பார்ப்பனர் அல்லாதோர் சன்னதிக்குள் நுழைந்ததும் முருகா நீ சாமிதானா என்கிறார்கள், நள்ளிரவில் பெண்களை கோவிலுக்குள் அழைக்கிறார்கள் - ஏன் என்றுகேட்டால் இது ஹிந்துவிரோத ஆட்சி என்கிறார்கள்.
பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் பற்றி மக்கள் கொடுக்கும் நற்சான்று.
மதுரை
மதுரை தல்லாகுளத்தில் உள்ள அய்யப்பன் கோயிலில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையைச் சேர்ந்த 36 வயதான மாரிசாமி தமிழகத்தின் முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
அவர் அர்ச்சகர் ஆன பிறகும் அவர் ஆவதற்கு முன்பும் கோவிலுக்கு வரும் கூட்டத்தை ஒப்பிடும் போது அவர் அர்ச்சகர் ஆன பிறகு கோவிலில் புத்துணர்வு வந்தது போல் உள்ளது, இது குறித்து தனியார் இணையதளம் ஒன்றில் கோவிலுக்குச் செல்லும் சிலர் கூறியதாவது: புதுபூசாரி வந்த பிறகு எங்களுக்கே எங்களுக்கான கோவிலுக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வு உள்ளது.
அவர் முன்பு இருந்தவர்களைப் போல் பூவையும் குங்குமம் உள்ளிட்டவற்றையும் தூக்கிப் போடுவது கிடையாது, நட்போடு பழகுகிறார். எந்த பூஜை தொடர்பான பணிகளைக் கூறினாலும் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் செய்துதருகிறார். இதற்கு முன்பு இருந்தவர்கள் அர்ச்சனை செய்யச்சொன்னாலே ஏதோ அவர்களது வேலையில் நாங்கள் இடையூறு செய்வதைப் போல் செய்வார்கள் என்று அந்த இணையச்செய்தியில் மதுரை தல்லாகுளம் பகுதி மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஏற்கெனவே அங்கு பணியில் இருந்த உதவி அர்ச்சகர் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றை தனதாக்கிக் கொண்டு அய்யப்பன் கோவிலில் புதிய அர்ச்சகர் சரிவர பணிசெய்யமாட்டார், என்னிடம் வாருங்கள் என்று கோவிலுக்கு வருபவர்களிடம் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார். பெரியார் அன்றே கூறினாரே எப்போது அனைத்து ஜாதி அர்ச்சகர் கருவறையில் நுழைகிறாரோ அன்று பார்ப்பானே ”கடவுள் இல்லை” என்று கூறி விடுவான்!
அதுதான் இங்கும் நடக்கிறது.
திருச்சி
திருச்சி அருகிலுள்ள வயலூரில் முருகன் கோயில் உள்ளது இங்கு 5 பார்ப்பன அர்ச்சகர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்த நிலையில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையால் புதிய அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.
புதிய அர்ச்சகர்கள் ஏப்ரல் 19, 2022 அன்று கோவிலில் அர்ச்சனை செய்ய முயன்றபோது, ஏற்கெனவே பணி யாற்றிய அர்ச்சகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். பார்ப்பன அர்ச்சகர் கார்த்திகேயன் என்பவர் பேசும் போது அர்ச்சக மரபு அழிக்கப்படுகிறது, இந்த அரசு ஹிந்து சம்பிரதாயத்தை அழித்து மாற்றுமதத்த வர்களின் திட்டமான மதமாற்றத்திற்கு ஆதரவாக செயல்படு கிறது - “மோடி அய்யா தான் எங்களைக் காப்பாற்ற வேண் டும்” என்றார்
மற்றுமொரு காணொலியில் வேறு ஜாதியைச் சேர்ந்த இரண்டே இரண்டு பேர் அர்ச்சகராக சேர்ந்ததில் இவர்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்து விட்டோம் என்கிறார்.
