"மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டினப் பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிக் கொண்டு வீதியுலா செல்வது வழக்கம். இந்த நிலையில் மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த ஆண்டு இந்த மாதம் (மே) 22-ஆம் தேதி பட்டினப் பிரவேசம் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, பட்டினப் பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள 2022-ஆம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல். இதனால் திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியினை தடைசெய்திடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது."
என்ற செய்தி இன்றைய ஏடுகளில் வெளி வந்துள்ளது.
21ஆம் நூற்றாண்டிலும் மனிதனை மனிதன் சுமப்பதா?
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மனிதனை மனிதன் சுமக்கும் - மனித உரிமைக்குக் கேடான ஒரு செயலை எப்படி அனுமதிக்க முடியும்? மதத்தின் பெயரால் நடந்தாலும் சரி, வேறு அடிப்படையில் நடந்தாலும் சரி இது போன்ற அடிமை முறைகளை அனுமதிக்க முடியாது. அதிலும் அரசு தலையிட்டு அனுமதி மறுப்பது - அரசின் தலையாய கடமையாகும். அந்தக் கடமையை மிகச் சரியாக செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை வெகுவாகப் பாராட்டுகிறோம்.
திருப்பனந்தாளில் என்ன நடந்தது?
இதே தருமபுரம் ஆதினகர்த்தர் - திருப்பனந்தாளில் பட்டினப் பிரவேசம் என்ற பெயரில் பல்லக்கில் செல்லத் திட்டமிட்ட போது திராவிடர் கழகம், அதனை எதிர்த்து அணி திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது - ஆதினகர்த்தர் பல்லக்கில் ஏறாமல் நடந்து செல்லவில்லையா? (12.2.2020)
அப்பொழுது இருந்த அந்தப் மனப்பான்மை இப்பொழுது எங்கே சென்றது?
கை ரிக்ஷாவை ஒழித்த மாநிலம் இது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் இது நடந்தது.
மனிதனை மனிதன் இழுத்துச் செல்லுவது மனித உரிமைக்கு எதிரானது - மனித வதை என்பது தானே இதற்குக் காரணம்.
மதமும், பணமும் படுத்தும் பாடா?
பணமும், மதமும் கைகோர்த்துக் கிடப்பதால் அதன் அகங்காரத்தை ஆதின கர்த்தர் வெளிப்படுத்தும் அதீத செயல் தானே இது!
தருமபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த பட்டினப் பிரவேசம் 55 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகத்தின் முயற்சியால் போராட்ட அறிவிப்பால் நிறுத்தப்பட்டது.
கழகத்தின் முயற்சிக்கு (மறைந்த) தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அறிவார்ந்த முயற்சியை ஏற்று தருமை ஆதின கர்த்தரும் பல்லக்கில் செல்லும் அந்தப் ப(வ)ழக்கத்தைக் கை விட்டார். இந்நிலையில் இப்பொழுது பட்டம் சூட்டிக் கொண்ட திருவாளர் முருகன் (இவரின் உண்மைப் பெயர் இதுதான்) மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அமர்ந்து சவாரி செய்ய ஆசைப்படலாமா?
சிறீரங்கத்தில் - அர்ச்சகப் பார்ப்பனர்களை அவர்களின் வீட்டிலிருந்தும், கோயிலிலிருந்தும் தூக்கிச் செல்லும் வழக்கத்தைத் திராவிடர் கழகத்தில் போராட்டத்தால் நிறுத்தப்படவில்லையா? நீதிமன்றமும் அதனை ஏற்கவில்லையா? கும்பகோணத்தில் விஜயதசமியின் போது பார்ப்பன அர்ச்சகர்களை சுமந்துசெல்லும் முறை திராவிடர் கழகப் போராட்டத்தால் நிறுத்தப்படவில்லையா? (தனியே காண்க)
சங்கராச்சாரியார்களும் கைவிட்டனரே!
சங்கராச்சாரியார்கள் ஒரு கால கட்டம் வரை மனிதர்கள் சுமக்க பல்லக்கில்தான் பயணம் செய்து வந்தனர்.
ஒருமுறை - தந்தை பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அதன் வழியாகப் பல்லக்கில் (மேனா) காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்லக்கில் சென்ற நிலையில், "முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதர்கள் சுமந்து செல்ல பல்லக்கில் சொகுசாகப் பயணிக்கலாமா? இவரெல்லாம் துறவியா?" என்ற கேள்வியை எழுப்பினார்.
பெரியார் பேச்சைக் கேட்டு....
இதனைக் காதில் வாங்கிய சங்கராச்சாரியார் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றார். ('சக்தி விகடன்' பொறுப்பு ஆசிரியர் ரவி பிரகாஷ் கட்டுரை) அது முதல் பல்லக்கில் செல்லும் பயணமுறையைக் கைவிட்டனர் சங்கராச்சாரியார்கள். இப்பொழுதெல்லாம் சங்கராச்சாரியார்கள் விமானத்தில் தானே பறக்கின்றனர்.
பார்ப்பனர்களே இந்த முடிவுக்கு வந்து விட்ட நிலையில் நம் ஆதினகர்த்தர்களுக்கு என்ன வந்தது?
என்னதான் இவர்கள் பல்லக்கில் பயணம் செய்ய ஆசைப் பட்டாலும் 'சூத்திர' மடாதிபதிகள்தானே! சூத்திரன் என்றால் விளக்கத்தைச் சொல்லவும் முடியுமா? இதனை எதிர்த்ததுண்டா?
இராமேசுவரம் குடமுழுக்கின்போது சிருங்கேரி சங்கராச்சாரி யாருக்கு முதல் மரியாதையா? காஞ்சி சங்கராச்சாரியாருக்கு முதல் மரியாதையா என்ற சர்ச்சை ஏற்பட்ட பொழுது - 'சூத்திர' மதுரை ஆதின கர்த்தர்தானே சமரசம் செய்து தீர்த்து வைத்தார்.
மதுரை ஆதின கர்த்தரின் சீடரா!
அந்த மதுரை ஆதின கர்த்தரிடம் சீடராக இருந்தவர்தானே - இன்றைய தருமபுரி ஆதினகர்த்தர்.
அவர் காட்டிய இனவுணர்வும், ஆவேசமும் அதற்குள் மறைந்து விட்டதா?
கடல்போல் நில புலன்களும், சொத்துக்களும், குவிந்து கிடப்பதால் எதையும் செய்து விடலாம் - மற்றவர்களைவிட தாம் மிக உயர்ந்த ஆசாமி - பீடாதிபதி என்று நினைத்தால் அதனைப் பெரியார் பிறந்த மண் அனுமதிக்காது. அனுமதிக்கவே அனுமதிக்காது.
மனித வதையை அனுமதிக்க முடியாது
மடத்துக்குள் சடங்கு சமாச்சாரங்களை செய்துகொள்ளட்டும்; மக்கள் மத்தியில் "மனித வதையான" பல்லக்குச் சவாரியை சுயமரியாதையும், மனித சமத்துவமும் மானமும் உள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசு சட்டம் செய்யட்டும்!
தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள். ஏதோ அவ்வப்போது நடக்கும் - மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குச் சவாரிகளைத் தடை செய்வதை விடவும் மனித உரிமைக்கு எதிரானதும் - மனித வதையுமான இத்தகைய சவாரிகளை நிரந்தரமாக சட்ட ரீதியாகத் தடை செய்ய ஆவன செய்ய வேண்டு மாய்க் கேட்டுக் கொள்கிறோம். வற்புறுத்துகிறோம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.5.2022
No comments:
Post a Comment