்திய வழக்கில் வெற்றிப் பெற்றார். அதே நேரத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொள்ள தயங்கியதில்லை. 1857இல் நடந்த முதல் “விடுதலைப் போர்” கலவரத்தின் போது பல இந்திய அய்ரோப்பிய வியாபாரிகள் கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து பங்கை விற்க வந்தபோது இராஜ்மோனி அம்மையார் அவற்றை மிகவும் குறைந்த விலையில் வாங்கினார். கலவரம் முடிந்த பிறகு அதன் மூலம் பெரும் லாபத்தை பெற்றார்.

தொண்டுள்ளம்

தன் வாழ்நாளில் ஹுக்லி நதிக்கரையில் படித்துறை கட்டுவதற்குப் பொருளுதவி செய்து வந்தார். கணவர் இறந்தப் பிறகு 9 படித்துறைகளை கட்டவும் புதுப்பிக்கவும் செய்தார். மக்களிடையே இது பெரும் பாராட்டைப் பெற்று தந்தது.

ஆண்கள் ஆதிக்கமிகுந்த ஆசாரம் தழைத்திருந்த இந்து சமுதாயத்தில் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விதவை இந்த அளவிற்கு செல்வாக்கும், மதிப்பும் பெற்று இருந்தது வியப்புக்குரிய ஒன்று.

அந்த அம்மையாரின் பொதுத் தொண்டையும் துணி வையும் எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியொன்றை காண்போம். வங்காள மாநிலத்தில் 1840இல் மீனவ சமுதாயத்தில் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய சூழ்நிலையொன்று ஏற்பட்டது. வணிக நோக்கத்தோடு செயல்பட்ட கிழக்கிந் திய கம்பெனிக்கு கங்கை நதியின் மேல் ஆர்வம் திரும் பியது. வழக்கமாக நதியில் சிறு படகுகளில் மீன் பிடிக்கும் தொழில் நடந்து வரும். வங்காளிகள் பெரிதும் விரும்பும் ஹில்சா என்ற மீனுக்குத் தேவை அதிகமிருந்தது. பயணி களின் படகுகளுக்கு மீனவ படகுகள் இடையூறாக இருந்த தால் மீன் பிடிக்கும் படகுகளுக்கு கம்பெனி வரி விதித்தது. வருவாயை பெருக்கிக் கொண்டது. பாதிப்பிற்குள்ளான பல நூறு மீனவர்கள் கல்கத்தா சென்று உயர்ஜாதி இந்து நிலக்கிழார்களைக் கண்டு அவர்களின் உதவியை நாடினர். நிலக்கிழார்களோ தக்கனின்புரவலராக இருக்கும் கம்பெனி யாருடைய மனக்கசப்பை தேடிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் இந்து உயர் குடியினர் சூத்திர மீனவர்களுடன் முகம் கொடுத்து பேசவில்லை. மனமுடைந்துப்போன மீனவக் குடும்பங்கள் மய்ய கல்கத்தாவில் உள்ள காலம் சென்ற தொழில் துறையாளர் ராஜ்சந்திரதாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களைப் போன்று சூத்திர இனத்தைச் சேர்ந்த இராஜ்மோனியே இனி தங்களுக்கு நம்பிக்கை யென்று வந்தனர்.

