மயிலாடுதுறை,மே 3- தருமபுரி ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் என்கிற பெயரால் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமையை மீறுகின்ற செயலுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டு தோறும் ஆதீனகுருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி எனும் பெயரால், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் வைத்து சுமப்பது, மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமையை மீறுகின்ற செயல் என்று குறிப்பிட்டு, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறு அரசிடம் திராவிடர் கழகம் சார்பில் கோரப்பட்டது. அதன்படி, பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலலாஜி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம். இதன் ஞானபீடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தருமபுரத்தில் நடைபெற உள்ள பட்டின பிரவேச நிகழ்ச்சியின் போது, வெள்ளிப் பல்லக்கில் அமர்ந்தபடி ஆதீனம் வீதியுலா வருவார். அப்பல்லக்கை மற்றவர்கள் சுமந்து செல்வர். பாரம்பர்யத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டு வருகின்ற மனித உரிமை மீறும் இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையின்படி, மனித உரிமையில் அக்கறை உள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் தொடர்ச்சியாக களம் கண்டு வருகிறது.
கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவில், தருமபுரம் ஆதீ னத்தில் இம்மாத இறுதியில், பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பை யடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில், ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடு துறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி நேற்று (2.5.2022)உத்தரவிட்டுள்ளார்.
அதில், இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையிலும், இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 23இன் படி சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கி செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment