தமிழ்நாடு அரசு கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு...

வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்

அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்;  அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு.

கிழக்குக் கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) என்ற நீள முக்கிய சாலைக்கு முத்தமிழ் அறிஞர் 'கலைஞர் கருணாநிதி சாலை' என்று பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, திரைத் துறையில் சிறந்த நகைச் சுவை நடிகரான சீரிய சிந்தனையாளர் விவேக் அவர் களை 'சின்னக் கலைவாணர்' என்று அழைப்பதுண்டு.

இரண்டையும் இணைத்து அவர் வாழ்ந்த பத்மாவதி நகரில் உள்ள தெருவுக்கு 'சின்னக் கலைவாணர் விவேக் தெரு' என்றும் பெயர் மாற்றம் - அவரது குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று அரசு ஆணை வந்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசையும், நமது முதலமைச் சரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் பாராட்டுகிறோம்.

அரசு கவனத்திற்கு ஒரு முக்கியச் செய்தி:

பெயர் சூட்டும்போது கவனிக்கவேண்டியது என்ன?

தெருக்களுக்கு, நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டும் போது, கூடுமானவரை அப்பெயர் ஓரிரு சொற்களில் அமைந்தால், அப்பெயர் நடைமுறையில் பல காலம் புழக்கத்தில் இருந்து பெயர் வைக்கப் படுபவர்களுக்குப் பெருமை சேர்க்கும்.

எடுத்துக்காட்டாக ''கலைஞர் கருணாநிதி நகர்'' என்று வைத்த பெயர் - இன்று ''கே.கே.நகர்'' என்று ஆகிவிட்டது. ஆனால், கலைஞர் வைத்த அண்ணா நகர் அப்படியே புழங்குகிறது. பேரறிஞர் அண்ணா பல்கலைக் கழகம் என்பது 'பவுட்' என்று சுருக்கி அழைக்கப்பட்டது; பிறகு நம்மைப் போன்றவர்கள் அப்போதைய எம்.ஜி.ஆர். அரசுக்கு சுட்டிக்காட்டி, சுருக்கப்பட்டு அண்ணா பல்கலைக் கழகம் என்று ஆனது.

இந்த அடிப்படையினை பெயர் சூட்டும்போது நடைமுறைப்படுத்தவேண்டும். பெரியார் போக்கு வரத்துக் கழகத்தை ஜிறிஜிசி என்று சுருக்கி விட்டனர்.

இதுபோல எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.5.2022


No comments:

Post a Comment