இராஷ்மோனி வலையில் சிக்கிய ஆங்கிலேயர்

அடுத்து நிகழ்ந்தவை ஆங்கிலேய கால வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இராஷ்மோனி கிழக்கிந்திய கம்பெனிக்கு 10,000ரூபாய் கொடுத்து ஹுக்லி நதியில் 10 கி.மீட்டர் நீளப் பகுதியை குத்தகைக்கு எடுத்தார். கங்கை யின் கிளை நதியாகிய ஹுக்லியையொட்டி என்றும் கல கலப்புடன் இருக்கும் கல்கத்தா நகரம் உள்ளது. குத்தகை ஆவணத்தைப் பெற்றவுடன் இராஷ்மோனி நதி வில் போன்று வளைந்து வரும் பகுதியின் இரண்டு முனை களிலும் யானை கால் போன்று இரண்டு இரும்பு தூண் களைப் பதித்து சங்கிலியால் இணைத்தார். பதட்டத்திலிருந்த மீனவர்களை அழைத்து குத்தகை நீர்ப்பகுதியில் வலை வீசச் செய்தார். மீன் பிடிக்கும் சிறு படகுகள் குத்தகைப் பகுதியில் குவிந்தன. அதனால் சரக்குப் பயணிகள் போக்கு வரத்து செயல்படாத நிலைக்கு வந்தன. கம்பெனி இதைப் பற்றி இராஷ்மோனியிடம் விளக்கம் கேட்டது. நீர்ப்பகுதி யில் போக்குவரத்தால் மீன் பிடிக்கும் தொழிலில் சிக்கல் ஏற்பட்டு வருவாய் பாதித்து வருவதாக விளக்கமளித்தார். அத்துடன் பிரிட்டிஷ் சட்டப்படி ஒருவரின் சொத்து மூலம் வரும் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று உள்ளதைச் சுட்டிக் காட்டினார். இதனை கம்பெனி ஏற்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல தயாராக வுள்ளதாகவும் தீர்ப்பு வரும் வரை குத்தகை எல்லை சங்கலியை அகற்ற மாட்டேன் என்றும் கூறினார்.

மகிழ்ந்தனர் மீனவர்

வியாபாரப் படகுகளும் போக்குவரத்துப் படகுகளும் இயக்கப்படாத நிலை ஏற்பட்டது. கம்பெனி அதிகாரிகள் வேறு வழியின்றி ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதன் மூலம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான வரியை விலக்கிக் கொண்டனர். மீனவர்கள் கங்கையைத் தடையில்லாமல் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றனர். இந்த வகையில் ஒரு சூத்திர விதவை ஆங்கிலேய கம்பெனியின் நரித் தனத்தை முறியடித்து கங்கையைப் பொதுச் சொத்தமாக மாற்றி சாதனை புரிந்தார். இராஷ்மோனியின் போராட்ட உணர்வு தாழ்த்தப்பட்ட மீனவர்களின் உணர்வாக மாறியது; மீனவர் கங்கையாற்றை, ‘இராணி இராஷ்மோனி நீர்நிலை’ என்று அழைக்கலாயினர்.

ஆன்மிகப் புதைக்குழியில் இராஷ்மோனி

இராஷ்மோனி அம்மையாரின், சாதனை, சிந்தனைச் செயல், அவர் ஒரு சூத்திரப் பெண் என்ற இழிவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான வேதனையில் முடிந் தது. அவரின் ஆன்மிக அறியாமையே காரணமாயிற்று.

இராஷ்மோனி, புனித யாத்திரையாக காசிக்குச் சென்றார். ஒரு நாள் அவர் கனவில் காளி தோன்றி, ஹுக்ளி நதிக்கரையில் தனக்கு ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டதாம். அதற்கான முயற்சியில் இறங்கினார். கோயில் கட்ட முதலில் தேவைப்படுவது தகுதியான இடம். ஹுக்ளி நதிக்கரையே உகந்ததான இடம் என்று உணர்ந்து, நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த செய்தி ஹுக்லி நதியின் மேற்குப் பக்க உயர்ஜாதி நிலக்கிழார் களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் இராஷ்மோனியை சந்தித்து, சூத்திரப் பெண் கோயில் கட்டும் பணியில் ஈடுபடுவதுசரியல்ல என்று கூறியதுடன் இராஷ்மோனிக்கு, நிலம் விற்று வருபவர்களையும் எச்சரித்தனர். நதியின் கிழக்குப் பக்கம் வேண்டுமானால் போகட்டும் என்றனர்.