“முருகா நீ இருந்தா கேளுடா” - என்று கணநேரத்தில் முருகன் எங்கேடா இருக்கிறார் என்ற உண்மையைக் கூறி விட்டார். இந்த நாடே நாசமாகட்டும் என்று சபிக்கிறார். குடும்பத்தோடு சாவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார்.
வேறு ஜாதியில் பிறந்த ஒரு மனிதனை எந்தக் காரணத்தைக் கொண்டும் சகமனிதன் என்று பார்க்கவோ உணரவோ எந்த வகையிலேனும் சகித்துக்கொள்ளவோ இவர்கள் தயாரில்லை.
சேலம்
இது இப்படி என்றால் சேலத்தில் சீத்தா ராமச்சந்திரமூர்த்தி கோவிலில் நடந்த ஒரு கூத்தைப் பாருங்கள்.
கோவில்களில் அவர்கள் கூறும் ஆகமவிதிப்படி சூரியன் மறைந்த பிறகு சில நாழிகைகளில் நடைசாத்த வேண்டும், ஆனால் நள்ளிரவு 12 மணிவரை கோவிலைத் திறந்து வைத்திருக்கிறார். இரவு நேரத்தில் கோவிலில் பின்வாசல் வழியாக பெண்களை அழைக்கிறார். கேட்டால் அவர்கள் சடங்கு கழிப்பதற்கு நேரம் கேட்டு வருகிறார்கள். தீட்டு வீட்டில் இருப்பதால் அவர்கள் முன்வாசல் வழியாக வரத் தயங்குகிறார்கள். மேலும் மக்கள் அதிகம் வரும் நேரமும் அவர்கள் வருவதற்கு தயங்குகிறார்கள் ஆகவே பின்வாசல் வழியாக கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் வரச் சொன் னேன் என்கிறார்.
இதைத் தட்டிக்கேட்ட பெண் நகரசபை உறுப்பினரை அடிக்கச் செல்கிறார். அவர் அணிந்துவந்த ஆடைகுறித்து பொது மக்களிடையே பொய் சொல்லி உறுப்பினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.
இது குறித்து நகர்மன்ற உறுப்பினர் மஞ்சுளா கூறும்போது, அர்ச்சகர் கண்ணன், இரவு, 12:00 மணிக்கு மேல் வரை, கோவில் நடையை திறந்து வைத்துள்ளார். இரவு, 10:30 மணிக்கு மேல் மணி அடிக்கிறார். தற்போது தேர்வு நேரம் ஆகையால் மக்கள் தெரிவித்த புகார்படி, கவுன்சிலர் எனும் முறையில் மணி அடிக்க வேண்டாம் என தெரிவித்தேன். அவர் நீண்ட நாட்களாகவே வெள்ளி கிரீடம், கவசத்தை வைத்துள்ள அறையின் சாவியை ஒப்படைக்காமல் இருக்கிறார். இரவில் கோவில் பின்புறமாக பெண்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தார். இந்த அரிசியில் தான் பக்தர்களுக்கு பொங்கல் செய்து கொடுத்துள்ளார். மண்டப வாடகை தொகை ரசீதில் ஒருதொகையாகவும், ஆனால் கையில் வாங்கும் தொகை அதிகமாகவும் வாங்குகிறார். அதற்கு ரசீது போடுவது கிடையாது. தூய்மைப்பணியாளர்களிடமும் மோசமாக நடந்துகொள்கிறார். கோவில் குப்பைக்கூளமாக கிடக்கிறது. இதுகுறித்து, கவுன்சிலரான என்னிடம், மக்கள் புகார் தெரிவித்தனர். நான் இதை அறநிலையத்துறை கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதனை அடுத்து அற நிலையத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து அவரை பணிநீக்கம் செய்தனர் என்று கூறியுள்ளார்.
உண்மை இப்படி இருக்க தினமலர் உள்ளிட்ட பார்ப்பன நாளேடுகள் ஏதோ அவாளுக்கு எல்லாம் வானம் இடிந்து தலையில் விழுந்துவிட்டது போல் பக்கம் பக்கமாக எழுதிப் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்?
- சரவண இராஜேந்திரன்
No comments:
Post a Comment