மூன்றினத்தவர் நிலம்

இராஷ்மோனி, நதியின் கிழக்கு பக்கமே கோயில் கட்ட தீர்மானித்தார், முதல் கட்டமாக புராட்டஸ்டென்ட் மதத்தை சேர்ந்த, ஜான் ஹெட்சி என்பவரின் குடும்பத்து நிலத்தை வாங்கினார். அதில் பயன்பாட்டிலில்லாத ஒரு தொழிற் சாலையும் உள்ளடங்கும். அடுத்து ஒரு முஸ்லீமிடமிருந்து நிலம் வாங்கினார். அதில் அவரினத்து மக்கள் உடல் புதைத்த இடமும், மதத் தலைவர் காஜி பாபா கோயிலும் குளமும் இருந்தன. மேலும் இந்து விவசாயிகள் இடத்தை வாங்கி சேர்த்தார். அதில் மாந்தோப்பும் இருந்தது. மூன்று மதப் பிரிவினரிடம் வாங்கிய மொத்த நிலம் 33 ஏக்கர் இராஷ்மோனி, நிலத்திலுள்ள தொழிற்சாலை, குளம் ஆகியவற்றைப் புதுப்பித்து பாதுகாத்தார்.

இந்த பரந்த நிலப்பரப்பில் இராஷ்மோனியின் விருப்பமான தக்ஷனிஸ்வர காளிகோயில் கட்டும் பணி துவங்கி, 100 அடி உயரத்துக்கு ஏழு கோபுரங்கள் சுற்றி அமைய செந்நிற எழில் தோற்றத்துடன் கட்டி முடிக்கப்பட்டு இன்று அது ஒரு வழிபாட்டு, சுற்றுலாத் தலமாக காட்சி அளிக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சனாதனப் பார்ப்பன இந்துக்களிடையே சூத்திரப் பெண், பகுத்தறிவுக் கொவ் வாதப் பணியை செய்தாலும், ஆற்றியது சாதனையாகக் கருதப்பட்டது.

கருநாகம் குடி புகுந்தது

இராஷ்மோனி கட்டிய கோயில் எப்படி கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த செய்தி மேலும் வியப் பளிப்பதோடு, வேதனையை அளிப்பதாகவும் உள்ளதைக் காண்போம். கோயில் கட்டும் நோக்கத்தை அறிந்த நதியின் மேற்குக் கரை நிலக்கிழார்கள் இராஷ்மோனியிடம், ஜாதி அடிப்படையில் கோயில் கட்டத் தகுதியில்லை என்று கூறினர். எச்சரித்தனர். அத்துடன் நில்லாது கல்கத்தா பூசாரிகள், சூத்திர இராஷ்மோனி கட்டிய காளி கோயில், இந்துக்கள் வழிப்படத்தக்கக் கோயிலாக அங்கீகரிக்க முடி யாது என்று கூறினார். ஒரு சூத்திரப் பெண் தெய்வத்துக்கு பிரசாதம் வழங்குவதை ஏற்க முடியாது என்றும் கூறினர். இந்த எதிர்ப்பு, இராஷ்மோனியைப் பெரிதும் கலக்க மடையச் செய்தது.

சூத்திரர் கட்டிய கோயிலை, ஒரு பார்ப்பன பூசாரிக்குக் கொடையாக வழங்கி விட்டால், அவர் கடவுள் சிலையைப் பிரதிஷ்டை செய்வார். அதன் பிறகு அந்த கோயில் வழிபாட்டுக்குத் தகுதியாகி விடும் என்று புனித நூல்கள் கூறுவதாகக் கூறினர். அந்த வேளையில் ராம்குமார் சட்டோபாத்தியாயா என்ற படித்த ஏழை பார்ப்பனர் கல்கத்தாவிலிருந்து வந்தார். தன் முயற்சி வீண்போகக் கூடாது என்று இராஷ்மோனி கருதி தன் காளி கோயிலையும் மொத்த நிலத்தையும் சட்டோபாத்தியாவுக்குக் கொடுத்தார்.

இவர்தான் இராமகிருஷ்ண பரமஹம்சர்

பூசாரி சட்டோபாத்தியாயா கடவுள் சிலைகளை கோயிலில் வைத்தார். 1855ஆம் ஆண்டு கோயில் திறப்பு விழா நடைபெற்றது. சட்டோபாத்தியாயா கோயில் வளாகத்திலேயே குடியேறி பூசாரி வேலையை செய்து வந்தார். சிறிது காலம் சென்று 18 வயதைக் கடக்காத அவரின் சகோதரரை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். அவர் பெயர் கடாதர்  (Gadadhar)  அவரைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் சுப்ரியா பணிக்வால், ரூப் குமார் பன்யா, அரசு ஆவண அடிப்படையில் கூறுகையில், இளைஞர் கடாதர், துவக்கத்தில் ஒரு சூத்திரப் பெண்ணுக்குப் பணியாற்றுவதில் தயக்கம் காட்டியதுமல்லாமல், அம்மையார் கோயில் பிர சாதத்தை உண்ணவும் மறுத்தார். இந்த பிடிவாத குணமும், ஆச்சாரமும் கொண்ட பார்ப்பன இளைஞன் பிற்காலத்தில் இராஷ்மோனியுடன் இணைந்து ஆன்மிகப் பணியில் இணைந்து மாற்றமடைந்து, இந்தியாவின் இந்து தத்துவ, மறையியலை (Mystic)  வாழ்வாகக் கொண்டவர்களுள் ஒருவரான இராமகிருஷ்ண பரமஹம்சராக அறியப் பட்டார்.

இன்று தக்னிஷ்வர் படித்துறை கோயில் தினமும், குறிப்பாக வார கடைசி நாள்களில் குவியும் மக்கள் கூட்டத் தைக் காணும் இடமாகத் திகழ்கிறது. சிலர் நெகிழி குப்பி களில் (Plastic bottles) இந்த இடத்து ஆற்று நீரை நிரப்பி எடுத்துச் செல்கிறார்கள். 19ஆவது நூற்றாண்டையும் 20ஆம் நூற்றாண்டையும் இணைக்கும் விவேகானந்த் சேது, ஒரு சூத்திர விதவைப் பெண்ணுக்குக் கடமைப் பட்டுள்ளது.

முதலமைச்சர் மம்தா வீடு

கிராஷ்மோனியின் தக்னேஷ்வர் காளி கோயிலல் லாமல், கல்கத்தாவில் அவரின் ஆவண சொத்துகள் பாழடைந்த நிலையில் பரவி உள்ளன. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சிசுடோஷ் சமன்தா, காளி படித்துறை ஹரீஷ் சட்டர்ஜி தெருவில் உள்ள 30ஏ, 30 வீடுகள் 1837இல் அம்மையாரால் வாங்கப்பட்டவை என்றும் அவை இடிந்து விழும் நிலையில் உள்ளவை என்றும் குறிப்பிடுகிறார். அந்த கட்டடம் தான் அம்மாநில முதலமைச்சர் மம்தா அவர்கள் வசிக்கும் வீடு (இராஷ்மோனிஅவர்களின், துணிவு, தொண்டு, உணவைப் போற்றும் வகையில் அங்கு வசிக்கிறாரோ?)

வரலாற்றில் மறைக்கப்பட்டது

உயர் ஜாதி ஆண் சீர்திருத்தவாதிகளான வங்காளத்து, ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யா சாகர், ராமகிருஷ்ண பரம்மஹம்ர்,  விவேகானந்தர் போன்றோரை அறிஞர்களாக காட்டும் வகையில், 19ஆம் நூற்றாண்டின் சக்தி வாய்ந்த பெண்ணான இராஷ்மோனி வரலாற்றில் ஒதுக்கப்பட்டவராக ஆக்கப்பட்டது சிந்திக்க வேண்டிய ஒன்று.

நன்றி:: ‘The Hindu Magazine’ (2.6.2021)

தமிழாக்கம்: மு.வி.சோமசுந்தரம்

No comments:

Post a Comment